திணை முதல்வர் க.நா.சு.வின் கவிதைகள்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் வேதியர் குலத்தில் ஒன்று ‘கந்தாடை’ என்று விளிக்கப்பெற்ற வைதீகக் குடும்பம். கந்தாடை என்றால் என்ன என்று எளிதாக விளக்கிவிட முடியாது. தமிழில் கந்து என்றால் தூண். கந்தாடை என்றா தூண் ஆடை என்று பொருள்படுகிறது. தூண் ஆடை என்று ஒன்று உண்டா? கோயில் மற்றும் இல்லத்து சுபதினங்களில் பந்தல் கால் நடுவது என்பது பழமையான மரபு. பந்தல்களுக்கு மரியாதையும் பூசையும் செய்வதுண்டு. வடமொழி மரபில் இது ‘நாந்தி’ எனப்படுகிறது. பந்தல் கால் அல்லது தூணுக்குப் பட்டாடை சுற்றி மரியாதை செய்யப்படுவதுண்டு. பின்பு இந்த ஆடை அவிழ்க்கப்பட்டுத் தகுதி உடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. திருமண நாந்தி ஆடைகள் – தற்காலத்தில் இது ரவிக்கைத் துண்டு – சுமங்கலிப் பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஒருவேளை தூண் அமைத்தலில் சுற்றப்பட்ட ஆடைகளைப் பெறுவதற்குப் பரம்பரை உரிமை பெற்ற குடும்பம் வைதிகர்களிலிருந்து வந்ததோ? இப்படிப்பட்ட கந்தாடை என்றழைக்கப்பட்ட குடும்பங்கள் அத்வைத விசிஷ்டாத்வைத மதங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்தன. ஸ்ரீ இராமானுஜர் காலத்துக்கு (கி.பி. 1017) முன்பு ஒரு பிரிவினர் ஆழ்வார்களின் வைஷ்ணவத்தைத் தழுவியதாகத் தெரிகிறது. ஸ்ரீ இராமானுஜர்களின் சீடர்களில் முதன்மையானவர் முதலியாண்டான் என்பவர். இவர் ஸ்ரீ இராமானுஜருடைய சகோதரியின் மகன். முதலியாண்டார் தந்தை கந்தாடைப் பிரிவைச் சேர்ந்தவர். அழகிய மணவாள கதாசர் (கி.பி. 12) எழுதிய சீரங்க நாயகர் ஊசலில் தாசர் இக்குறிப்பைத் தருகிறார்.

சந்தாடும் பொழில்புதூர் முக்கோற் செல்வன்
தன்மருகனாகி இருதாளும் ஆன
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான்
கடல்ஞாலம் திருத்தியருள் கருணை பாட

கந்தாடைக் குலத்துக்கு விளக்குப் போன்றவர் முதலியாண்டார் என்கிறார் அழகிய மணவாள தாசர். க.நா. சுப்ரமணியம் என்ற பெயரில் உள்ள முதல் எழுத்தான ‘க’, ‘கந்தாடை’யைக் குறிக்கிறது. கந்தாடை நாராயண ஸ்வாமி சுப்ரமணியம் என்பது முழுப் பெயர், கந்தாடைக் குலதீபமான முதலியாண்டானுக்குப் பிறகு தமிழ் இலக்கியத் துறையில் பெயர் எடுத்தவர் – மற்றொரு கந்தாடையாக – க.நா.சு.தான்1.

