தேவேந்திர பூபதியின் ‘நடுக்கடல் மௌனம்’

திரு. தேவேந்திர பூபதியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு ‘நடுக்கடல் மௌனம்’. பூபதியின் முந்தைய தொகுப்புக் கவிதைகளை நான் படித்திருக்கிறேன். ஒரு கவிஞர் என்று போற்றப்படவும் பேசப்படவும் போதுமான அளவுக்குக் கவிதைகள் வெளியிட்டுத் தகுதியை பூபதி ஈட்டியிருக்கிறார். இவரது பல கவிதைகளில் பல சந்தர்ப்பங்கள் வாசகனின் கவனத்தை ஈர்ப்பனவாக அமைந்துள்ளன. ‘ஆகவே நானும்’ என்ற முந்தைய தொகுப்பில் உள்ள ‘உடை நிலம்’ என்ற கவிதையை நான் பல வாசகர்களிடம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறேன். மனமும் உடைகிற ஒரு வஸ்துதான் என்று கூறும் இக்கவிதையில்

மரண தண்டனையை விதித்த நீதிபதி
பேனா முனையைக் குத்தி உடைக்கிறார்

என்ற பகுதி திடுக்கிடவைக்கிறது. சற்றும் எதிர்பாராத உள்நுழைவு இந்தப் பகுதி. கவிதையில் நீதித் துறைக்கு இடம் கிடைக்கிறது. அதே போல் ‘முதல் பாவம்’ என்ற கவிதையில் ‘உனக்கான சாகித்யம்’ என்னும்போது முதல் தடவையாகத் தமிழ்க் கவிதையில் ‘சாகித்யம்’ என்னும் சொல் நுழைகிறது. இலக்கியத்தைக் குறிக்கும் இந்த ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு சகிதம் – உடனுறைவது – என்று பொருள், சொல்லும் பொருளும் எப்போதும் சகிதமாக இருப்பதால் கவிதைக்கு – இலக்கியத்துக்கு – சாகித்யம் என்று பெயர் என ஸம்ஸ்கிருத நூற்பா ஒன்று சொல்கிறது. ‘ஆகவே நானும்’ என்ற தொகுப்பை அடுத்து அதைப் போலவே கவிதைக்குரிய பல கவிதைகள் அடங்கிய தொகுப்பு ‘நடுக்கடல் மௌனம்’.

‘ஆகவே நானும்’ தொகுப்புக்கு மற்றொரு நல்ல கவிஞரான குவளைக்கண்ணன் முன்னுரை எழுதியிருக்கிறார். அவரை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றில் ஒரு கவிதையை இடையில் சில பகுதிகள் காணாமல் போன கவிதை என்று குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து என்னை முன்னோர்களின் கண்டுபிடிப்பு ஒன்றுக்கு இட்டுச் சென்றது. அதாவது ஒரு கவிஞர் எழுதும் கவிதையின் முழுப் பகுதியும் அவருக்கே கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. கவிதை என்பது உண்மையில் பலவாகத்தான் எப்போதும் இருந்துவருகிறது. இவற்றை எல்லாம் தொகுத்துக் குழுவாக்கலாம் என்றும் முன்னோர்கள் கண்டனர். ஒரு திணையைப் பற்றி ஒருவரோ பலரோ எழுதலாம். அப்படியோ ஒரு துறையைப் பற்றி ஒருவரோ பலரோ எழுதலாம். ஒருவர் கையாண்ட சொல்லை, கருத்தை, உவமையை, உருவகத்தை மற்றவரும் கையாளலாம் என்பதும் முன்னோர்களின் செய்யுளியலில் சொல்லப்படாத, ஆனால் கவிஞர்களால் பின்பற்றப்பட்ட ஒரு முறை. வேத உபநிடதங்களில் இது உண்டு, உலக இலக்கியத்திலும் இது உண்டு. பல எடுத்துக்காட்டுகளை நான் சேகரித்த பின் எனக்குத் தெரியவந்த விஷயம். குறைந்தது ஒரு நூறாண்டுக்கு முன்பு சி.வை. தாமோதரம் பிள்ளை ஒரு வெண்பாவைக் குறிப்பிடுகிறார். இது அவர் பதிப்பித்த ‘வீரசோழியம்’ நூலின் முன்னுரையில் காணப்படுகிறது.

முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுவர் பொற்புலவர் – அன்னோர்
நடையிடையத் தம்வழியே மாட்டி மொழி மாற்றல்
கடையிடையார் மாட்டுவினை காண்.

