ஒரு தாயின் குமுறல்

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்தது ஐங்குறுநூறு. இந்நூலைத் தொகுக்கச் செய்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. பாட்டுகளைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்பவர். ஐங்குறுநூறின் பாலைத் திணைப் பாட்டுகளை இயற்றியவர். ஓதலாந்தையார் என்பவர். ஆதன் தந்தை ஆந்தை என மருவியது என்பது பழையோர் கருத்து. இன்னொரு ஆந்தையாரான பிசிராந்தையாரின் பெயர் இக்காலத்திலும் பலருக்கும் தெரியும்.

ஒரு பெண் தன் பெற்றோருக்குத் தெரியாமல் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகிறாள். அவள் போன பின்பு விஷயம் தெரிந்த தாய் வருந்துவதாக அமைந்த பத்துப்பாட்டில் எட்டுப் பாட்டுகளைத் தற்காலத் தமிழ் நடையில் தந்திருக்கிறேன். சங்கப் பாட்டின் வாக்கிய அமைதியைக் கொஞ்சம் தளர்த்தியிருக்கிறேன்.

மள்ளர் கொட்டிய பறையின் ஓசைக்கு
மயில்கள் ஆடும் குன்றத்தின் மீது
மேகங்கள் பெய்து பாதை இனிதாகட்டும்
இதுதான் முறையெனத் தெளிந்து
இல்லத்தை விட்டுப் போன எனது
பிறைபோன்ற நெற்றிக் குறமகள்
போன மார்க்கம் இனியதாகுக.

இரக்கம் உள்ள இந்தப் பழைய ஊரில்கூட
வம்புப் பேச்சுகள் பரவுகின்றன.
பல குன்றுகளைக் கடந்து அந்தக் காளையுடன்
நடக்கும் என் மகள்
என்னை ஒருமுறை நினைத்திருப்பாளா?

புலியிடம் தப்பிச் சென்ற கொம்புமான்
தன் பெண்மானைக் கூப்பிடும்
கொடிய பாலையில் என்மகளைக்
கொண்டு சென்ற அந்தப் பையனின் தாய்
எண்ணி எண்ணி அழுவாளாகட்டும்.

என்ன நினைத்தாலும் நல்லதே செய்யும்
என்மகளைக் கூற்றுவன் போலப் பலமுடைய
அந்தப் பையன் கொண்டு போனான்.
இழுத்து முடிச்சுப் போடவும் கூந்தலின்
நீளம் போதாத என்மகளைக்
குரங்குக்கும் பரிச்சயமில்லாத காட்டில்
அவன் கொண்டு போய்விட்டானே.

இது என்னுடைய பாவை விளையாடிய பாவை
கண்களை சுழற்றிப் பார்க்கும் என்
பைங்கிளி ஆடிய பைங்கிளி என்று
பார்க்கும் போதெல்லாம் கலங்கிப்
போனாளோ என் பூங்கண்ணாளே?

நல்ல பெயருடைய இந்நகரம் கலங்குகிறது.
பூவைப் போன்றவள் போய்விட்டாளே.
நாள்தோறும் கலங்கும் என்னைக் காட்டிலும்
காடுபடும் தீப்போல் கனலட்டும்
அவளைப் போகத் தூண்டிய பழவினையே!

தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத யானையின் கூச்சம்
வங்கிய வாத்தியம் போல கேட்கும் வழியில்
போய்விட்டாள் என்மகள் பந்தையும்
பொம்மையையும் கழங்கையும்
என்னிடம் போட்டுவிட்டு.

வௌவால்கள் உயரே பறக்க முயலும்
இம் மாலைக் காலத்தில்
ஓடிப் போன பெண்ணுக்காக நான் நோவேனா
தேன் போலப் பேசிய. அவளுடைய
துணையில்லாமல் கலங்கும்
இத் தோழிக்காகக் கலங்குவேனா நான்?

‘புத்தகங்கள் போவது எங்கே?’

தொகுப்பு: ரா. சின்னத்துரை, புகைப்படம்: ஆர்.சி.எஸ்.

அவரவர் தங்கள் சுவைக்கும் தேவைக்கும் ஏற்பவே புத்தகங்களை வாங்குவார்கள். என் சுவை இலக்கியம், தத்துவம், கலை, சார்ந்தது. என்னிடம் உள்ள புத்தகங்களும் இத்துறைகள் சார்ந்தவையே.

1957-ல் சக்தி காரியாலயம் வெளியிட்ட ‘மகாகவி பாரதியார் கவிதைகள்’ என்ற தொகுப்புதான் நான் முதன்முதலாக வாங்கிய புத்தகம். அதற்குப் பிறகு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கத் தொடங்கி அவை எண்ணிக்கையில் பெருகிவிட்டன.

