நவீன தமிழ்க் கவிதையில் நாடகக் கூறுகள்

தமிழ் மணவாளனின் நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும் ஓர் ஆய்வு என்ற நூல் குறித்து

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதை உலகில் செயல்பட்டுவருபவர் திரு. தமிழ் மணவாளன். கவிதைகள் வெளியிடுவது, கட்டுரைகள் தொகுப்பது மற்றும் கவிஞர்கள் சந்தித்து அளவளாவக் கூட்டங்கள் கூட்டுவது என்று தொடர்ந்து கவிதை பற்றிய சிந்தனையிலிருந்து தனது பார்வையை அகற்றாதவர் தமிழ் மணவாளன். அவர் நவீன தமிழ்க் கவிதையில் நாடகக் கூறுகள் என்பது பற்றி குறிப்பாகக் காலமும் வெளியும் பற்றி ஆராய்ச்சி செய்து தனது உழைப்பை முனைவர் பட்டத்துக்கான ஆய்வேடாக மாற்றித் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தையும் வென்றிருக்கிறார். அந்த ஆய்வேடுதான் பரவலான வாசகர் உலகுக்கு இப்போது நூல் வடிவாகக் கிடைத்திருக்கிறது.

ஆய்வேட்டின் வடிவ அமைப்பின்படி இந்தக் கட்டுரைகள் நான்கு இயல்களில் விரிந்திருக்கிறது. தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதைகள், நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக் கூறுகள், நவீன தமிழ்க் கவிதைகளில் பாத்திரப் படைப்பும் உரையாடலும் மற்றும் நவீன தமிழ்க் கவிதைகளில் காலமும் வெளியும் என்ற பெயரிடப்பட்ட நான்கு இயல்களிலும் ஏராளமான கவிஞர்களை, அவர்களது படைப்புகளை எடுத்துக்காட்டித் தனது கருத்துகளை நிறுவியிருக்கிறார் தமிழ் மணவாளன். ஆனால் கவிஞர்களில் நவீன கவிதை இலக்கியத்தின் முன்னோடிகளான ந. பிச்சமூர்த்தி, மயன் என்கிற க.நா. சுப்ரமணியம் இவர்களை அடுத்து வந்த நகுலன், பசுவய்யா என்கிற சுந்தர ராமசாமி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இவர்களைக் கடந்து 70களுக்கு வந்துவிடுகிறார் தமிழ் மணவாளன். எந்தக் காலப்பகுதி ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவருடைய முடிவு. அதைக் குறிப்பிடலாம், அவ்வளவுதான். குறைகூற முடியாது.

மிகப் பழங்காலத்திலிருந்தே இந்திய மக்கள் கலைகளில் பாட்டிலும் நாடகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். சிலருடைய கருத்துப்படி நாடகக் கலைக்கு முந்தியே மன்மதக் கலை இருந்துவந்தது. மனிதனுக்கு மகிழ்ச்சி தரும் கலைகளில் ஒன்றாகவே காமக் கலை போலவே நாட்டியக் கலையும் இசைக் கலையும் இருந்ததாகக் கூறுகிறார்கள். காமக் கலையிலிருந்து பிரித்து, நெறிப்படுத்தி வளர்க்கப்பட்டது நாடகக் கலை என்பது சிலர் கருத்து. வாத்ஸ்யாயனர் காமசூத்ரத்தில் மகிழ்வூட்டும் கலைகளில் ஒன்றாகக் கவி புனைவது இடம்பெற்றுள்ளது. எனவே கவிதை புனைவதும் படிப்பதும் மகிழ்ச்சிக்காகவே. நாடகம் லோகாயதவாதிகளால் உருவாக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கிறார்கள். கவிதை இயல் குறித்த கருத்துகளும் செய்முறைகளும் நாட்டிய சாஸ்திரத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. தொல்காப்பியத்திலும் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புகளில் ஒன்றாக மெய்ப்பாடு குறிப்பிடப்படுகிறது. எனவே வடமொழி, தென்மொழி இரண்டு மரபுகளிலும் நாடகமும் கவிதையும் பிணைந்து காணப்படுகின்றன. தொல்காப்பியம் நாடகத்துக் கூறான மெய்ப்பாடு எப்படித் தோன்றியது என்று கூறுகிறது.

பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப

என்ற நூற்பாவில், மெய்ப்பாடு என்ற கருத்தாக்கம் பண்ணையில் உருவாயிற்று என்கிறது தொல்காப்பியம். பண்ணையென்றால் விளையாட்டு. அதாவது விளையாடுமிடம். விளையாடுமிடத்தில் இருந்தவர்கள்தான் மெய்ப்பாட்டை உருவாக்கினார்கள். அவர்கள் யார், யாரைக் கொண்டு முப்பத்திரண்டு வகை மெய்ப்பாடுகளை உருவாக்கினார்கள்? உரையாசிரியரான பேராசிரியர் சொல்கிறார்:

முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும்
முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும்
பாடலும் கண்டும் கேட்டும் காமம்
நுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய …

என்பது அவருடைய உரை. எனவே வேந்தர், அவருக்குக் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் நாடக மகளிரைக் கொண்டு உருவாக்கப்பட்ட கலைதான் மெய்ப்பாடு என்பது உரையாசிரியர் கருத்து. இதில் முக்கியக் கருத்து ‘கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டைச் சேர்ந்தது மெய்ப்பாடென்பது. எனவே காம நூலில் இடம்பெற்ற கலைகளில் ஒன்றுதான் நாடகக் கலை என்பது இரண்டு மரபுகளிலும் அறியப்பட்ட ஒன்று. இரண்டிலும் களிதான் முக்கியம். காம நுகர்ச்சிதான் முக்கியம். ‘களி’ என்ற சொல்கூட ஆட்டத்துடன் இணையக்கூடியது. கதகளி என்பது நினைவுக்கு வருகிறது. களியாட்டம் என்பதும்கூட. களி என்ற சொல் கள் என்ற சொல்லை வேர்ச் சொல்லாகக் கொண்டு, மகிழ்ச்சிக்கு ஆகுபெயராகவும் அமைகிறது. மகிழ்ச்சியான அனுபவம் என்பதையே களிப்பு சுட்டுகிறது. ‘உண்டு களித்திருப்போரை’ என்பது நவீன காலத்துப் பாரதியின் வாக்கு. கவிதை களிப்பு தர வேண்டும். நாடகம் களிப்புத் தர வேண்டும். களிப்புத் தரவல்லதுதான் நன்றாயிருப்பதன் அடையாளம். களிப்பு மன நிறைவைத் தருகிறது.

தமிழின் எட்டு வகை மெய்ப்பாடுகளில் முதலில் வைத்துக் கூறப்படுவது ‘நகை’ என்ற உணர்ச்சி. நகை ஏன் முதலில் வைக்கப்பட்டது என்பதற்கு உரையாசிரியர் ‘மற்றும் நகை முன் வைத்தது என்னை எனின் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் இவை யென்றும் இயைபு இல்லன அல்ல. என்றதற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன் வைத்தான்’ என்று விளக்குகிறார். மெய்ப்பாடு என்பது விளையாட்டுத் தொடர்பானதால் நகை அதற்குத் தொடர்பற்றது அல்ல என்பதைக் காட்டத்தான் என்பது அவர் தரும் விளக்கம்.. ஆனால் உரையாசிரியர்கள் சொன்ன நகை பற்றிய விளக்கம் அருமையாக இருந்தலும் சற்றுக் கூடுதலாக ஒரு விளக்கம் நகைக்குத் தர வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு நாடகத்தைப் பார்க்கப்போகிறவன், ஒரு கவிதையைப் படிக்கப்போகிறவன் தன்னுடைய இலக்கைக் கண்டதும் வெளிப்படுத்தும் மெய்ப்பாடு என்ன? மகிழ்ச்சி – அதனால் ஏற்படும் முகமலர்ச்சி. எனவே தொடக்க உணர்ச்சி நகை என்பது பொருத்தமானதுதான்.

வடமொழியில் ‘சிருங்காரம்’ என்ற உணர்ச்சி முதல் உணர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. உணர்ச்சிகளுக்கு ஒன்று இரண்டு என எண் இடுவதும் வைப்பு முறையில் இதற்குப் பின் அது என்பதும் வடமொழியில் இருப்பதாகத் தெரியவில்லை அல்லது நான் இன்னமும் ஆராய வேண்டும் போல. சிருங்காரம்தான் தலையாய சுவை என்று போஜர் சொல்லியிருக்கிறார். பரிமேலழகரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அறம், பொருள், இன்பம், வீடு என்று வகுத்துக்கொண்ட வைதிக விழுமியங்களில் இன்பம் இல்லை என்றால் மற்ற மூன்றிலும் ஈடுபாடு உண்டாகாது. அறம் செய்வதில், பொருள் செய்வதில், வீடு பேற்றை எண்ணுவதில் இன்பமில்லை என்றால் அவற்றை யார் நாடுவார்கள். முதல் உணர்ச்சியாக சிருங்காரத்தைச் சொன்னது பார்ப்பவரைக் கவரும் சக்தியின் பொருட்டு. அது ரதி, ப்ரிதி என்றும் வகைப்படுவதுண்டு. இன்று திரைப்படம் பார்ப்பவர்களை எதனால் கவர்கிறது? சிருங்காரம்தான் என்று சொல்லத் தேவையில்லை. கவரும் சக்தி சிருங்காரம். ஏற்புடைமையைக் காட்டுவது நகை.

இங்கு சிறிதளவு வட, தென் இந்திய மரபுகளைக் கூறுவதற்குக் காரணம் இந்தியர்களின் நாடக ஈடுபாடு மிகப் பழங்காலம் தொட்டே இருந்துவருவதையும், அது நவீன காலம் எனப்படும் தற்காலத்தில் உயிர்த் துடிப்புடன் இருப்பதைத் தமிழ் மணவாளனின் ஆய்வேடு காட்டுகிறது என்பதையும் கூறத்தான்.

மேற்சொன்ன தமிழ் மரபுடன் மேற்கத்திய மரபையும் தமிழ்வாணன் எடுத்துக் காட்டுகிறார்.

காலம், வெளி பற்றி விவரமான செய்திகள் தந்து ஆய்வேட்டை சுவாரசியமாக்குகிறார் தமிழ் மணவாளன். ஆய்வுக்கு விக்கிபீடியாகூட உதவுகிறது. நிறைய கவிஞர்களின் கவிதைப் பகுதிகள் படிப்பதற்கு சுவை கூட்டுகிறது. ஆய்வுக்குத் தேவையான பொருள் எங்கே கிடைக்கிறது என்று தேடிப் பிடித்துக் கவிதைகளை ஆய்வேட்டில் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார். ஆய்வேட்டைப் படித்து முடிக்கும்போது நிறைய கவிதைகளை எதிர்கொண்டபோது நமது காலக் கவிதையில் நாடகக் கூறுகள் உயிர்ப்புடன் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது. ஒரு மொழி ஆரோக்யமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இதுதான் நல்ல அடையாளம் அல்லவா?

07-09-2015