ஜோர்டான் ஆந்தை

உங்கள் வீட்டுப் பால்கனியில் நேற்று
ஆந்தை ஒன்று வந்ததாம். நீங்கள் அதனுடன்
பேசிக் கொண்டிருந்ததாய்த் தகவல் கிடைத்தது
உண்மையா? என்றார்கள் உள்ளே வந்தவர்கள்.

‘காபியா டீயா? என்ன குடிக்கிறீர்கள்?’ என்றேன்.
‘உங்கள் வீட்டுப் பால்கனியில் ஆந்தை
வந்தது உண்மையா இல்லையா’ என்றார்கள்.

உங்கள் கேள்வி புரியவில்லை என்றேன்
படித்தவர்தானே! ஆந்தை என்றால் புரியாதா!
என்றார் அவர்களில் ஒருவர்.

புரிந்தால் எதற்குக் கேட்கப் போகிறேன் என்றேன்.
ஆந்தை என்பது ஒரு பறவை
அதற்குக் கண்கள் நம்மைப் போல
முன்பக்கத்தில் வைத்திருக்கும் என்றார் அவர்.

எனக்கு ஞாபகம் வந்தது. நேற்று
மாலை நான்கு மணி அளவில் எனது
பால்கனியில் நீண்ட நேரம்
வெறுமனே உட்கார்ந்துவிட்டுப் பின்பு
வெருட்டென்று புறப்பட்டு
அந்தி விசும்பில் புள்ளியாய் மறைந்த ஆந்தையை.

ஆந்தை அரிய பறவை இனமென்றும்
வந்தால் தொலைபேசியில் சொல்லும்படியும்
அவர்கள் என்னிடம் கூறிவிட்டுப் போனார்கள்.

இரண்டொரு நாட்கள் நான்கு மணி ஆகியும்
ஆந்தை வரவில்லை. நானும்
ஆகாயத்தைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப் போனேன்
வந்தது பாருங்கள் ஒருநாள் அந்த ஆந்தை,
அதே இடத்தில் இறக்கைகளை அடக்கிக் கொண்டு
உட்கார்ந்தது. அரைமணிநேரம் ஆயிற்று.
அண்டை அயல் வீட்டார் வந்து கூடினார்கள்.
அதிகாரிகளுக்கு நான் தொலைபோன் செய்தேன்
அவர்களும் விரைவில் வந்தார்கள்
அருகிலே நின்று பார்வையிட்டார்கள்
அவர்களில் ஒரு பறவை ஞானி சொன்னார்
இந்த ஆந்தை எகிப்தில் மட்டும்தான் வாழ்கிறது
ஜோர்டான் சிரியா இஸ்ரேலிலும் உண்டென்கிறார்கள்
உயிருடன் பிடிக்கப் போகிறோம் என்றதும்
பறந்து போய்விட்டது ஆந்தை மொழி புரிந்ததுபோல.

ஆந்தையின் இரண்டு கண்களும் என் நினைவில் பதிந்தன.
இப்போது நான் வானத்தைப் புதிதாய்ப் பார்க்கிறேன்.

‘என் உளம் நிற்றி நீ’ (காலச்சுவடு, 2014) தொகுப்பிலிருந்து