1959-ம் ஆண்டுக்குள் கம்பராமாயணம், திவ்யப் பிரபந்தம், தேவாரம் (அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் பதிகங்கள்), சூளாமணி நிகண்டு (பல்பெயர் கூட்டத் தொகுதி), தஞ்சைவாணன் கோவை, வருண குலாதித்தன் மடல், கூளப்பநாயக்கன் காதல், நளவெண்பா, நாலடியார் – இப்படிப் பல புத்தகங்கள் என்னிடம் இருந்தன.

சென்னைக்கு 1959-ம் ஆண்டு வந்த பிறகு ஆங்கிலப் பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். ‘என்கௌண்டர்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் இதழ்கள் 60-க்கும் மேல் என்னிடம் இருந்தன. எழுத்து, இலக்கிய வட்டம் முதலான இதழ்களும் இருந்தன.

1959-க்கு முன் ஒரே ஒரு ஆங்கிலப் புத்தகம்தான் என்னிடம் இருந்தது. அது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் முழுக் கவிதைத் தொகுப்பு. சென்னையில் மூர்மார்க்கெட்டிலும் திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் (பைகிராப்ட்ஸ் ரோடு) நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கியிருந்தேன். இமானுவேல் காண்ட் எழுதிய ‘க்ரிட்டிக் ஆஃப் ப்யூர் ரீஸன்’ என்ற புத்தகம், மார்ட்டின் பூபர் என்ற யூதத் தத்துவ ஞானியின் சில நூல்கள், ஸ்ஷர்பாட்ஸ்கி மொழிபெயர்த்த தர்மகீர்த்தியின் ‘நியாய பிந்து’, ‘மானஸ ப்ரத்யக்‍ஷா’, வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆஃப் க்ராஸ்’, வில் டூரண்ட்டின் ‘ஸ்டோரி ஆஃப் ஃபிலாஸஃபி’, விஜய் டெண்டுல்கரின் நாடகம் முதலியனவும் பெங்குயின் கவிதைத் தொகுப்புகளும் வேறு பல புத்தகங்களும் இருந்தன. இவற்றில் சில திருட்டுப்போய்விட்டன.

என்னுடைய பெயர் வெளி உலகில் தெரியத் தெரிய பல புத்தகங்கள் – குறிப்பாகக் கவிதைத் தொகுப்புகள் – எனக்குக் கிடைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகப் பத்திரிகைகளும் புத்தகங்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டன. ஆகவே, தவிர்க்க முடியாமல் பல கிலோ எடைக்குப் பத்திரிகைகளை விற்றுவிட்டேன். இரண்டு பிரதிகள் உள்ள புத்தகத்தில் ஒன்றை யாருக்காவது கொடுத்துவிட்டேன். ஆனால் இன்னமும் நிறைய புத்தகங்கள் உள்ளன. என்ன செய்வது? விற்க மனமில்லை. எனவே, ஐஸ் அவுஸ் பக்கத்தில் இயங்கும் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துக்கு தானமாகக் கொடுக்கலாம் என்று புத்தகங்களைக் கணக்கெடுக்கிறேன். இருநூறு புத்தகங்கள் வரைக்கும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.

பிரியவே முடியாத புத்தகங்கள் இன்னமும் உள்ளன. அவற்றில் ஒன்று ஏ.எஸ்.பி. அய்யரே கையெழுத்திட்ட ‘இரட்டை நாடகங்கள்’, மற்றது 1940ல் வெளியான ‘தொனி விளக்கு’; கமல்ஹாசன் எனக்குக் கொடுத்த ‘க’. இதை எழுதியவர் ராபர்ட்டோ கலாஸோ என்ற இத்தாலியர். என் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்த எஸ். ராமகிருஷ்ணன் பின்பு படித்தார் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமும் கமல்ஹாசன் கொடுத்தது. அது ‘ட்யூஸ்டேஸ் வித் மோரி.’ இது ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது.

இன்னமும் புத்தகங்கள் வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 1500 பக்கங்கள் வரை உள்ள புத்தகங்கள் வந்துள்ளன. எப்படிப் பார்த்தாலும் என்னிடம் 500-க்கும் குறையாத புத்தகங்கள் இருக்கும் என்றே நம்புகிறேன். இவற்றில் 200-க்கும் மேற்பட்டவை கவிதைத் தொகுப்புகள். இவை எல்லாம் என்ன ஆகும்? என் கவலையா அது?