க.நா.சு. 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று பிறந்தார். எங்கே பிறந்தார்? ஒரு குறிப்பு வலங்கைமான்2 என்கிறது. மற்றொரு குறிப்பு க.நா.சு. சுவாமி மலையில் பிறந்தார்3 என்கிறது. 16.12.1988 அன்று புது தில்லியில் அமரரானார். சென்னையிலிருந்து டில்லிக்குப் போன க.நா.சு. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தார். தில்லியிலேயே செட்டில் ஆகிவிட்டதாகக் கருதப்பட்ட க.நா.சு. தமிழ்நாட்டுக்குத் திரும்பியபோது அதன் காரணத்தை ஒரு பத்திரிகை கேட்டது. ‘தமிழ்நாட்டில் செத்துப்போகலாம் என்று வந்தேன்’ என்று பதிலளித்தார் க.நா.சு. ஒருவேளை ஆத்திரத்தில் இப்படிப் பதில் சொன்னாரோ என்று அவரை நான் விசாரித்தேன். ‘இல்லை. உண்மையாகத்தான் சொன்னேன்’ என்றார் க.நா.சு. ஆனால் அவர் தில்லியில்தான் இறந்தார். ஓர் ஆறுதல். ஒரு பெரும் அரசியல் தலைவர் க.நா.சு.வின் பூத உடலுக்கு மரியாதை செய்தார்.

க.நா.சு.வைப் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். மைசூர், திருவனந்தபுரம் முதலிய இடங்களில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளில் அவருடன் கலந்துகொண்டிருக்கிறேன். என்னுடன் சுசீந்திரம் மற்றும் கன்யாகுமரி கோயில்களுக்கு வந்திருக்கிறார். சுசீந்திரத்தில் சட்டையைக் கழற்றிவிட்டுத் தரிசனம் செய்தார். கன்யாகுமரியில் அம்மன் முன் நின்றபோதுதான், அவர் பெயருக்கு அர்ச்சனை செய்தபோதுதான் அவர் பெயரின் முதலெழுத்து பற்றி நான் விசாரித்தேன். அர்ச்சனை முடிந்து திரும்பும்போதுதான் ‘க’ என்பது ‘கந்தாடை’ என்றார்.

சி.டி. நரசிம்மையா நடத்திவந்த ‘த்வன்யா லோகா’வில் (1983) இந்திய எழுத்துகளுக்குப் பொதுவான இலக்கிய இயல் சாத்தியமா என்ற பிரச்னை குறித்து இருவரும் கட்டுரை படித்தோம். நான் என் கட்டுரையை முதல்நாள் இரவு எழுதி முடித்தேன். விடியற்காலம் நடை போகப் புறப்பட்ட க.நா.சு. என் அறைக்கு வந்து கட்டுரை முழுவதும் படிக்கச் சொல்லிவிட்டுக் கேட்டார். என் ஆங்கிலம் பிழையற்றதாக இருக்கிறதென்றார் அவர். அவரது கட்டுரையைத் தான் கொண்டுவந்திருந்த தட்டச்சில் பிரதி செய்திருந்தார். இதன் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது.

க.நா.சு. கவிதைகள் குறித்து 1988இல் மாக்ஸ் முல்லர் பவனில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் விமர்சனம் செய்தேன். 1980ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சிட்டாடல் வெளியீடாக வெளிவந்த க.நா.சு. கவிதைகள் என்ற தொகுப்பையும் நான் விமர்சனம் செய்தேன். 14 கவிதைகள் அடங்கிய சிறு பருமத் தொகுப்பு அது. இத்தொகுப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி கோவில் தென் மடவளாகத்தில் ஓர் அறக்கட்டளைக் கட்டிட மாடியில் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட க.நா.சு.வின் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது. தன் நூல்கள் எதுவும் இப்படி வெளியிடப்பட்டதில்லை என்று அவர் சொன்னார். கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகளைக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக நான் சொன்ன கருத்துகளைச் சொல்லி ‘ஞானக்கூத்தன் என்னைப் புகழ்ந்தார். அந்த அளவுக்கு நான் தகுதியுடையவன்தானா என்று தெரியவில்லை’ என்று சொன்னார். 1981இல் குமரன் ஆசான் விருது அவருக்கு அளிக்கப்பட்டபோது நான் அதைப் பாராட்டி எழுதியிருந்தேன். அப்போதும் அவர் அடக்கமாகவே எனக்குப் பதில் எழுதியிருந்தார். அவருடைய சாதனைகளாக நான் குறிப்பிட்டவை எல்லாம் ‘எண்ணிச் செய்ய நினைக்கவில்லை’ என்றே சொன்னார். என்னைவிடக் கால்நூற்றாண்டுக் காலம் முதியவரான அவர் எனக்குக் கடிதம் எழுதியபோது ‘நண்பர் அவர்களுக்கு, நமஸ்காரம்’ என்றே எழுதினார்.

