பல்லாண்டு பல்லாண்டு…

11-04-2016 அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் குறிப்பு

சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் கோவை சென்றிருந்தேன். ஓர் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக. ஒரு நண்பரைச் சந்தித்துப் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் அதற்குப் பதில் சொல்லாமல் வேறு ஏதோ பேச இருப்பது போல் சும்மா நின்றிருந்தார். ஆனால் சில நிமிடங்கள் ஆனபின்பும் ஒன்றும் பேசவில்லை. சரி போகலாம் என முயன்றபோது, ஞானக்கூத்தன், உங்களுக்கு வயது என்ன ஆகிறது என்று கேட்டார். நான் சொன்னேன். அவர் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அப்பா… நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு பிடிக்கவில்லை. அவரிடமிருந்து கழன்றுகொள்ள விரும்பி, பிறகு பார்க்கலாம், வேறு நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்று நகர முயன்றேன். உடனே அவர் என்னை நிறுத்தி, கோவையில் உங்களுக்கு நண்பர்கள் யார் சொல்லுங்கள். இன்று மாலைக்குள் அவர்களைப் பகைவர்களாக்கிக் காட்டுகிறேன் என்றார். நான் கையை உதறிக்கொண்டு நடந்தேன்.

இந்த நிகழ்ச்சி பின்னொருநாள் எனக்கு நினைவுக்கு வந்தது. அன்று எனக்குப் பிறந்த நாள். எல்லா சமூகங்களிலும் ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது மரபாக இருந்துவருகிறது. ராம நவமி, கிருஷ்ண ஜயந்தி என்று தெய்வங்களின் அவதார நாள்களைக் கொண்டாடுவது, மன்னருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவது என்பது தொன்று தொட்டு வருகிறது.

சிலசமயம் ஒருவர் பிறந்த நட்சத்திரமும் பெருமை பெறுகிறது. கேரள மன்னர்களுடைய நட்சத்திரங்கள் கொண்டாடப்படுகின்றன. திருமாலின் நட்சத்திரம் என்று திருவோணத்தைக் கேரள மக்கள் கொண்டாடும்போது அவர்களுடைய மகிழ்ச்சி வெள்ளம் நமக்கும் பொசிகிறது. ‘திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே’ என்று ஆண்டாள் வாழ்த்தப்படுகிறாள்.

பிறந்தநாள் பற்றிய பல சிறுகதைகளையும் தொகுத்திருக்கிறார் ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகமி. இத்தொகுப்பில் 13 எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. மஸ்ஸாசுஸெட்ஸில் பிறந்த 4 எழுத்தாளர்கள், அயர்லாந்தில் பிறந்த இருவர், ம்யூனிக்கில் வாஷிங்டன், நியுயார்க், மிஷிகன், பிலடெல்பியா நகரங்களில் பிறந்த எழுத்தாளர்களின் கதைகள் இவை. க்யோடோ நகரில் பிறந்த ஹருகி முரகமியின் கதையும் இடம் பெற்றுள்ளது. Ethan Canin என்ற அமெரிக்க எழுத்தாளரின் Angel of Mercy, Angel of Wrath என்ற கதை என் ‘ஜோர்டான் ஆந்தை’ என்ற கவிதையை நினைவூட்டியது. பிறந்தநாள் பற்றிய என் கவிதைகளில் ஒன்று ‘சகஜீவி’ என்பது.

*