அய்யர் கொடுத்த மின் விசிறி

வீட்டுத் தரகர் சுந்தரேச அய்யரைத்
தெருவில் பார்த்தேன் தற்செயலாக.

‘ஐம்பதில் தானே இருப்பது. அங்கே
தண்ணீர்ப் பிரச்னை இருக்குமே. வாசலில்
எருமை மாட்டைக் கட்டிக் கறப்பானே.
சொந்தக்காரனும் சும்மா சும்மா
அட்வான்ஸ் பணத்தை ஏத்துவானே.
நல்ல வீடொண்ணிருக்கு. ராசி.
விருத்தியுள்ள வீடு. முடிச்சுத் தர்றேன்.
முடையாய் இருக்கு. நூறு தாங்கோ;
கணக்குப் பார்த்துக் கழிச்சிப்போம்’ என்றார்.
வீடு வேண்டாம் என்றேன் அவரிடம்.
கழற்றிக் கொண்டு வீடு திரும்பினேன்.

சுந்தரேச அய்யர் எனக்கு முன்னே
வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருந்தார்.
அருகில் காஃபி டபரா டம்ளர் –
மரியாதை பெற்றதற்கு அடையாளமாக.

அப்புறம் தெரிந்தது இன்னொரு வஸ்து.
மேஜை மின் விசிறி. வர்ணம் நாஸ்தி.
என்னிடம் தூக்கித் தந்தார். ரூபாய்
நூறு தந்தாக வேண்டும் என்றார்.
தந்தேன் மனமே இல்லாமல் நூறு.

சுந்தரேச அய்யர் போன பிற்பாடு
விசிறியை இயக்கிப் பார்த்தேன்.
சத்தம். சத்தம். கடகட சத்தம்.
சுந்தரேச அய்யர் வீட்டுக்குத் திரும்பிப்
போக வேண்டும் தான் – என்பது போல.

குடும்பம் முழுவதும் கூடி நின்று
விசிறியின் இரைச்சலைப் பெரிதும் ரசித்தது.

கால்மணி நேரம். பின்பதை நிறுத்தினேன்.
எங்கும் நிசப்தம். வாழ்வில் அன்றுதான்
நிசப்தம் என்பதை உணர்வது போல.

நிசப்தத்துக் கிடையே நுண்ணிய ஒலிகள்.
சகஸ்ரநாமம் கேட்து போலவும்,
குடுகுடுப்பை கேட்பது போலவும்,
சவுக்கைத் தோப்பில் இருப்பது போலவும் –
தொலைவில் டம்ளர் விழுந்தது போலவும்.

விசிறியை மீண்டும் இயக்கினேன்.
கடகட சத்தம் கேட்கவே இல்லை.
புதிய வீட்டை
மறுப்பதில் எதுவும் பயனில்லை என்று
தெரிந்து கொண்டதோ மின்வசிறி?

1996