எதையும் தான் திட்டமிட்டுச் செய்யவில்லை என்று சொன்னாலும் க.நா.சு. தமிழ் இலக்கியத்தில் தேவைப்படுவதாக என்ன இருந்தது என்பதை அறிந்திருந்தார். 1959, 1964, 1977, 1986 ஆகிய ஆண்டுகளில் கவிதை பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் அவர் மனம் சுழன்றுகொண்டிருந்ததைத் தெளிவாகக் காட்டும். இறப்பதற்கு (1988) ஏழாண்டுகளுக்கு முன்பு எனக்கு எழுதிய கடிதத்தில்கூடக் கவிதை  பற்றி எழுதினார். கவிதையில் படிமங்கள் இன்றியமையாதவை என்று அவர் நினைக்கவில்லை.

“எனக்கு என்னமோ இந்தப் படிமங்கள் விஷயம் முக்கியமான விஷயமாகப் படவில்லை… மொழி என்பதே மொத்தத்தில் ஒரு படிம வரிசைதான். இதைத் தனியாகக் கவிதையின் மேல் ஏற்றி வைத்துத் தேடிப் பிடித்து வளையாததை வளைத்துப் படிமங்களை உற்பத்தி செய்யும்போது கவி தன் கவிதையில் இலக்குத் தவறி விடக் கூடும். படிமத்தையும் அணி அலங்காரங்களில் ஒன்றாக, அதன் உரிய இடத்தில் முக்கியமானதாகக் கற்றுக்கொள்ளலாமே தவிர மற்றபடி அதற்கு மேல் அந்தஸ்து இருப்பதாக, முக்கியமாகக் கவிதையில் எனக்குத் தெரியவில்லை.”

க.நா.சு. கடிதம் 1981

க.நா.சு. நிறையப் படித்தவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். அவர் செய்த மொழிபெயர்ப்புகள், அவர் கட்டுரைகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு ஆசிரியர்களின் நூல்கள், தாயுமானவர், வள்ளலார் (இவரை ஜோதி ராமலிங்கம் என்றே பேசுவது க.நா.சு.வின் வழக்கம்), கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் பற்றி எழுதியவை எல்லாம் அவரது கல்வியின் அகலத்தைக் காட்டும். எட்கர் ஆலன் போ, வால்ட் விட்மன், டி.எஸ். இலியட், எஸ்ரா பௌண்ட், மரியான் மூர், இ.இ. கம்மிங்ஸ், ஆலன் கின்ஸ்பெர்க், குந்தர் க்ராஸ் (நோபல் பரிசு பெற்ற இவர் சென்னைக்கு வந்ததுண்டு), ஸ்டீபன் ஸ்பெண்டர், லோர்க்கா, டி.இ. ஹல்மே, ஜ்யார்ஜ் லூயி போர்ஹே முதலியவர்கள் அவர் படித்த ஆசிரியர்கள்.

