உன் விடுதலை உன்னிடம்தான் உள்ளது

நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதத்தைச் சார்ந்தது சாந்தோக்ய உபநிஷத். ‘ஓம்’ என்று உரத்துப் பாடிய பின்புதான் மந்திரங்கள் இசைக்கப்படுகின்றன. உரத்துப் பாடுவது ‘உத்கீதம்’. இந்த உபநிஷத்தின் முதல் நூற்பா “ஓம். இதி ஏதத் அக்‍ஷரம் உத்கீதம் உபாஸுதா. ஓம். இதி ஹ்ருத் காயதி தஸ்ய உப வ்யாக்யானம்” என்று தொடங்குகிறது. முதல் பாகத்தில் ‘சாரம்’ (ரஸ) பற்றிப் பேசிய உபநிஷத் இரண்டாம் பாகத்தில் வாழ்வை உத்கீதமாகக் கொண்டு விளக்கும்போது தேவ, அசுரர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தேவர், அசுரர் இரண்டு குலத்தவருமே ப்ரஜாபதியால் தோற்றுவிக்கப்பட்டவர்கள்தாம். ஆனால் இருவரும் பூசலிட்டுக்கொண்டிருந்தனர். அசுரர்களை வெல்ல உத்கீதத்தைப் பற்றிக்கொள்ளலாம் என தேவர்கள் முடிவு செய்தனர்.

நாசியால் சுவாசிக்கப்படும் ப்ராணனை உத்கீதமாக தேவர்கள் தியானித்தனர். அசுரர்கள் அதைப் பாவத்தால் பாதித்தார்கள். பாதிக்கவே எந்த நாசியால் நறுமணத்தை நுகர்ந்தார்களோ அதே நாசியால்தான் நாற்றத்தையும் நுகர வேண்டியிருந்தது.

அப்புறம் அவர்கள் வாசகத்தை உத்கீதமாகத் தியானித்தார்கள். அசுரர்கள் அதைப் பாதித்தார்கள். பாதிக்கவே எந்த வாயால் உண்மையைப் பேசுகிறார்களோ அதே வாயால் பொய்யையும் பேச நேர்ந்தது.

அப்புறம் அவர்கள் கண்ணை உத்கீதமாகத் தியானித்தார்கள். அசுரர்கள் அதைப் பாதித்தார்கள். பாதிக்கவே பார்க்கக்கூடியதையும் கூடாதவற்றையும் ஒரே கண்ணால் பார்க்க நேர்ந்தது.

அப்புறம் அவர்கள் செவியை உத்கீதமாகத் தியானித்தார்கள். அசுரர்கள் அதைப் பாதித்தார்கள். பாதிக்கவே எந்தச் செவியால் நல்லதைக் கேட்டார்களோ அதே செவியால் கேட்கக் கூடாததையும் கேட்க நேர்ந்தது.

அப்புறம் அவர்கள் மனதை உத்கீதமாகத் தியானித்தார்கள். அசுரர்கள் அதைப் பாதித்தார்கள். பாதிக்கவே சங்கல்பித்ததையும் சங்கல்பிக்காததையும் மனம் கற்பிக்க நேர்ந்தது.

நாசி, வாய், கண், செவி மற்றும் மனம் என ஐந்தையும் அசுரர்கள் பாதித்துவிட்டார்கள். எனவே நல்லது கெட்டதுமான விஷயங்கள், பெருமை சிறுமையான விஷயங்கள் ஒரே இடத்தில் செயல்படுவன ஆயின. தேவர்கள் நல்லனவற்றையும் அசுரர்கள் அவற்றுக்கு எதிரானவற்றையும் விரும்புபவர்களாக சாந்தோக்ய உபநிஷத் உருவகிக்கிறது. தேவ என்ற சொல்லில் உள்ள ‘தே’ என்பது ப்ரகாசத்தைக் குறிக்கிறது. தேவர்கள் ‘தேஜோமயமானவர்கள்’. அசுரர்கள் இதற்கு மாறானவர்கள். அசுரர்கள் இருளாக உருவகிக்கப்படுகிறார்கள். சூரியன் தனது தேரில் குதிரைகளைப் பூட்டியதும் அசுரர்கள் ஓடிவிடுவார்கள் என்கிறது சூர்ய சூக்தம். இங்கு அசுரர்களைக் குறிக்க ‘அதேவ’ என்ற சொல் ஆளப்படுகிறது. ஒளியால் அகற்றப்படும் இருண்மைகளைத் ‘தமஸ்’ என்ற சொல்லால் வைதிகம் குறிக்கிறது. ரஜஸ், ஸத்வ என்ற குணங்களோடு ‘தமஸ்’ என்றும் சேர்த்து குணங்களை மூன்றாகக் கொள்வது மரபு.

