உள்ளும் புறமும், 1981

1981இல் ஓர் ஆராய்ச்சி மாணவருக்காக ஞானக்கூத்தன் தமது வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி அனுப்பினார். இதன் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’ நாளிதழில் அவரது பிறந்த தேதி அன்று (07-10-2017) வெளியானது. முழு வடிவம் இங்கு தரப்படுகிறது.

*

1. பிறந்த தேதியும் பிறந்த இடமும்.

7.10.1938. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாயூரத்தில் திரு இந்தளூர் என்ற பகுதி.

ஞானக்கூத்தன் வளர்ந்த வீடு, 2015இல்.

2. இரு தலைமுறைகளுக்கான வம்சாவளி விவரங்கள்.

(பல நூறு வருடங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குக் குடியேறிய ‘ஆறுவேலு’ என்ற கன்னடப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் முன்னோர்கள்.) ‘ஆறுவேலு’ என்ற பழைய கன்னடச் சொல்லுக்கு ஆறாயிரம் என்று பொருள். தெலுங்கு பேசும் பார்ப்பனர்களிடையேயும் ‘ஆறுவேலு’ என்ற பிரிவு இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் கன்னடம் பேசும் பார்ப்பனரிடையே ‘ஆறுவேலு’ என்றும் ’அரவத் தொக்கலு’ என்றும் இரண்டு பிரிவினர் உண்டு. இதில் ஆறுவேலு பிரிவினர் தாங்கள் பூர்வீகக் கன்னடக் குடிகள் என்றும் ‘அரவத் தொக்கலு’ என்ற பிரிவினர் தமிழ்க் கலப்புடையவர்கள் என்றும் கருதுகிறார்கள் (ஆறுவேலு பிரிவினர் காவிரி, கொள்ளிடக் கரைகளில் குடியேறியவர்கள். இவர்களில் காவிரிக் கரையில் குடியேறியவர்களில் என் கொள்ளுப் பாட்டனார் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.) கொள்ளுத் தாத்தா வடமொழிப் புலமை உடையவர். த்வைத சித்தாந்த வாதப் பிரதிவாதங்களில் ஈடுபாடு உடையவர். தாத்தா வடமொழிப் பயிற்சி உடையவர். என் தந்தையின் பாலப் பருவத்திலேயே தாத்தா இறந்துவிட்டதால் என் தந்தை என் பாட்டியாரால் வளர்க்கப்பட்டார். என் தந்தை ஆரம்ப உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று 68ம் வயதில் காலமானார். ஏதோ ஒரு காலத்தில் மன்னர்களால் வழங்கப்பட்ட மான்ய நிலத்தில் ஜீவித்திருந்த முன்னோர்களின் சொத்து தாத்தாவின் காலத்திலேயே இல்லாமல் போயிற்று. என் தந்தை தனது சொந்த முயற்சியிலேயே படித்து ஆசிரியரானார். தந்தைக்கும் வடமொழிப் புலமை உண்டு. ஆனால் இலக்கிய வகையாக இல்லாமல் அது வேத மந்த்ரங்களைப் பற்றிய வியப்பாக இருந்தது. ஊரில் ஆசிரியர் என்ற முறையில் – ஆரம்பப் பள்ளி ஆசிரியர் என்றாலும் கவுரவமாகக் கருதப்பட்டுவந்தார்.

3. முறைசார் கல்வி பற்றிய விவரங்கள்.