ஸம்ஸ்கிருதத்தை விட்டுவிட்டு இங்கிலீஷ் படிக்கத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவர் க.நா.சு. ந. பிச்சமூர்த்திக்கும் ஸம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் ந. பிச்சமூர்த்தி ஆங்கிலம் வழி ரிக் வேதங்களைப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தார். க.நா.சு.வுக்கு வேதங்களில் நாட்டமில்லை. ஆங்கிலம் வழி ஸம்ஸ்கிருத அலங்கார சாஸ்திரங்களைப் படித்துக் கருத்து கொண்டிருந்தார். ஸம்ஸ்கிருதத்தில் ‘வக்ரோக்தி ஜீவிதம்’ என்ற நூலை எழுதியவர் குந்தகா என்ற காஷ்மீரத்து அறிஞர். இவர் பெயரை ஆங்கிலத்தில் படித்து க.நா.சு. அவரைக் ‘குண்டகர்’ என்றே உச்சரித்தார். ஒரு கவிஞரின் (காளிதாஸரின்) எல்லாப் படைப்புகளையும் ஆழ்ந்து படித்துத் தன் கொள்கையின்படி விமரிசனம் வழங்கிய முதல் இந்திய – ஒருவேளை உலக – விமரிசகர் குந்தகர்தான். இவர் வாழ்ந்த காலம் கி.பி. 950. குந்தகர், அபிநவகுப்தர், ஆனந்த வர்த்தனர் இவர்களை க.நா.சு. பெரிதும் மதித்தார். ஸம்ஸ்கிருத கவிதை இயலாளர்களைப் படித்தது 1975க்குப் பிறகுதான் என்பது என் கணிப்பு. இந்த இலக்கிய ஆசிரியர்களை அவர் படித்ததற்கு நானும் ஓரளவு காரணம். க.நா.சு.வுக்கு ஸம்ஸ்கிருத இலக்கியச் சிந்தனை பற்றி அறிவுக்கு அறிஞர் கிருஷ்ண சைதன்யா பெரிய பங்களிப்பு செய்திருக்கக்கூடும்.

க.நா.சு. தான் கல்லூரி நாட்களிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிட்டதாகச் சொல்லியுள்ளார். அதாவது 17, 18 வயதில் – அதாவது 1929-30இல். ஆனால் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதினார். 22ஆம் வயதில் தமிழுக்கு மாறினார். முதலில் கதைகளும் பின்பு நாவல்களும் எழுதினார். 1936-37இல் சுப்ரமணிய பாரதியாரின் கவிதைகளைப் படித்த வேகத்தில் கவிதைகளையும் எழுத முற்பட்டார்4. அவர் எழுதிய முதல் கவிதை ‘மணப்பெண்’ 14.5.1939 ‘சூறாவளி’யில் அச்சேறியது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கவிதைகள் எதுவும் வெளியிடவில்லை.

1958இல் சரஸ்வதியில் ‘மின்னல் கீற்று’ என்ற கவிதையை அவர் எழுதியிருக்கிறார். இதைத் தொடர்ந்து 1959இல் ‘எழுத்து’விலும் 1972இல் ‘கசடதபற’விலும் எழுதினார். இடையில் அவர் நடத்திவந்த ‘இலக்கிய வட்ட’த்தில் சில கவிதைகளை வெளியிட்டார். 1974இல் ‘நாற்றங்கால்’ என்ற தொகுப்புக்கு இரண்டு கவிதைகள் தந்தார். இதற்குப் பிறகு அவரது கவிதைகளைக் கால அடிப்படையில் வரிசைப்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

கல்லூரி வளாகத்தில் டி.எஸ். இலியட் தெரிவதற்கு முன்பே தன் மாணவப் பருவத்தில் டி.எஸ். இலியட்டைத் தான் படித்திருந்ததாகக் க.நா.சு. சொல்லியிருக்கிறார். இன்றும் இலக்கியம் கல்லூரிக்கு வெளியே முதலில் தெரியவந்து மாணவர்கள் மூலமாகப் பின்னர் ஆசிரியர்களுக்குத் தெரியவருகிறது. இதற்கு ஆசிரியர்களைக் குறைசொல்லக் கூடாது. அவர்களுக்குப் பாடத்திட்டத்தைப் பற்றியும் தங்களது ஊதியத்தைப் பற்றியும் உள்ள விசனம் மாணவர்களின் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஐரோப்பிய ஆசிரியர்கள் மற்றும் விமரிசகர்கள் தமிழ் இலக்கியத் துறையில் அறியப்பட்டிருந்தனர். உரிய இடத்தில் இவர்களது கருத்துகளை மேற்கோளில் பேசுவதும் எழுதுவதும் உண்டு. ‘அவருக்குச் சொன்னது இவருக்குப் பொருந்தும்,’ ‘இதைப் படிக்கும்பொழுது மாத்யூ அர்னால்ட் சொன்னது நினைவுக்கு வருகிறது’ என்று எழுதுவார்கள். கல்லூரி ஆசிரியர் தரும் முன்மாதிரிகளை மாணவப் பருவத்திலேயே க.நா.சு. நிராகரித்திருக்கிறார். அவர் எழுதுகிறார்,