முன்னோர்களின் பொருளை மட்டுமல்லாமல் அந்தப் பொருளை எந்த மொழியில் சொன்னார்களோ அதே மொழியில் சொல்லிப் புலவர்கள் போற்றுவர் என்பது இந்த வெண்பாவின் பொருள். இந்த வெண்பாவைத் தனது பதிப்புக்கும் பொருந்தும் என்று பிள்ளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

நவீன தமிழ்க் கவிதையின் கவிஞர்கள் இந்த யுக்தியைக் கையாள்கிறார்கள். ஆத்மாநாம் செய்தார். சிபிச்செல்வன் செய்தார். ஒரு பகுதி ஆத்மாநாம் கவிதையும் மற்றொரு பகுதி தனது கவிதையாகவும் பெருந்தேவி செய்திருக்கிறார். யுவன் சந்திரசேகரிடம் உண்டு. இதையே தேவேந்திர பூபதியிடமும் பார்க்கலாம். சங்க இலக்கியச் செய்யுள்கள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது அவர்கள் எல்லோரும் ஒரு மையத்தை உடையவர்கள் என்பது புலப்படுகிறது. நேரில் அறிந்தவர்களோ அறியாதவர்களோ, கவிதைகள் அவர்களுக்குத் தங்குதடையில்லாமல் கிடைத்து அவர்களை ஒருங்கிணைத்தது அவர்களின் இயல். அப்படியேதான் இன்னும் நிகழ்கிறது. இது தமிழ் மரபா, இந்திய மரபா அல்லது ஆசிய மரபா? இப்படி ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளும் பண்பு தோழமையுடையதாக இருக்கிறது. அப்படிக் கண்டுகொள்பவர்களை ஒரு குழு என்று சொல்லலாம். சங்கம் என்றாலும் அதேதான். சில உதாரணங்கள்.

நீரால் ஆனது (பக். 23)
ஏதிலி போல் (பக் 26)
பித்ருக்கள் (பக் 27)
இருபத்தி மூன்று வருடங்களை (பக் 31)
மனக் குகை (பக் 33)
தோற்றப் பிழையா (பக் 45)
எதிரெதிர் நிஜம் (பக் 69)

கையிலிருக்கும் தேவேந்திர பூபதியின் தொகுப்பு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. தொகுப்புக் கவிதைகளை மூன்றாகப் பிரிப்பது தொன்மையான தமிழ் மரபு. அகநானூறு என்ற நூல், நித்திலக் கோவை, களிற்றியானை நிரை, மணி மிடை பவளம் என்ற மூன்று பிரிவுகளாக ஒவ்வொன்றும் தனியே பெயரிடப்பட்டு அமைந்துள்ளது. மனுஷ்யபுத்திரன் கவிதைத் தொகுப்பு ஒன்றைப் பற்றி எழுதும்போது இந்த மூன்று விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். தேவேந்திர பூபதியின் தொகுப்பு அலைமுகம், காயல், நங்கூரம் என்று மூன்று கோப்புகளால் அமைந்துள்ளது. சர்க்கம், இலம்பகம், படலம் முதலிய உட்பிரிவுப் பெயர்கள் பெரிய காவியங்களுக்குக் கொடுக்கப்பட்டதால் நவீன கவிதையின் உள்ளமைப்புப் பிரிவுகளைக் கோப்புகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இம்மூன்று கோப்புகளில் காயல் 11 கவிதைகளைத்தான் பெற்றுள்ளது. முதலது 22ம் மூன்றாவது 21ம் ஆக 54 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

புராதனக் கவிதைகளில் சுவைதான் முக்கியமான விஷயமாகக் கருதப்பட்டது. நவீன கவிதையில் முக்கியமான விஷயம் எனக்கு ‘நயம்’ என்று தோன்றுகிறது. எதையும் நயமாகச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கவிஞர்கள் மனதில் செயல்படுவதாகத் தோன்றுகிறது. நயமாகச் சொல்லப்பட்ட ஒன்றில்தான் சுவையை எதிர்பார்க்க முடியும். நயமாகச் சொல்வதற்குக் கவிஞர்கள் திறமை உடையவர்களாக இருக்க வேண்டும். வெறும் திறமை அல்ல, பெரிய திறமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெரும் திறமை பூபதியிடம் இருக்கிறது. ‘நயம்’ என்ற திறமை நவீன காலத்துக்கு மிகவும் தேவைப்படுகிற ஒரு பண்பு என்று தெரிகிறது. இந்தப் பண்பு பல கவிஞர்களிடம் காணப்படுகிறது. ஒரு கருத்தை வாசகன் ஏற்றுக்கொள்ளவும் பின்பு ரசிக்கவும் இந்த நயம் பெரிதும் உதவுகிறது.