(வெளிவந்த வார இதழின் பெயர், வெளிவந்த தேதி ஆகிய தகவல்கள் இப்பக்கங்களில் இல்லை. Tuesdays with Morrie திரைப்படமாகிவருகிறது என்ற குறிப்பைக் கொண்டு பார்த்தால் 90களின் இறுதியில் இந்த உரையாடல் நிகழ்ந்திருக்கலாம்)

எங்கும் இருக்கும் கங்கை

26-04-2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

இந்திய மொழி இலக்கியங்கள் எல்லாவற்றிலும் கங்கை நதி பேசப்பட்டிருக்கிறது. ஜானவி, வேகவதி என்றும் கங்கைக்குப் புராணப் பெயர்கள் உண்டு. பகீரதன் அரும்பாடு பட்டு கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான் என்பதால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் உண்டு. கங்கா, யமுனா, ஸரஸ்வதி, ஸுதுத்ரி, பருஷ்ணி என்று 21 நதிகளின் பெயரை ரிக் வேதம் குறிப்பிடுகிறது என்கிறார் ஓர் ஆராய்ச்சியாளர். வேதத்துக்குச் சற்றுப் பிந்திய நூல்களில் அப்ஸரஸ் என்ற அழகிகள் கங்கைக் கரையில் உலவுவார்கள் என்று கூறப்படுகிறது. இமயமலைக் கடவுளான சிவன் தன் ஜடாமுடியில் தாங்கியிருப்பதால் கங்கை சிவகங்கையும் ஆகிறாள். பரிபாடல் ஜலத்தைத் தரித்திருப்பதால் சிவனை ஜலதாரி என்கிறது.

ஆண்டில் ஒருநாள் இந்திய நதி ஒன்றில் கங்கை கலப்பதாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் திருவிசைநல்லூர் என்ற சிற்றூரில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கிணற்றில் தண்ணீர் ஊறும், பெருகும். இதைக் கங்கையின் ப்ரவாகம் என்கிறார்கள். தீபாவளி கொண்டாடும் போதும் கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை மன்னரான முத்து விஜயரங்க சொக்கலிங்க நாயகர் அரங்கேற்றுவித்த குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் (17-18ம் நூற்றாண்டில்) எழுதுகிறார்.

மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும்
முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை ஆறே …

கவிராயர் சிவ மது கங்கை ஆறுதான் கங்கை ஆறென்று கானவர்கள் அடையாளம் காட்டுவார்கள் என்று பாடுகிறார். திரிகூட ராசப்பக் கவிராயர்க்கு மட்டுமல்ல, அவருக்குப் பின் வந்த பாரதியார்க்கும் மற்ற கவிஞர்களுக்கும் கங்கை பிரபலமான நதிதான்.

வெளிநாட்டிலும் கங்கைக்கு நேயர்கள் உண்டு. நவீன தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எழுத்தாளராகத் தெரிந்திருக்கும் Jorge Luis Borges (1899-1986) ஒரு கங்கைப் பிரியர்தான். 1923ம் ஆண்டிலேயே Benares என்று பெயரிட்டு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். T.S. Eliot மற்றும் Baudelaire  இந்தியப் பெண்ணைக் குறித்து ஓரிரு கவிதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்திய ஆற்றைப் பற்றி எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. காளிதாஸரின் சகுந்தலையைக் குறித்து ஜெர்மன் மகாகவி கதே (Goethe) பாடியிருக்கிறார் தெரியுமா?

Borgesன் கவிதையில், இந்தியர்களிடம் உள்ள நம்பிக்கை அழகாகக் கையாளப்பட்டுள்ளது.

You gleam, like the cruel blades of cutlasses
you take the forms of dreams, nightmares, monsters.
To you the tongues of men attribute wonders
Your flights are called the Euphrates or the Ganges.

(They claim it is holy, the water of the latter,
but, as the seas work in their secret ways
and the planet is porous, it may still be true
to claim all men have bathed in the Ganges.)

என்று பாடுகிறார் ஸ்பானிஷ் மொழியில் எழுதும் போர்ஹஸ், Poem of the Fourth Elementல். Happiness என்ற கவிதையில்

Whoever goes down to a river goes down to the Ganges

என்றும் பாடுகிறார் கவிஞர்.

*

குறிப்பு: பெரும்பாணாற்றுப்படை கங்கையைப் பற்றிக் கூறுகிறது.

இமையவர் உறையும் சிமையச் செவ்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித் திழிதரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கியாங்கு …

என்பது பெரும்பாணாற்றுப்படைப் பாட்டு. அதாவது கங்கைக் கரையைக் கடக்க விரும்புபவர்கள் தோணிக்காகக் காத்திருக்கும்போது சாய்ந்து தூங்குகிறார்களாம். ஒரு தோணிதான் உள்ளதென்கிறார் புலவர்.