ஜோர்டான் ஆந்தை

உங்கள் வீட்டுப் பால்கனியில் நேற்று
ஆந்தை ஒன்று வந்ததாம். நீங்கள் அதனுடன்
பேசிக் கொண்டிருந்ததாய்த் தகவல் கிடைத்தது
உண்மையா? என்றார்கள் உள்ளே வந்தவர்கள்.

‘காபியா டீயா? என்ன குடிக்கிறீர்கள்?’ என்றேன்.
‘உங்கள் வீட்டுப் பால்கனியில் ஆந்தை
வந்தது உண்மையா இல்லையா’ என்றார்கள்.

உங்கள் கேள்வி புரியவில்லை என்றேன்
படித்தவர்தானே! ஆந்தை என்றால் புரியாதா!
என்றார் அவர்களில் ஒருவர்.

புரிந்தால் எதற்குக் கேட்கப் போகிறேன் என்றேன்.
ஆந்தை என்பது ஒரு பறவை
அதற்குக் கண்கள் நம்மைப் போல
முன்பக்கத்தில் வைத்திருக்கும் என்றார் அவர்.

எனக்கு ஞாபகம் வந்தது. நேற்று
மாலை நான்கு மணி அளவில் எனது
பால்கனியில் நீண்ட நேரம்
வெறுமனே உட்கார்ந்துவிட்டுப் பின்பு
வெருட்டென்று புறப்பட்டு
அந்தி விசும்பில் புள்ளியாய் மறைந்த ஆந்தையை.

ஆந்தை அரிய பறவை இனமென்றும்
வந்தால் தொலைபேசியில் சொல்லும்படியும்
அவர்கள் என்னிடம் கூறிவிட்டுப் போனார்கள்.

இரண்டொரு நாட்கள் நான்கு மணி ஆகியும்
ஆந்தை வரவில்லை. நானும்
ஆகாயத்தைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போனேன்
வந்தது பாருங்கள் ஒருநாள் அந்த ஆந்தை,
அதே இடத்தில் இறக்கைகளை அடக்கிக் கொண்டு
உட்கார்ந்தது. அரைமணிநேரம் ஆயிற்று.
அண்டை அயல் வீட்டார் வந்து கூடினார்கள்.
அதிகாரிகளுக்கு நான் தொலைபோன் செய்தேன்
அவர்களும் விரைவில் வந்தார்கள்
அருகிலே நின்று பார்வையிட்டார்கள்
அவர்களில் ஒரு பறவை ஞானி சொன்னார்
இந்த ஆந்தை எகிப்தில் மட்டும்தான் வாழ்கிறது
ஜோர்டான் சிரியா இஸ்ரேலிலும் உண்டென்கிறார்கள்
உயிருடன் பிடிக்கப் போகிறோம் என்றதும்
பறந்து போய்விட்டது ஆந்தை மொழி புரிந்ததுபோல.

ஆந்தையின் இரண்டு கண்களும் என் நினைவில் பதிந்தன.
இப்போது நான் வானத்தைப் புதிதாய்ப் பார்க்கிறேன்.

‘என் உளம் நிற்றி நீ’ (காலச்சுவடு, 2014) தொகுப்பிலிருந்து

சகஜீவி

ஊர்வலம் புறப்பட்ட கோவில் பெருமாளோடு
மழைக்குப் பயந்து சாமி தூக்கிகள்
அவசரம் அவசரமாக ஓடினார்கள்.

அணைந்து போன தீவட்டி ஒன்றின்
நறும்புகை வீட்டுக்குள் வந்தது.

காவிரி ஆற்றில் புனித நீராடலை
ஒத்திப் போட்டாளாம் எங்கள் பாட்டி.

அந்தப் பொழுதில் பிறந்தது யாராம்?
வேறு யாராம்? நானேதான் அது.
எங்கள் வீட்டின் எதிர்ப் பக்கத்தில் அப்போது
பன்றி ஒன்றும் குட்டிகள் ஈன்றதாம்,
வேறு சமயம் இல்லாதது போல.

எனக்குப் பிறகு தம்பி தங்கைகள்
எட்டுப் பேர்கள் வீட்டை நிறைத்தார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி விட்டு.