அஸத்திலிருந்து என்னை ஸத்துக்கு அழைத்துப் போ
தமஸிலிருந்து என்னை ஜோதிக்கு அழைத்துப் போ
இறப்பிலிருந்து என்னை அமிழ்துக்கு அழைத்துப் போ

என்ற பிரகத் ஆரண்யக உபநிஷத்தில் புகழ்வாய்ந்த வேட்டல் கவிதையில் இரண்டாவதாக சுட்டப்படுவது தமஸ்தான். ஆனால் தமஸ் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். எல்லாப் பிராணிகளிடத்திலும் தேவாசுரப் போராட்டம் இருக்கும் என்கிறது சுவடி. ‘ஸர்வ ப்ராணிஷு ப்ரதி தேஹம் தேவாசுர ஸம்க்ராமோ அநாதி கால ப்ரவத்தி இதி அபிப்ராயஹ’ என்கிறார் ஆதிசங்கரர். ஆனால் முக்ய ப்ராணனை அசுரர்கள் பாதிக்க முயன்றபோது கல்லை மோதிய மண் உருண்டையைப் போல சிதறிவிட்டார்கள் என்கிறது உபநிஷத். முக்ய ப்ராணனை உத்கீதமாகத் தியானிப்பவர்கள் பேத அபேதங்களைக் கடந்தவர்கள் என்கிறது உபநிஷத்.

ஒரு விஷயம். சாந்தோக்ய உபநிஷத் ஜீவிக்கும் உயிர்களிடத்தில் நல்லதும் கெட்டதும் இயற்கையாகவே அமைந்துள்ளன என்று கூறுகிறது. இயற்கையாகவே அமைந்துள்ளன என்றால் இந்த அமைப்பிலிருந்து பிராணிகள் – குறிப்பாக மனிதன் – விடுபட முடியாதா? முடியும் என்கிறது உபநிஷத். கெட்டவை இடையூறுகள்தாம். எனவே அவற்றை நீக்கலாம் என்பதும் கருத்து. இயற்கையாக அமைந்தவை என்றால் மாற முடியாது என்று சிலர் சொல்லக்கூடும். தீயவை என்பன பிராணிகளுக்கு அசுரர்களால் கொண்டுவரப்பட்டன என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும். அது பிராணிகளிடத்தில் இடம்பிடித்துக்கொண்டதும், அப்படி ஒன்று நடந்து பேரூழிக் காலம் போய்விட்டதாலும் பிராணிகள் அவை தமது இயல்புகளில் ஒன்றாகவே நம்பத் தொடங்கிவிட்டன. கணியன் பூங்குன்றன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

என்று கூறும்போது (புறம் 192) உபநிஷத்தின் கருத்துகள் பற்றிய சிந்தனை பிரதிபலிப்பதை அறியலாம். நல்லதும் தீயதும் நம்மிடத்திலேயே உள்ளன என்பது பூங்குன்றன் கருத்து.

நன்மை தீமை என்ற கருத்தமைவுகளை ஒட்டியே நந்தத்தனார் என்கிற புலவரும் சிந்தித்தார் என்று சொல்லலாம். புறநானூற்றில் 218ம் பாட்டாக இவரது பாட்டு அமைந்துள்ளது.