என் தந்தை என் கல்வியைப் பற்றி ஏதும் குறிப்பிட்ட நோக்கு உடையவராக இல்லை. இன்னொரு விஷயம். என் தந்தைக்கு என்னைச் சேர்ந்து பத்துப் பிள்ளைகள். இரண்டாவது நான். என் பள்ளிப் படிப்பு உயர்நிலைப் பள்ளிக்கு வரத் தொடங்கியதும் படிக்க வைக்கத் தந்தையார் மிகவும் கஷ்டப்பட்டார். நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்ததும் அப்பொழுது வடமொழி, சிறப்புத் தமிழ் என்ற வாய்ப்பில் என்னை வடமொழியில் சேர்த்து விட்டார். ஆறாம் வகுப்பில் எனது முதல் தமிழ்க் கவிதையும் அதைத் தொடர்ந்து எனக்குத் தமிழ் நூல்களில் ஏற்பட்ட ஈடுபாடும் என் தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. அந்த வயதில் நான் வீட்டுச் சுவர்களில் சொந்தமாகச் சித்திரங்கள் வரையத் தொடங்கியதும் திகைத்தார். ஊர்க்காரர்கள் எனது தமிழ்ப் புலமையையும் (?) சித்திரத் தேர்ச்சியையும் பாராட்டியபோது என் தந்தைக்கு என் கல்வி ஒரு பிரச்னையாகத் தோன்றியது. எட்டாம் வகுப்பு முடிந்ததும் தமிழ்ப் புலவர் வகுப்பில் என்னைச் சேர்க்க வேண்டும் என்று சிலரும் கூறத் தொடங்கியபோது என் தந்தை வருந்தத் தொடங்கினார். பையன் கவியாகவோ சித்திரக்காரனாகவோ வரலாம். ஆனால் அது வாழ்க்கைக்கு வசதியானதில்லையே என்று சொல்லத் தொடங்கினார். குடும்பம் பெரியதாகையால் நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து ஏதாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் [என] விரும்பினார். எனக்குத் தமிழ் படிக்க வேண்டும் என்ற விருப்பம் வளர்ந்தது. தருமை ஆதீனத்துத் தமிழ்க் கல்லூரியில் சேர வேண்டுமென்று, பள்ளி இறுதியாண்டு தேர்ச்சி பெற்றதும் கூறினேன். அதற்குப் பதில் சொல்லாததால் நான் மூன்று நாட்கள் உபவாஸம் இருந்தேன். மூன்றாம் நாள் இரவு, தனிக்கல்வி (tuition) வகுப்புகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய தந்தை, வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு கூப்பிட்டார். என்னிடம் சொன்னார்: ‘நீ ஹைஸ்கூல் படிப்பதற்கே ரெட்டியார் உபகாரச் சம்பளம் தேவைப்பட்டது. இனிமேல் படிக்க என்ன செய்ய வேண்டும்? நீ வேலைக்குப் போனால் எனக்குக் கஷ்டம் குறையும். உன் தம்பிகளும் உன் வருமானத்தில் படிப்பார்கள்’ என்றார். நான் உபவாஸத்தைக் கைவிட்டு வேலைக்குப் போனேன். என் கல்வி எல்லோருக்கும் பங்கிட்டுத் தரப்பட்ட சில பருக்கைகள்தான். பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்குப் போவதில் எனக்கு விருப்பம் இருந்தது கிடையாது. அதிலும் விடுமுறைக்கு முதல் நாளும் பிந்திய நாளும் பள்ளிக்குப் போக அறவே பிடிக்காது.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது மொழித் திட்டத்தில் ஏகக் குழப்பம். இதனால் ஆங்கிலம் எனக்கு ஏழாம் வகுப்பில்தான் தொடங்கப்பட்டது. என் தந்தைக்கு நான் வடமொழி படிக்க வேண்டும் என்று விருப்பம். நான் அதை 9ம் வகுப்பில் விட்டுவிட்டுப் பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் என்று இரண்டையும் தமிழாக்கிக்கொண்டேன். எனக்கு வடமொழி பிடித்திருந்தது. ஆங்கிலமும் அவ்வாறே. இந்த மூன்று மொழிகளோடு சித்திரம் போன்ற ஏதேனும் கலைகள் இருந்தால் போதும் [என்று] எனக்கு அப்போது தோன்றியதுண்டு.

ஒவ்வொரு சிறுவனுக்கும் அவனுக்கு எதில் ஊக்கம் இருக்கிறதோ அதில் அவனைத் தேர்ச்சி பெறச் செய்து, சகல துறைகளும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதுண்டு. இன்றும் அவ்வாறே.

4. வளரும் ஆண்டுகளில் பாதித்தவர்கள்.