எங்கும் அம்மா போவதே இல்லை.
எங்கு போனாலும் பின்னே பிள்ளைகள்.

அன்றைக் கொருநாள் அனுமார் கோயிலுக்குப்
போகப் போவதாய் அம்மா சொன்னாள்
ஒருவரும் தன்னுடன் வரக் கூடாதாம்.

வீட்டில் யாரோ புதியவர் நுழைந்தார்
பள்ளிக்கூடத்து வகுப்புப் போலிருந்த
வீட்டைப் பார்த்துத் திடுக்கிட்டார்
எல்லாம் உங்கள் பிள்ளையா என்றார்.
அம்மா என்னைக் காட்டி
தங்கையின் பிள்ளை உற்சவத்துக்கு
வந்திருப்பதாய்க் கூசாமல் சொன்னாள்.

அம்மா என்னைத் தனியே மடக்கி
உளறிக் கொட்டாமல் இருக்கச் சொன்னாள்.
நானும் நிபந்தனை ஒன்றைப் போட்டேன்.
இனிமேல் என்னைப் பன்றிக் குட்டி
பிறந்தபோது பிறந்தேன் என்று
சொல்லக் கூடாதென்றேன். இசைந்தாள்
அப்புறம் ஒருமுறைகூட அம்மா
சொல்லவே இல்லை. இறந்தும் போனாள்.

விருப்போ வெறுப்போ எனக்குப்
பன்றிகள் மீது இல்லையென்றாலும்
அவற்றைப் பார்க்க நேரிடும்போது
எளிதில் எனக்குப் பார்வை
அவைமேல் படிந்தால் திரும்புவதில்லை.

‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (ஆழி, 2008) தொகுப்பிலிருந்து

ஆபத்தான நாட்கள்

ஆபத்தான நாட்களைப் பற்றி நீங்கள்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ நான் சொல்லாமலேயே அறிந்திருப்பீர்.
இருந்தாலும் எதற்கு நான் சொல்கிறேன் என்றால்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ சும்மா ஒப்பு நோக்கத்தான்.

வானரங்கள் இடம் மாறும்போது
நீங்கள் கவனித்ததுண்டா?
ஒருமுறை அவை பின்னே திரும்பிப் பார்க்கும்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ஆபத்தான நாட்களில் ஒன்று
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ தங்களைத் தொடர்கிறதோ என்னும்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ சந்தேகம் கொண்டு.

இலுப்பை மரத்தின் கிளையிலே
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஆந்தை
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ திடீரெனப் பறந்ததும் கூட
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ஆபத்தான நாட்களை அஞ்சித்தான்.
ஆபத்தான நாட்கள் வண்ணம் அற்றவை.
சுவை அற்றவை
வெப்பம் குளிர்ச்சி ஏதும் அற்றவை.
அந்த நாட்கள் பெயரும் பெறாதவை.
எந்த மாதத்திலும் அந்த நாட்கள்
இடையில் இடம் பெறக் கூடியவை.

என்றாலும் ஆபத்தான நாட்கள் தங்களை
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ அறிவிக்கத் தெரிந்தவை.
அரக்கர் நான்கு பேருடன் விபீஷணன்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ சபையை விட்டுப்போன போது
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ இராவணன் பார்த்தான். ஆபத்து
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ நாட்களின் வஞ்சக மங்கல் சிரிப்பை.

முதல்நாள் போர் நேரும் வரைக்கும்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ திரும்பத் திரும்பத் தோன்றின
ஆபத்தான நாளின் மங்கிய சிரிப்பு.

காலை நீட்டிப் படுக்கும்பொழுது
துவாரகைக் கண்ணன் பார்த்தான்
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ தனது உள்ளங்காலில்
ஆபத்தான நாட்கள் மானின் விழிகளை
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ வரைந்து கொண்டிருப்பதை.

நாட்கள் நாட்கள் என்று
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ மரியாதைப் பன்மையில்
சொல்கிறேனே ஏன் என்று
கேட்கிறீர்களா நீங்கள்.
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ஆபத்தான நாட்கள் ஒருவேளை
‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ ‍ மரியாதை விரும்பிகளாய்
இருக்கலாம் என்றுதான்.