“ஆங்கிலத்தில் free verse என்று சொல்லப்பட்டதற்குச் சரியான பதம் வசன கவிதை என்றுதான் நாங்கள் எல்லோருமே எண்ணியிருந்தோம். பிச்சமூர்த்தி, கு.ப.ரா., புதுமைப்பித்தன் எல்லோருமே வசன கவிதை என்றுதான் அப்போது அதைக் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஓரளவுக்கு முன்மாதிரியாகத் தமிழில் பாரதியாரின் காட்சிகளும் ஆங்கிலத்தில் வால்ட் விட்மன் கவிதைகளும் பயன்பட்டன. நான் மேலே குறிப்பிட்ட நால்வருக்குமே டி.எஸ். இலியட் படிப்பு உண்டு. டி.எஸ். இலியட் பற்றிய விமரிசனப் போக்கிலும் ஈடுபாடு உண்டுதான்.”

இப்படி எழுதிக் க.நா.சு. அடுத்து ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார்:

“ஆனால் டி.எஸ். இலியட் செய்து கொண்டிருந்த முயற்சிகளை ஒட்டித் தமிழில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம் பல சொல்லலாம். இந்த நால்வரும் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) தனித்துவம் உடையவர்கள். இலியட்டைப் பின்பற்றிக் கவிதை செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணியிருக்கலாம்.”

வெளிநாட்டு இலக்கிய ஆசிரியர்களைப் படித்திருந்ததாலும் அவர்களைப் பின்பற்றாமல் இருந்ததற்குத் தங்கள் (ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., புதுமைப்பித்தன் உட்பட) தனித்துவம்தான் காரணம் என்கிறார் க.நா.சு. இந்தக் கட்டுரையை 1977இல் க.நா.சு. எழுதியிருக்கிறார்.

க.நா.சு. சொன்னதில் உண்மை இருக்கிறது. பாரதியார் தனக்கு ஷெல்லிதாஸன் என்று புனைப்பெயரைக் கொடுத்துக்கொண்டவர். ஆனால் அவர் ஷெல்லியின் நகல் அல்ல. க.நா.சு. தன் கட்டுரையில் எங்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை மேற்கோள் காட்டி எழுதவில்லை. க.நா.சு.வின் ‘தனித்வம்’ பற்றிய பிரஸ்தாபம் எனக்கும் பிடித்த ஒன்று. பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப் பாடங்களில் கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், கோல்ட்ஸ்மித், பின்னாளில் நான் படித்த ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள் இவை எல்லாம் எனக்குத் திகைப்பைத் தந்தன. நமது மொழியில் இப்படிப்பட்ட கவிதைகள் எழுதப்படவில்லை என்பது எளிதில் எனக்குப் புரிந்தது. இவர்களின் கவிதை போல் நமது மொழியில் எழுதப்படாததற்குக் காரணம் மரபு சம்பந்தப்பட்டதென்று நான் அறியவந்தேன். ஐரோப்பிய மரபு மனிதனுக்குக் கொடுத்த, அவன் பார்த்த உலகுக்குக் கொடுத்த ஒரு வகையான மதிப்பு நாம் கொடுத்திருக்கவில்லை என்று நான் கணித்தேன். ஆனால் அவர்களை நகல் செய்வது நமது கவிதையைச் சவலையாக்கிவிடும் என்றும் தெரிந்தது. பக்தி இயக்கத்தின் பின்னே வெற்றிடமாகக் கிடந்த நமது கவிதை சமுதாயம் சார்ந்ததாக, உலகம் தன் மனதில் நுழைத்த பிம்பங்களை ஆராயும் தனிமனித உள்ளம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே அதில் ஜீவன் உண்டாக வாய்ப்புண்டு என்றே நான் கருதினேன். எனவே நமது கவிதை உலகப் பார்வை கொண்டிருக்கும் பட்சத்தில் அது தனது திணை நலன்களை இழந்துவிடக்கூடாது என்று கருதினேன். இக்கருத்து க.நா.சு.வின் கருத்துடன் எளிதில்  ஒத்துப்போயிற்று. நமது கவிதைகளில் பிற நாட்டார் கவிதைகளின் சாயல் விழுந்தாலும் அவை நம்முடையவைதாம். க.நா.சு. தொடர்ந்து படைப்புகளில் இந்தியத் தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்திவந்தார். அவர் கோட்பாடுகளில் ‘இந்திய உருவம் கொடுத்தல்’ என்பது முக்கியமானது.

இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்துகொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு. இவர்கள்தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக் கிடந்ததை அறிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளி காட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது. ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டுவிடவில்லை. அவரேகூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சு.வோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல், கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார். சில தொழிலாளிகள் வேலை இருந்தால் தாங்களே முன்வந்து வேலையை முடித்துவிட்டு ஊதியம் கேட்பார்கள். உன்னை யார் செய்யச் சொன்னதென்று கேட்டால் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தேநீருக்காவது கொடுங்கள் என்று கேட்பார்கள். க.நா.சு.வின் பணிக்கு ஊதியம் கிடையாது. அவர் கேட்கவும் இல்லை. ‘ந. பிச்சமூர்த்திக்குக் கொடுக்கப்படாத பரிசையும் விருதையும் இன்னொரு படைப்பாளி பெறுவது நாணயமற்ற செயல்’ என்று சொன்னார். புதுக்கவிதை தொடர்பாக அவரை நான் பாராட்டியபொழுது அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் தான் செய்ய நேர்ந்த பணியின் கடுமையை, தன் உடம்பும் உறுப்புகளும் நொந்ததை அவர் சொல்லிக்கொண்டார். அதைப் பார்க்கும் முன்பாக –

க.நா.சு.வின் முதல் கவிதை ‘மணப்பெண்’ 1939ஆம் ஆண்டு வெளியாயிற்று. ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதையான ‘காதல்’ 1934இல் வெளியாயிற்று. இந்த இரண்டு கவிதைகளில் க.நா.சு.வின் கவிதை இளையோர் காதலைப் பற்றி இல்லாமல் மணவறைக்குப் போகும் தம்பதியர்களை வாழ்த்துவதாக அமைந்திருப்பது கவனிக்கத் தகுந்தது. இதன் கருத்து கண்ணேறு கழிப்பதாக இருப்பதும் கவனிக்கத் தகுந்தது. 34 வயதான பிச்சமூர்த்தி காதல் பிரிவைப் பாட 27 வயதான க.நா.சு. கண்ணேறு போக எழுதுகிறார். இது மரபிலிருந்து சிறிய விலகல் என்றாலும் க.நா.சு.வின் உள்ளனவற்றில் சிறந்ததைத் தேடும் இயல்பையும் காட்டுகிறது. ‘அவன் கூடுவான் அழகுடன் அழகு பொருந்த’ என்னும் இறுதிப் பகுதி கம்பரின் தொனியை நினைவூட்டுகிறது. இக்கவிதையில் க.நா.சு. கண்டுபிடித்துக்கொண்ட நவிற்சி அமைதி இறுதிவரைக்கும் அவரிடம் இருந்துவந்தது. அடுத்த கவிதை 1956ஆம் ஆண்டுதான் கிடைக்கிறது. இடைப்பட்ட 20 ஆண்டுகளில் அவரது அனுபவம்தான் மீண்டும் கவிதைப் பக்கம் அவரைத் திருப்பியிருக்க வேண்டும். 1950களில்தான் க.நா.சு. என்ற பெயர் இலக்கிய உலகில் பரபரப்பூட்டும் சப்தமாக மாறத் தொடங்கியது.