எந்த ஒரு மனிதரும் என்னைப் பாதித்ததாகக் கூறுவதற்கில்லை என்றாலும், கம்பரை நான் மறக்க முடியாது. மாயூரம் தாலுகாவில் ஒரு முனிசிபல் வார்டாக இருப்பது நான் பிறந்த ஊராகிய திரு இந்தளூர். இது மிகவும் பழமையான ஊர். இது ஒரு வைணவத் தலம். திருமங்கையாழ்வாரால் பார்த்துப் பாடப்பட்டது. மாயூரம் தாலுகாவைச் சேர்ந்த, ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள தேரிழந்தூர் கம்பர் பிறந்த ஊர். திரு இந்தளூரை மக்கள் திருவழுந்தூர், திருவிழந்தூர் என்று சொல்வார்களாதலால் வெளியார்களுக்கு அது கம்பர் பிறந்த ஊரான தேரிழந்தூராகிய திருவழுந்தூரை ஓசையில் நினைவூட்டும். தேரிழந்தூர் கிராமப் புறமாகையால், அங்கே படித்த வைணவர்கள் எங்கள் ஊருக்குக் குடியிருந்தார்கள். இவர்களில் ஒருவர் எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியராக இருந்த ஸ்ரீநிவாஸ ஐயங்கார். இவர் தேரிழந்தூரில் சொந்த வீடும் நிலமும் உடையவர். இந்தச் செய்தி எனக்குத் தெரிந்ததும் எப்படியோ கம்பர் பிறந்தது எங்கள் ஊராகிய திரு இந்தளூராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மேலும் காவிரியின் கரையில்தான் திரு இந்தளூர் இருக்கிறது. தேரிழந்தூர் காவிரிக்கு வெகு தொலைவில் [இருக்கும்] வைணவத் தலமாதலால் கம்பராமாயணப் பிரசங்கங்கள் அவ்வப்போது நடைபெறும். கம்பராமாயணப் பிரசங்க பூஷணம் என்ற விருது பெற்ற வரதராஜ அய்யங்கார் என்பவரின் பிரசங்கத்தைக் கேட்டிருந்தேன். கவிதையில் கதைகளும் வருமென்பது அவர் வழியாகத்தான் தெரிந்தது. கம்பராமாயணம் தெரியத் தொடங்கியதும் ஸ்ரீநிவாஸ அய்யங்காரிடம் எனக்கு அவர் கம்பர் ஊர்க்காரர் என்பதால் மதிப்பு கூடியது. அவரும் கவிஞர். 1930-40களில் அவர் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார். என் கவிதையை அவரிடம்தான் முதலில் படித்துக்காட்டினேன். இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் தோற்றம் உடைய அவர் என் கவிதையைக் கேட்டுவிட்டு அதில் யாப்பு இலக்கணம் சரியாக இல்லை என்றார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு யாப்பு இலக்கணம் படிக்க வேண்டும் என்றார். அது எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு ‘கிடைக்கும். அது இப்போது உனக்குப் புரியுமா?’ என்று கேட்டார். நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேனாகையால் எனக்கு அது எட்டாது என்று அவர் நினைத்தார். யாப்பு பிறகு தெரிந்துகொள்ளலாம், முதலில் நிறையப் படி என்றார். நல்ல வேளையாக என் அண்ணன் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததால் அவனது இலக்கணப் புத்தகத்தை எடுத்து யாப்பிலக்கணம் கற்றுக்கொண்டேன். யாப்பின் அடிப்படைகள் அன்றைக்கே தெரிந்துகொண்டதில் என் அண்ணன் பாடப் புத்தகத்தில் வந்திருந்த ராமாயணம், சிலப்பதிகாரம் இரண்டையும் ஆராய்ந்தேன். கம்பனின் குகப் படலம் அது. அது எழுதப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அடுத்து 5 வருடங்களுக்குக் கம்பர் என் தீவிரமான வாசிப்புக்காளானார். உருவாகும் இளம் வயதில் என் ஆசிரியனாகக் கம்பர் இருந்தார். இன்றும் அவருடைய பாதிப்பை நான் உணர்கிறேன்.

5. நீங்கள் முன்மாதிரியாகக் கருதும் நபர்கள் யாராவது இருக்கிறார்களா?

இல்லை. தமிழ்க் கவிதைக்கென்றே சில அடிப்படைக் குணாதிசயங்கள் உள்ளன. ஒருவேளை இந்தப் பண்புகள் இதர மொழிக்கும் பொருந்தலாம். அவை சிக்கனம், தெளிவு, நேரடியாகக் கூறல், அணுக்கம் என்பன. இந்தப் பண்புகளைக் கொண்டே தமிழ்க் கவிதைகள் அமைந்துள்ளன. அவையே என் கவிதைகளுக்கும்.

6. இடப்பெயர்ச்சி பற்றி.

