சகஜீவி

ஊர்வலம் புறப்பட்ட கோவில் பெருமாளோடு
மழைக்குப் பயந்து சாமி தூக்கிகள்
அவசரம் அவசரமாக ஓடினார்கள்.

அணைந்து போன தீவட்டி ஒன்றின்
நறும்புகை வீட்டுக்குள் வந்தது.

காவிரி ஆற்றில் புனித நீராடலை
ஒத்திப் போட்டாளாம் எங்கள் பாட்டி.

அந்தப் பொழுதில் பிறந்தது யாராம்?
வேறு யாராம்? நானேதான் அது.
எங்கள் வீட்டின் எதிர்ப் பக்கத்தில் அப்போது
பன்றி ஒன்றும் குட்டிகள் ஈன்றதாம்,
வேறு சமயம் இல்லாதது போல.

எனக்குப் பிறகு தம்பி தங்கைகள்
எட்டுப் பேர்கள் வீட்டை நிறைத்தார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி விட்டு.

எங்கும் அம்மா போவதே இல்லை.
எங்கு போனாலும் பின்னே பிள்ளைகள்.

அன்றைக் கொருநாள் அனுமார் கோயிலுக்குப்
போகப் போவதாய் அம்மா சொன்னாள்
ஒருவரும் தன்னுடன் வரக் கூடாதாம்.

வீட்டில் யாரோ புதியவர் நுழைந்தார்
பள்ளிக்கூடத்து வகுப்புப் போலிருந்த
வீட்டைப் பார்த்துத் திடுக்கிட்டார்
எல்லாம் உங்கள் பிள்ளையா என்றார்.
அம்மா என்னைக் காட்டி
தங்கையின் பிள்ளை உற்சவத்துக்கு
வந்திருப்பதாய்க் கூசாமல் சொன்னாள்.

அம்மா என்னைத் தனியே மடக்கி
உளறிக் கொட்டாமல் இருக்கச் சொன்னாள்.
நானும் நிபந்தனை ஒன்றைப் போட்டேன்.
இனிமேல் என்னைப் பன்றிக் குட்டி
பிறந்தபோது பிறந்தேன் என்று
சொல்லக் கூடாதென்றேன். இசைந்தாள்
அப்புறம் ஒருமுறைகூட அம்மா
சொல்லவே இல்லை. இறந்தும் போனாள்.

விருப்போ வெறுப்போ எனக்குப்
பன்றிகள் மீது இல்லையென்றாலும்
அவற்றைப் பார்க்க நேரிடும்போது
எளிதில் எனக்குப் பார்வை
அவைமேல் படிந்தால் திரும்புவதில்லை.

‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (ஆழி, 2008) தொகுப்பிலிருந்து