க.நா.சு. பேசுகிறார் – ஸ்காண்டிநேவிய இலக்கியம் குறித்து க.நா.சு. பேசுகிறார் – என்று 50களில் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட சஞ்சிகையில் விளம்பரம் வந்ததுண்டு. அவர் தான் எழுதியதோடு நிற்காமல் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்து விமரிசனம் செய்யத் தொடங்கினார். மேல் நாட்டு இலக்கியங்களைப் படித்து அவற்றை அறிமுகம் என்ற அளவில் பேசவும் தொடங்கிவிட்டார். 1958இல் புதுக்கவிதை என்ற பெயரைப் புனைந்து கட்டுரை எழுதினார். க.நா.சு.வின் ‘விலகல்’, ‘ஒட்டாமை’ப் பண்பு அவரது 40ஆம் வயதில் வந்திருக்க வேண்டும். 1958இல் வெளியான ‘மின்னல் கீற்று’ என்ற கவிதையின் முதல் மூன்று அடிகளைப் பார்த்தால் இவ்விலகல் விளங்கும்.

புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்.

இந்த மூன்று அடிகளையும் நான்கு ஐந்து சொற்களாக அவர் அமைத்திருக்கிறார். ‘விசிறிக்கொண்டே’ என்ற ஒரு யூனிட்டை உடைத்து ‘கொண்டே’ என்ற சொல்லை அடுத்த அடிக்கு நகர்த்திவிடுகிறார். 58ஆம் ஆண்டு வெளியான இக்கவிதையில் க.நா.சு.வின் நடையின் சாராம்சம் வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு மாறாக அவர் அமைத்துக்கொண்ட நடை விசேடம் ‘வைகுண்டம்’ ‘‘ஆ’ என்று முடியும் கவிதை’ என்ற கவிதைகளில் வெளிப்படுகிறது. இது 1964ஆம் ஆண்டில் அவர் முயன்றது. க.நா.சு.வின் கவிதைகள் பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்கு நேர்மாறான போக்குடையது. பிரஸ்தாபித்த ‘மின்னல் கீற்’றின் முதல் ஒன்றரை அடியைப் பாருங்கள் – நாளிதழை அவர் புழுக்கம் தீர்க்கும் விசிறியாக மாற்றுகிறார். பொதுவாக மனிதர்கள் செய்யக்கூடியதுதான் இது என்று தோன்றும்5. ஆனால் நாளிதழ்ப் படிப்பை உதாசீனப்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்தப் படிமத்தைப் பயன்படுத்துகிறார். இந்தக் கவிதையில் காணும் நாளிதழ் மீது வெறுப்பு, புழுக்கம், மழை என்ற குறிப்போவியங்கள் அவரது பிந்திய கவிதைகளிலும் தொடர்ந்தது:

1. … ஆனால்
சுகம் என்பது என்ன?
புழுக்கமான பொழுதிலே மழைத்துளி
விழுவதா?

2. தாகமெடுக்கிறது
தண்ணீர் குடிக்கிறேன்
திருப்தி ஏற்படுகிறது
இது அதிசயமில்லாமல் வேறென்ன

3. மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்

4. மிகவும் புழுக்கமான ஒரு நடுப்பகலில்
சட்டச்சட சட்டச்சட என்று
நாலு தூற்றல் விழுந்தவுடன் ஆஹா
ஆனந்தம் புழுக்கம் தீர்ந்தது என்று
சொல்லிக் கொண்டிருக்கும் போதே
தூற்றல் நிற்க புழுக்கம் அதிகரிக்க
ஏமாற்றமடைந்து மனசு உலகில் உள்ள
ஏமாளிகளைக் கணக்கெடுக்கிறது