பெண் கவிஞர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று ஒரு கவிதை. பெண்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றால் கவலைப்பட வேண்டும். ஆனால் பதற்றத்தில் இருப்பது பெண் கவிஞர்கள்தானே, அதனால் நமக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பதற்றம் என்ற உணர்வை இலக்கியம் கண்டுகொண்டது 70களின் தொடக்கத்தில்தான் என்பது என் அனுமானம். சங்கர நாராயணனின் ‘பதற்றம்’ என்ற கதையையும் அதற்கு முன் திலீப் குமார், ரா. ஸ்ரீநிவாஸன் ஆகியோரது கதைகளையும் ஆராய்ந்தபோது பதற்றம் அரசியல் கட்சிகளால் மக்களுக்குத் தரப்பட்ட ‘மொய்’ என்று தெரிந்துகொண்டேன். ‘கலவரம்’ என்ற நிலையும் அப்படித்தான். இந்த இரண்டு நிலைகளும் நவீன வாழ்க்கையை ஆக்ரமித்துக்கொண்டுள்ள உணர்வுகள் போலும். சங்கர ராம சுப்ரமணியன் இரண்டு கவிதைகள் நாளின் கலவரத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பூபதியின் பதற்றக் கவிதை

எனக்குச் சில கதாபாத்திரங்கள் போதும்
நீண்ட கதையைச் சொல்லும்
ஆவேசமும் எனக்கில்லை.

என்று தொடங்குகிறது. இது ஒரு பிரகடனம். நயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக் கதை சொல்லும் உத்வேகம் தனக்கு இல்லை என்கிறார் பூபதி. மக்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் வாழ்கிறார்கள். சிதறல்களாக இருக்கிறார்கள். இதே கவிதையின் இரண்டாம் பகுதி, ‘இட்லி’, ’சப்பாத்தி’, ’பிரட் வித் கூழ்’ என்று பேசுகிறது. இந்த உணவுகள் – இட்லிகூட – கவிதையில் கூறப்படவில்லை தெரியுமா? சங்க இலக்கியம் பல வகையான இறைச்சியைக் குறிப்பிட்டுள்ளது. பாணர்கள் மீன் விரும்பிகள் என்று செய்யுள்கள் சொல்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இறைச்சி வேண்டாமே என்ற கருத்தும் நயமாகக் கூறப்பட்டுள்ளது. பின்னால் வந்தவர்கள் தாவர உணவைக் குறிப்பிட்டார்கள். வள்ளலார் தனித் தனி முக்கனி பிழிந்தார். கவிதையில் இப்போதுதான் உணவு பேசப்படுகிறது.

கைலாஷ் – சிவனுக்குக் கைபேசி தொலைந்துபோனது என்கிறது ஒரு வரி. இந்த வரி நகுலனின் வண்ணத்துப்பூச்சியை நினைவூட்டுகிறது.

எனது இலக்கியக் கவலை குறித்து
எனது பணிமையம் ஒரு மயிரளவும்
அக்கறை படுவதில்லை

என்கிறது ஒரு பகுதி. மயிர்? கெட்ட வார்த்தையா? ஆம். ஆனால் எல்லோருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த வார்த்தையைப் பேச்சில் நிறைய மௌனி சேர்த்துக்கொள்வார் என்று மௌனி பற்றி சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையில் தெரிகிறது. ஆனால் நான் பார்த்த மௌனியிடம் இது காணபப்படவில்லை. 40-50 ஆண்டுகளுக்கு முன்பு மயிர், கம்னாட்டி (கைம்பெண்டாட்டி), ராஸ்கல், படவா (இது படுவாய் என்பதன் திரிபாம்), மொள்ளமாரி, முடிச்சு மாறி, கேப்மாறி போன்ற சொற்கள் தாராளமாய்ப் புழக்கத்தில் இருந்தன. 19ம் நூற்றாண்டு இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் இதழ்களில் விரசமான துணுக்குகள் வெளியாகின என்று ரா.அ. பத்மநாபன் ஓர் ஆய்வு நூலில் தெரிவிக்கிறார்.

பணிமையம் – ஆட்சி அலுவலகங்கள். இவை பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி, ஒரே மாதிரியாகத்தான் இருந்துவருகின்றன. தனியார் நிறுவனங்களின் புதிய வரவு, அக்கறையற்ற பணிமையத்தைப் பற்றி பூபதியின் கவிதை குறிப்பிடுகிறது. நிர்வாக இயந்திரங்களுடன் பரிச்சயமான எழுத்துகள் தமிழில் குறைவு. தமிழாசிரியர்களே கவிதை எழுதிக்கொண்டிருந்த காலத்துக்கு மாறானது நமது காலம். வெவ்வேறு தொழில் புரிபவர்கள் இன்று கவிதை எழுதுகிறார்கள். கவிதை உலகில் அந்தத் திணைகள் இடம்பெறுகின்றன. அலுவலகம் பற்றி எழுதுபவர்கள் இரண்டொருவர்தான். பூபதி அவர்களில் முக்கியமானவர். முந்திய தொகுப்பில் ‘என் பிரிய அலுவலகம்’ என்ற கவிதையும் ‘சிந்தையின் பணியாளர்’ என்ற கவிதையும் குறிப்பிடத் தகுந்தவை. பணியில் ஓய்வு பெற்றவரைப் பற்றி அழகியசிங்கர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