பொன்னும் துகளும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

பொன், பவளம், முத்து, மணி முதலியவை வேறு வேறு இடத்தில் இருந்தாலும் ஒரு மாலையை உருவாக்கும்போது அவை ஒரே இடத்தைச் சேரும். அது போல சான்றோர் மற்ற சான்றோர் பக்கம் சேர்கிறார்கள். சாலார் தம்மைப் போன்ற சாலார் பக்கம் சேர்கிறார்கள். நல்லதும் கெட்டதும் ஒரே இடத்தில் உள்ளன அல்லது நல்லதின் இடத்தில் கெட்டதும் புகுந்துகொண்டுள்ளது என்ற கருத்துக்கு மாறானது போல் தோற்றம் தரும் இக்கருத்து இனம் இனத்தோடு சேரும் என்கிறது. தெளிவான இரண்டு கட்சிகளாகக் காட்டுகிறார் நந்தத்தனார். நல்லவர் எல்லோரும் ஒன்றாகத் திரண்டாலும் அப்படிப்பட்டவரிடம் கெட்டது ஒன்று காணப்படாமல் போய்விடுமா? அவ்வாறே கெட்டவரிடத்தில் நல்லது ஒன்று காணாமல் போய்விடுமா? இப்பாட்டின் கடைசி இரண்டு அடிகள் சிந்தனைக்குரியவை. சான்றோர் சான்றோர் பாலர் ஆவர் என்பதோடு செய்யுள் நின்றிருக்க வேண்டும். சாலார் என்ன ஆவர் என்ற கேள்வியை வாசகர்கள் எழுப்பிக்கொள்ள விட்டுவிட்டுப் புலவர் ஒதுங்கியிருக்க வேண்டும். தெளிவாக்காமை தொனிப் பொருளுக்கு வகை செய்திருக்கும். ஆனால் சாலார் பற்றிப் புலவர் குறிப்பிட நேர்ந்ததற்குக் காரணம் உண்டோ என்னவோ? மாபெரும் பிசிராந்தையார் வடக்கிருந்ததைப் பற்றி எழுதப்பட்ட பாட்டாதலால் ஒருவேளை நந்தத்தனார் சோகமாக ஒரு குறிப்புக் குரலில் செய்யுளை முடிக்க விரும்பினாரோ என்னவோ.

நல்லது, கெட்டது பற்றிய விவாதம் சங்க காலத்தில் நடந்ததாகத் தெரிகிறது. உறையூர் முதுக்கண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியை முன்வைத்து ஒரு பாட்டு செய்திருக்கிறார். ‘விழாக் காலத்தில் கூத்தர்களின் நீர்மை போல முறைமுறையாக ஆடுபவர்களாக நாம் இழிக்கும் இவ் உலகம்‘ என்று ஒரு கருத்துக் கூறும் முதுக்கண்ணன் நல்லது கெட்டது பற்றிக் குறிப்பிடுகிறார்.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்

என்கிறார் புலவர். நல்லதில் நன்மை என்பதோ தீயதில் தீமை என்பதோ கிடையாது. அல்லது நல்லதின் பயனாகப் புண்ணியமும் தீமையின் பயனாகப் பாவமும் விளையும் என்பதில்லை என்பவர்களை இனமாகக் கொள்ளாதே என்கிறார் புலவர். புலவர் பாட்டை ஆராய்ந்தால் அவர் புலால் உண்ணுதல், மது அருந்துதல், போர் செய்தல் – எனவே கொலை செய்தல் – முதலியவற்றைக் கடந்தும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று கருதுவது புலனாகிறது.

முதுக்கண்ணன் சாத்தனார் பாட்டில் இனம் சேராமை என்ற கருத்து சொல்லப்படுகிறது. திருவள்ளுவர் இடத்தில் இதே கருத்து சிற்றினம் சேராமை என்று தெளிவாகக் கூறப்படுகிறது. சிறுமை என்ற பண்பு மக்களிடத்தில் காணப்படும்போது அப்படிப்பட்ட மக்கள் ஒரு குழுவாக சிற்றினம் என்று குறிப்பிடத் தகுதி பெறுகிறார்கள். தீமை, தீவினை என்பவை சிறுமைகளாகும். தீயவர், சிற்றினம் என்று கூறுகையில் அதில் அடங்கும் மக்கள் தமது பிறப்பால் வேறுபட்டவர் என்றாலும் இயல்பாலும் நோக்கத்தாலும் இணைந்தவர் என்றே கருத வேண்டும். சான்றோர், சாலார் இருவரும் பிறப்பால் சேய்மை உடையவர் என்று நந்தத்தனார் கூறியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.வள்ளுவர் 21ம் அதிகாரத்தில் ‘தீவினை அச்சம்’ பற்றி ஆராய்கிறார். உரைகாரர் பரிமேலழகர் இந்த அதிகாரத்தின் பெயரை விளக்கும்போதே ‘பாவம்’ என்ற கருத்தை எடுத்துரைக்கிறார். தீவினை அச்சம் என்றால் பாவங்கள் செய்தற்கு அஞ்சுதல் என்கிறார் பரிமேலழகர். இன்ன செயல்கள் பாவங்களாகும் என்ற தெரிந்திருப்பு ஒவ்வொருவருக்கும் உண்டாதலால் அதை அஞ்ச வேண்டும் என்றாகிறது.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளுக்குப் பரிமேலழகர் ‘பிறிதொரு காலத்தும் பிறிதொரு தேயத்தும் பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் தீமை அஞ்சப்படுவதாயிற்று’ என்று கூறுகிறார். தீவினையின் பயன் தீவினை செய்ததைக் கால தேசம் கடந்து தனக்கு அடுத்த தனது உடம்பையும் பற்றிக்கொள்ளும் என்ற கருத்தை மேலும் இரண்டு குறள்களால் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழி புக்குக் கொல்லும் – அதாவது எங்கே புகுந்துகொண்டாலும் அவனை நீங்காமல் பின்தொடர்ந்து கொல்லும் என்கிறார் வள்ளுவர். இன்னொரு குறளில்

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.