உள்ளூரில் இருந்தபொழுது எல்லாத் தமிழ் நூல்களும் கிடைத்தன. ஒரு நாள் பஸ்ஸில் யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டதாகச் சொல்லி என்னிடம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை நூலொன்றை என் மாமன் எனக்குக் கொண்டுவந்தார். வேர்ட்ஸ்வொர்த்தின் லூஸ் க்ரேயை நான் படித்திருந்தேன். அவர் இன்னும் ஏராளமாக எழுதியிருக்கிறார் என்று எனக்கு அப்பொழுதுதான் தெரியவந்தது. கோல்ட்ஸ்மித்தின் கவிதை ஒன்றும் நான் படித்திருந்தேன். இன்னும் ஆங்கிலத்தில் ஏராளமான கவிஞர்கள் இருப்பார்கள், ஏராளமாகக் கவிதைகள் இருக்கும் என்பது தெரிந்திருந்தது. அவற்றின் கற்பனை முறை என்னைக் கவர்ந்தது. நிறைய ஆங்கில நூல்கள் படிக்க வேண்டும் என்று தோன்றியது. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து, அதற்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகள் நான் தமிழைத் தவிர வேறொன்றும் வேண்டாதவனாக இருந்தேன். ஆங்கிலம் அந்நிய ஆதிக்க மொழி என்பதும் அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதும் என்னிடத்தில் எதிர்ப்புணர்வை வளர்த்திருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியம் படிக்க ஆவலும் எழுந்தது. வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிஞர்கள் எழுதிய மொழி என்ற எண்ணமும் தலையெடுத்தது. உள்ளூரில் ஆங்கில நூல்கள் கிடைக்க வழியில்லை. சென்னைக்கு வந்ததும் நூலக வசதி கிடைத்தது. 1959ம் ஆண்டு ஜூன் முதல் தேதியிலிருந்து ஆங்கில நாளிதழ்களைப் படிப்பது பாவமில்லை என்று தொடங்கினேன். அன்று மாலையிலிருந்தே நூலகம் செல்லத் தொடங்கினேன். ஜப்பானியக் கவிதைகள் முதலில், பின்பு சீனக் கவிதைகள், பிறகு ஆங்கிலேய அமெரிக்கன் கவிதைகள் என்று படிக்கத் தொடங்கினேன். இதனால் என் கவிதைகள் ஆழமாகப் பாதிக்கப்பட்டன என்று கூற முடியாது என்றாலும் ஏதோ ஒரு திருப்பத்தில், ஒரு நடையில், ஒரு கண் சிமிட்டலில் அதன் சாயல் இருப்பதைக் கூற முடிகிறது. அதைவிட முக்கியமாகத் தமிழ்க் கவிதைகளை மற்றவற்றோடு எடை போட முடிந்தது.

7. திருமண வாழ்க்கை பற்றி.

திருமணமே செய்துகொள்ளாமல் இருக்க வேண்டுமென்று கருதியிருந்தேன். கம்பர் கவிதையில் ஈடுபட்டது போல திருமூலரிடம் எனக்கு ஈடுபாடு இருந்தது. ஒரு மாதிரியான சந்யாசித்துவமும் மௌனமும் உடையவனாகவே நான் இளமைக் காலத்திலிருந்து அறியப்பட்டிருந்தேன். பெற்றோர்கள் விருப்பப்படி திருமணமாகிக் குழந்தைக்குத் தகப்பனாகிய பிறகு மனித குலத்தின் மீது எனக்குக் காதல் துக்கமாக மண்டிவிட்டது. என் கவிதைகளில் குடும்பம் ஒரு தொடர்பான செய்தியாக இருப்பதை நான் காண முடிகிறது.

8. பொதுவாழ்க்கை பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்.

எனக்குப் பொதுவாழ்க்கை என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. யாராலும் விசேஷமாகக் கண்டுகொள்ளப்படாத சாதாரணமான மனிதனாக இருப்பதை நான் நேசிக்கிறேன்.

9. இலக்கிய வாழ்க்கை பற்றிச் சுருக்கமான ஒரு குறிப்பு…

இலக்கிய வாழ்க்கை? 1960ம் ஆண்டு என் கைவசமிருந்த கவிதைகள் எதையும் எந்த ஏட்டிலும் வெளியிட முடியவில்லை. தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னை, தமிழ்நாடு பெயர் வைப்புப் போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டதோடு மூன்று கவிதைகளும் வெளியாகின. எந்த ஏடும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கவிதைகளை வெளியிடத் தனி ஏடு வேண்டும் என்று தோன்றியதோடு, பெரிய ஏடுகளை எதிர்த்துப் பிரசுரிக்க ஏடுகள் வேண்டும் என்றும் கறுவத் தொடங்கினேன். இந்தச் சமயத்தில் வெளிவந்துகொண்டிருந்த சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ என்ற ஏடும் என் கவிதையை வெளியிட மறுத்துவிட்டது. ஒருபுறம் மரபுக் கவிதையாளர்கள் என் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்று தள்ள, மறுபுறம் அவற்றை மரபுக் கவிதைகள் என்று சி.சு. செல்லப்பா உள்ளிட்ட சிலர் தள்ள, என் கவிதைகள் என்னிடம் தங்கின. 1968ம் ஆண்டு கிழித்தெறிந்தவை போக சிலவற்றை முதல் தடவையாக சி. மணியின் ‘நடை’யில் வெளியிட முடிந்தது. இன்றும் தொடர்கிறது.

10. தற்போது எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியப் படைப்புகள்

இது வரையிலும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ள நெடுங்கவிதைகளுக்கு மாறுதலாக, இனி வருகிற காலத்துக்குப் போகப்போகப் புலப்படுவதான ஒரு கவிதையைக் குறித்து சிந்தித்துவருகிறேன்.

சக கவிஞர்களுடன் தமிழ்க் கவிதைக்கு என்ன வகைத்தான சிறப்பைத் தரலாம் என்றும் சிந்திக்கிறேன்.

ஞானக்கூத்தன்
27.12.81