வீடுகள், விடுதிகள், கலைக் கூடங்கள் பற்றியும் தமிழ்க் கவிதைகள் கவனிக்கத் தவறவில்லை. பூபதியின் கவிதை ‘அறை’ பற்றிப் பேசுகிறது. ‘யாருமற்ற அறை’ என்ற முந்தைய தொகுப்புக் கவிதையுடன் இத்தொகுப்பின் ‘குளிர் அறையின் கொடூரம்’ என்ற கவிதையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வேறு வேறான அனுபவ நிலைகளைத் தருகின்றன. பூபதியின் கவிதையில் தட்ப வெப்பம் பற்றி நாம் அடிக்கடி கேட்கிறோம்.

கவிதையில் என்னென்ன இருக்க வேண்டும்? எல்லாமும்தான் இருக்க வேண்டும். இதைத் தொல்காப்பியர் வகைப்படுத்தி தெய்வம், உணவு, விலங்கு, பறவை, இசை மற்றும் செய்தி என்று சொல்கிறார். ஒரு நூல் முழுமையானதென்றால், ஒரு கவிஞர் முழுமையானவர் என்றால் இவை அனைத்தும் பரிமளிக்க வேண்டும். ஒரு செய்யுளில் தெய்வம் குறிப்பிடப்படவில்லை என்றால் அந்தத் திணையை வைத்து அதற்குரிய தெய்வம் பின்னே உள்ளதாகக் கொள்ள வேண்டும். இல்லாமையும் ஒரு வகை இருப்பு. பூபதியின் கவிதையில் விலங்குகள், பறவைகள் இயல்பாக இயங்குகின்றன. வினோதமும் சுவையும் உடையவை. முந்தைய தொகுப்பில் ‘அலைபாயும் பூனை’ என்றொரு கவிதை.

நடந்து செல்லும் யுவதியின்
கைப்பையில் தலை தூக்கிப்
பார்க்கும் ஒன்றையும் கண்டேன்

என்று அழகாகக் கூறப்படுகிறது. இந்தப் பூனைக்கும் இத்தொகுப்பில் வரையப்படும் பூனைக்கும் உள்ள வேறுபாடு கவனிப்புக்குரியது. இந்த ஒப்புநோக்குதலின் பின்னே ஞாபகம் செயல்படுகிறது.

கடந்த முறை வந்த பூனை
என்னை உற்றுப் பார்க்கிறது
இந்தப் பூனைதானா என நானும்
அவனே தானா எனப் பூனையும்
மீச்சிறு கணத்திலிருந்தோம்.

இதில் மறுஜன்மம் என்பதும் கொஞ்சம் மினுக்குகிறது. ‘என்போம்’ என்பதில் அஃறிணை உயர்திணை மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இலக்கண இசைவு உண்டென்றே நம்புகிறேன்.

பா. வெங்கடேசன், சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகளில் தெய்வத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். பல ஆண்டுகட்கு முன்பு பிரேம் வெளியிட்ட ‘உப்பு’ என்ற தொகுப்புக் கவிதைகளும் சில நினைவுக்கு வருகின்றன. பூபதியின் கவிதைகளில் ‘ஆலமர் செல்வன்’ முக்கியமான கவிதைகளில் ஒன்று. ‘தெய்வம் தீண்டியவர்’ என்ற கவிதையும் கவனிப்புக்குரியது. ‘ஆலமர் செல்வன்’ புதிய மொழியில் சொல்லப்பட்ட கவிதை. பூபதியின் கவிதையில் கடவுள், கடவுட்கதைகள் இயல்பாக எழுகின்றன. ஆனால் ‘உத்திரவாதம் தந்தவர்கள்’ என்ற கவிதையின் இந்தப் பகுதிதான் வினோதமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

போன ஜென்மத்தில் பார்த்தவனெல்லாம்
இந்த ஜென்மத்திலும் கண்டு
சிரித்துவிட்டுப் போகிறார்கள்

இருந்தாலும் தேவேந்திர பூபதியை மறுமுறை பார்க்கும்போது நான் சிரிக்க விரும்புகிறேன்.

சென்னை 31.3.2015