என்கிறார் வள்ளுவர். தீயவை செய்தவர்க்கு நேர வேண்டிய கெடுதல் அவரது பாதத்தின் கீழே நிழல் போல நீங்காதிருக்கிறது. நிழல் நீளும்போது அது ஒருவனை நீங்குவது போல் தோன்றினாலும் அது அவனது பாதத்தின் கீழேயே இருக்கிறது என்கிறார் பரிமேலழகர். இந்த நிழல் விஷயமாக நவீன கவிஞர்களான சுந்தர ராமசாமி மற்றும் எஸ். வைதீஸ்வரன் எழுதிய கவிதைகள் இங்கு நினைவில் வருகின்றன.

தீவினை கைவிடப்பட வேண்டிய ஒன்றாகவும் எண்ணிப் பார்க்கவும் கூடாத ஒன்றாகவும், மறுமையிலும் அதன் பயன் தொடரக்கூடிய ஒன்றாகவும் இருப்பதால் நல்ல வாழ்க்கையை விரும்புவோர் தீவினையைக் கண்டு பயப்படுவார் என்கிறது குறள். தீவினை இயல்பாகவே இருக்கக்கூடிய அல்லது அவற்றை விரும்புகிற மக்கள் குழுவைக் குறள் சிற்றினம் என்கிறது. சிற்றினம் என்றது மனித வாழ்க்கைக்கு அது சிறுமை தரும் என்பதாலும்தான். ‘விடரும், தூர்த்தரும், நடரும் (நடிகர்) உள்ளிட்ட குழு அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்று’ என்று கூறுகிறார் பரிமேலழகர். விஷமிகள், கெட்ட நடத்தையினர் இவர்களோடு நடிகர்களையும் பரிமேலழகர் சேர்க்கிறார். நாட்டியம், நாடகங்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றில் ஈடுபபட்டவர்கள், வளர்த்தவர்கள் பிராமணர்களாக இருந்தும் அவர்கள் கீழோராகக் கருதப்பட்டனர் என்பது வரலாறு. மேலும் நடிகர்களேகூட ஒரு கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்று விதி இருந்ததாம். தமிழ்நாட்டில் ஆடல் பாடல் தொழில்களில் ஈடுபட்டிருந்த பாணர், கூத்தர் மற்றும் விறலியர் (பெண் நாட்டியக்காரர்) சமுதாயத்தில் மேலிடத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும். பாணர் நிலை பற்றி அகநானூற்றுப் பாடல் ஒன்று பரிகாசம் செய்கிறது. ‘சிறு சில் மீன் சீவும் பாண்சேரி’ என்ற புறம் 348 பாட்டு பாணர்களின் உணவுப் பழக்கத்தைக் கூறுகிறது. மீன் சீவும் என்பதில் உள்ள சீவும் என்ற சொல்லுக்குப் பிடித்தல் என்று பொருள் தருகிறார் துரைசாமிப் பிள்ளை. ஆனால் நமக்கோ சீவுதல் என்ற சொல் இக்காலத்தில் என்ன பொருள் தருகிறதோ அதைத்தான் தருகிறது. மீன் சீவுகையில் வெளிப்படும் குருதிப் பெருக்கை மறைக்கவே அப்படிப் பொருள் கூறப்பட்டுள்ளது போலும். பரதவர்களைக் கொடியவர்கள் என்றது ஒரு நற்றிணைப் பாட்டு. பாணர் வேறு குலத்தினர் ஆயினும் புலால் உணவினர் ஆவர். இப்பாட்டிலேயே உழவர்கள் நெல் அறுவடை செய்துகொண்டிருக்கத் தேனடையிலிருந்து குயவர்கள் தேனை வடித்துக்கொண்டிருந்தனர் என்றும் சொல்கிறது. உழவர் மட்டுமே தங்கள் தொழிலைச் செய்துகொண்டிருக்க குயவர்களும் பாணர்களும் குடிக்கவும் தின்னவும் தயாராகிக்கொண்டிருந்தனர் என்று கூறுகிறது இப்பாட்டு; பின்னர் பாணர்களின் நிலைமை இறங்கிவிட அவர்களது பண்ணும் நகைப்புக்கிடமானது என்கிறது நந்திக் கலம்பக வெண்பா. பாணர்களின் பாட்டு, இப்படியாக ஆடல் மகளிர் நிலைமையினும் இறக்கம் கொள்கிறது. விறலியர் என்று அழைக்கப்பட்ட இவர்கள் ஆண்கள் பார்வையில் காம நினைப்பை ஏற்படுத்தக்கூடியவர்களாகவே இருந்தார்கள் என்று சொல்லலாம். விறலியின் இடுப்பும் பாட்டில் குறிப்பிடப்படுகிறது. அதியமான் நெடுமான் அஞ்சி ஔவையாரை எப்படிக் கூப்பிடுகிறார் தெரியுமா?

இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி!

என்று கூப்பிடுகிறார் அதியமான். அதியமானிடம் ஒரு குறிப்புத் தோன்ற பதில் சொல்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அதியமான் ஒரு மன்னன்; ஒரு வள்ளல்; இருந்தாலும் ஒரு பெண்ணை – ஒரு புலவரை – அவருடைய இடுப்பு, கண், நெற்றி இவற்றைக் குறிப்பிட்டுப் பேசலாமா? செய்யுள் மரபில் இதெல்லாம் தடுக்கப்பட்டதில்லை. விறலியர் விஷயத்தில் இடுப்பு மற்றவர் கவனத்தைக் கவர்கிறது என்பதுதான் நான் குறிப்பிட விரும்புவது. ஔவையாரைப் போலவே கிள்ளிவளவனை நல்லிறையனார் என்ற புலவர் பாராட்டும்போது

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
கோடை ஆயினும் கோடி ….
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந…

என்று சொல்கிறார் புலவர். கோடைக் காலத்தில் என்றாலும் சிறிதளவாவது தண்ணீரைக் கொண்டிருக்கும் காவிரியாற்றுக்கு உவமையாக விறலியின் இடுப்பைக் கூறுகிறார் புலவர். ஆடுமகள் இடுப்பு வாடி இருப்பதைப் புலவர் கூறும்போது அவர் வஞ்சப் புகழ்ச்சியாகத்தான் கூறுகிறார். விறலியர் ஆட்டம் எப்படி இருந்தது என்பதைத் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சுவர் ஓவியங்களில் பார்த்தால் தெரியும். எனவே ஆடல் பாடல் சம்பந்தப்பட்டவர்கள் நல்லுறவுக்கு உரியவர் அல்லர் என்று பரிமேலழகர் கூறுகிறார். நாடகம் மக்களிடம் கலை என்ற அளவில் போற்றப்பட்டாலும், நாடகக் கலைஞர்கள் மதிக்கப்படவில்லை. இன்றும் நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள் என்று சில திரைப்பட நடிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போலவே உதய நாழிகைக்குப் பயிற்சி செய்ய வேண்டிய நாதஸ்வர மேளக் கலைஞர்களுக்கும், வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும், மற்ற வீடுகளுக்கிடையே வீடு கிடைப்பதில்லை. நடனக் கலைஞர்களுக்கும் இதே நிலைதான். வாத்தியக் கலைஞர்களுக்குச் சில ஊர்களில் தனியே வீதி விடப்பட்டிருப்பது இக்காரணம் பற்றியும் இருக்கும்.

திருவள்ளுவர் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் இரண்டாவது குறளில்

நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பு ஆகும் அறிவு

என்கிறார். தண்ணீர் அது சேரும் பூமியால் மாறிவிடுவது போல ஒருவனது அறிவு அவனுடைய சேர்மானத்தில் மாறுகிறது என்று எடுத்துக்காட்டு உவமையால் விளக்குகிறார். இந்த அதிகாரத்துப் பத்துக் குறள்களில் ஏழில் வள்ளுவர் ‘மனம்’ பற்றிப் பேசுகிறார். மனம் ஒரு முக்கியமான பண்டம் என்பது அவர் கருத்து. இதன் பாதிப்பில்தான் வாழ்க்கையின் தரம் நிர்ணயமாகிறது. பரிமேலழகர் பாபங்கள் பற்றிச் சொன்னதும், வள்ளுவர் மனத்தைப் பற்றிச் சொன்னதும் கட்டுரைத் தொடக்கத்தில் நான் கூறிய உபநிஷத்தை நினைவுபடுத்துகிறது. அசுரர்கள் பாபத்தைக் கொண்டுதான் தீமையை ஊட்டுகிறார்கள். கண், வாய், மூக்கு, செவி இவற்றை அடுத்து அசுரர்கள் மனத்தைப் பாவத்தால் பாதிக்கிறார்கள் என்கிறது உபநிஷத். பரிமேலழகர் இவ் அதிகாரத்தின் 9ம் குறளுக்கு உரை எழுதுகையில் உபநிஷத்தைக் காட்டி தாமஸ குணத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் முக்யப் பிராணனிடம் தீமைகள் பலிக்காது என்று உபநிஷத் சொல்வதை வள்ளுவரும் உரையாசிரியர் பரிமேலழகரும் பேசவில்லை.

வள்ளூவர் ‘நீர் நிலத்தியல்பால் திரியும்’ என்பதைப் போலவே நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு, திரிகடுகம், மற்றும் நாலடியார் எழுதிய நூல்களின் புலவர்களும் சிற்றினம் சேராமை பற்றிப் பேசியிருக்கிறார்கள். பாத்திரம், அதில் வைக்கப்படும் பொருள் ஆகிய இரண்டின் நிலை என்ற உருவகத்தை வள்ளுவர் வேறு குறளிலும் பயன்படுத்தியிருக்கிறார்.சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக் கோடல் என்ற இரண்டு விஷயங்கள் எல்லோருக்குமே பொதுவானவை. உபநிஷத்தும் வள்ளுவரும் தரும் மனம் பாதிப்புக்குள்ளாவதைப் பற்றிய எச்சரிக்கை உணர்வு படைப்பாளிகளுக்குத் தேவையானது. படைப்பாளி தனது படைப்பில் வெளிப்படும் செய்தி முதலில் அவன் மனதில் நுழைந்து பின்புதான் வெளிப்படுகிறது என்பதை அறிய வேண்டும். நுழைந்தபோதே அதை ஆராய்ந்து அது படைப்பின் மூலம் வெளிப்படத் தகுந்ததுதானா என்பதை சிந்தித்தே பிறகு அதைத் தனது படைப்பில் வெளியிட வேண்டும். தான் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறபோதே படைப்பாளிக்கு அந்தப் படைப்பு வெளியிட்டால் வாசகர்களிடத்தில் எத்தகைய பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிந்திருக்கும் அல்லவா? ஒரு செய்தி சொல்லத் தகுந்ததா இல்லையா என்று முடிவுசெய்ய படைப்பாளியின் கலாச்சாரத்தில் போதுமான அறிவுரைகள் அவனுக்கு உதவி உள்ளன அல்லவா?

*

குறிப்புகள்

  1. சாந்தோக்ய உபநிஷதத்தில் சொல்லப்பட்ட அசுரர்களின் தாக்குதல் பற்றிய கதை ப்ருகத் ஆரண்யக உபநிஷத்திலும் சொல்லப்படுகிறது. தேவாசுரர்கள் என்று தேவர்களை முதலில் வைத்துப் பேசுவது வழக்கம் என்றாலும் தேவர்களுக்கு மூத்தவர்கள் அசுரர்கள். உலகங்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இவர்களிடையே போர் நிகழ்கிறதென்றும் படைப்புத் தொடரும் வரை இவர்கள் போரும் தொடரும் என்பது குறிப்பு. நாயகன், பிரதி நாயகன், நாயகி, பிரதி நாயகி, மூலம், பிரதி என்பவை இருந்துவரும் என்பது கருத்து.
  2. பதிற்றுப் பத்தில் 73ம் பாட்டில் பரத்தையர் ஆன்றோர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குப் பழைய உரை சொல்வது: குலமகளிரை உயர்திணை மகளிரென்று முன்னே கூறினமையின் ஆன்றோரென்றது பரத்தையரையாம். அவர்களை ஆன்றோர் என்றது தம் துறைக்கு வேண்டுவன அமைந்தார் என்றவாறு. பரத்தையர் முழுவதும் தீவினைஞர் என்று விலக்கப்படவில்லை என்பது தெளிவு. அவர்களுக்குள்ளும் ‘நல்லோர்’ உண்டு என்பதற்கு அகநானூறில் உதாரணம் உண்டு.

14-08-2013