‘புத்தகங்கள் போவது எங்கே?’

தொகுப்பு: ரா. சின்னத்துரை, புகைப்படம்: ஆர்.சி.எஸ்.

அவரவர் தங்கள் சுவைக்கும் தேவைக்கும் ஏற்பவே புத்தகங்களை வாங்குவார்கள். என் சுவை இலக்கியம், தத்துவம், கலை, சார்ந்தது. என்னிடம் உள்ள புத்தகங்களும் இத்துறைகள் சார்ந்தவையே.

1957-ல் சக்தி காரியாலயம் வெளியிட்ட ‘மகாகவி பாரதியார் கவிதைகள்’ என்ற தொகுப்புதான் நான் முதன்முதலாக வாங்கிய புத்தகம். அதற்குப் பிறகு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கத் தொடங்கி அவை எண்ணிக்கையில் பெருகிவிட்டன.

1959-ம் ஆண்டுக்குள் கம்பராமாயணம், திவ்யப் பிரபந்தம், தேவாரம் (அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் பதிகங்கள்), சூளாமணி நிகண்டு (பல்பெயர் கூட்டத் தொகுதி), தஞ்சைவாணன் கோவை, வருண குலாதித்தன் மடல், கூளப்பநாயக்கன் காதல், நளவெண்பா, நாலடியார் – இப்படிப் பல புத்தகங்கள் என்னிடம் இருந்தன.

சென்னைக்கு 1959-ம் ஆண்டு வந்த பிறகு ஆங்கிலப் பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். ‘என்கௌண்டர்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் இதழ்கள் 60-க்கும் மேல் என்னிடம் இருந்தன. எழுத்து, இலக்கிய வட்டம் முதலான இதழ்களும் இருந்தன.

1959-க்கு முன் ஒரே ஒரு ஆங்கிலப் புத்தகம்தான் என்னிடம் இருந்தது. அது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் முழுக் கவிதைத் தொகுப்பு. சென்னையில் மூர்மார்க்கெட்டிலும் திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் (பைகிராப்ட்ஸ் ரோடு) நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் வாங்கியிருந்தேன். இமானுவேல் காண்ட் எழுதிய ‘க்ரிட்டிக் ஆஃப் ப்யூர் ரீஸன்’ என்ற புத்தகம், மார்ட்டின் பூபர் என்ற யூதத் தத்துவ ஞானியின் சில நூல்கள், ஸ்ஷர்பாட்ஸ்கி மொழிபெயர்த்த தர்மகீர்த்தியின் ‘நியாய பிந்து’, ‘மானஸ ப்ரத்யக்‍ஷா’, வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆஃப் க்ராஸ்’, வில் டூரண்ட்டின் ‘ஸ்டோரி ஆஃப் ஃபிலாஸஃபி’, விஜய் டெண்டுல்கரின் நாடகம் முதலியனவும் பெங்குயின் கவிதைத் தொகுப்புகளும் வேறு பல புத்தகங்களும் இருந்தன. இவற்றில் சில திருட்டுப்போய்விட்டன.

என்னுடைய பெயர் வெளி உலகில் தெரியத் தெரிய பல புத்தகங்கள் – குறிப்பாகக் கவிதைத் தொகுப்புகள் – எனக்குக் கிடைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகப் பத்திரிகைகளும் புத்தகங்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டன. ஆகவே, தவிர்க்க முடியாமல் பல கிலோ எடைக்குப் பத்திரிகைகளை விற்றுவிட்டேன். இரண்டு பிரதிகள் உள்ள புத்தகத்தில் ஒன்றை யாருக்காவது கொடுத்துவிட்டேன். ஆனால் இன்னமும் நிறைய புத்தகங்கள் உள்ளன. என்ன செய்வது? விற்க மனமில்லை. எனவே, ஐஸ் அவுஸ் பக்கத்தில் இயங்கும் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துக்கு தானமாகக் கொடுக்கலாம் என்று புத்தகங்களைக் கணக்கெடுக்கிறேன். இருநூறு புத்தகங்கள் வரைக்கும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.

பிரியவே முடியாத புத்தகங்கள் இன்னமும் உள்ளன. அவற்றில் ஒன்று ஏ.எஸ்.பி. அய்யரே கையெழுத்திட்ட ‘இரட்டை நாடகங்கள்’, மற்றது 1940ல் வெளியான ‘தொனி விளக்கு’; கமல்ஹாசன் எனக்குக் கொடுத்த ‘க’. இதை எழுதியவர் ராபர்ட்டோ கலாஸோ என்ற இத்தாலியர். என் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்த எஸ். ராமகிருஷ்ணன் பின்பு படித்தார் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமும் கமல்ஹாசன் கொடுத்தது. அது ‘ட்யூஸ்டேஸ் வித் மோரி.’ இது ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது.

இன்னமும் புத்தகங்கள் வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் 1500 பக்கங்கள் வரை உள்ள புத்தகங்கள் வந்துள்ளன. எப்படிப் பார்த்தாலும் என்னிடம் 500-க்கும் குறையாத புத்தகங்கள் இருக்கும் என்றே நம்புகிறேன். இவற்றில் 200-க்கும் மேற்பட்டவை கவிதைத் தொகுப்புகள். இவை எல்லாம் என்ன ஆகும்? என் கவலையா அது?

(வெளிவந்த வார இதழின் பெயர், வெளிவந்த தேதி ஆகிய தகவல்கள் இப்பக்கங்களில் இல்லை. Tuesdays with Morrie திரைப்படமாகிவருகிறது என்ற குறிப்பைக் கொண்டு பார்த்தால் 90களின் இறுதியில் இந்த உரையாடல் நிகழ்ந்திருக்கலாம்)