பாரதியாரின் சில கவிதைகளின் உட்கிடக்கை ‘chants’ என்று க.நா.சு. ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். க.நா.சு. புழுக்கத்தின் காரணமாக மழை வேண்டி எழுதியதை chant-ஆகக் கருத வேண்டும். புழுக்கம் சூழ்நிலையில் ஈரப்பதமின்மையைக் குறிக்கிறது – அதாவது ஆசிரியர்க்கு அனுசரணையற்ற சூழல் நிலவுகிறது – இது போக வேண்டும் என்றால் இயற்கை – அல்லது கடவுள் அருள் – மழை – வேண்டும் என்பது கருத்து. ஆனால் க.நா.சு. கவிதைகளில் குறியீட்டுத் தன்மையின் யக்ஞத்தை* மறைத்துவிடுகிறார். இந்த முறையில் பாரதியின் கவிதைகளையும் பிச்சமூர்த்தியின் ‘இருளும் ஒளியும்’, ‘மழை அரசி’ என்ற கவிதைகளையும் பார்க்க வேண்டும்.

கவிதை குறித்துத் தன் கவிதையிலேயே சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார் க.நா.சு.

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துவிட்டான். இவற்றில்
எத்தனை எட்டுகள் கவிதையால்
சாத்தியமாயின?

இக்கவிதையின் தொடக்கம் மரியான் மூர் எழுதிய ஒரு கவிதையின் தொடக்கத்தை நினைவூட்டுவது. அவரும் ‘I too distrust poetry’ என்று தொடங்கினார். ஆனால் கவிதையைத் தான் தொடர்ந்து எழுதியதற்குக் காரணம் கவிதையில் ஒரு ‘ஜெனுயின்னஸ்’ இருப்பதுதான் என்று அவர் தன் கவிதையை முடித்திருக்கிறார். ஆனால் க.நா.சு. கவிதை ‘போதாமை’ என்ற உணர்வைத் தருவதாகவும், பிறப்பும்கூட இந்த அடிப்படையில்தான் ஏற்படுகிறதென்றும், கடவுளே உயிர்த்திருப்பதற்கு இந்தப் போதாமைதான் காரணமென்றும் க.நா.சு. சொல்கிறார். இங்கு ஓர் எல்லை எட்டி அங்கு கிடைக்கும் ‘அப்பால் உணர்வை’ அடிப்படையாகக் கொண்டு இருந்ததுடன் போதாமையை அறிவதையே போதமாகக் க.நா.சு. காண்கிறார் என்று தோன்றுகிறது.  கடவுளே இன்னும் பரிணாமத்தில்தான் இருக்கிறார் என்று யாரோ ஒரு மேலைநாட்டுக் கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் இருக்கிறது. கடவுளும் கவிதையும் போதாமை உணர்வினால் ஜீவித்திருப்பவை** என்பது இக்கவிதையின் வாதம். அர்ஜுனனுக்குக் கண்ணனின் போதாமையால்தானே அவர் விசுவரூபம் காட்டினார்.

இக்கவிதையில் இன்னொரு விஷயமும் பார்க்கப்பட வேண்டும். கவிதையின் இறுதி அடி வெடிக்க வேண்டும் என்ற கருத்துடையவர் அல்லர் க.நா.சு. வந்த சுவடே தெரியாமல் போவது போன்ற ஒரு போக்கையே அவர் விரும்பியிருக்க வேண்டும். ‘அபஸ்வரம்’ என்ற ஒரு கவிதையை இதற்கு விதிவிலக்காகக் கூறலாம். இக்கவிதையின் நவிற்சி அமைப்பு இறுதி வரியை அப்படி அமைக்க நிர்ப்பந்தித்துள்ளது.

புதுக்கவிதை இலக்கிய அரங்கில் தோற்றம் தருவதற்கு முன்பிருந்த பல மரபுகள், குறிப்பாகக் கடவுள் பற்றிய அஞ்சலிகள் மறையத் தொடங்கின. கடவுள் முற்றிலும் காணாமல் போய்விட்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவரது இருப்பு வேறு முறையில் ஆராயப்பட்டது. கடவுளின் சொரூபத்தின் இடத்தை அவரது படைப்புகள் பிடித்துக்கொண்டன. நுட்பமான பார்வைகள், அவற்றால் எழுப்பப்படும் உணர்வுகள்தாம் கடவுள் தொடர்பைக் காட்டிலும் படைப்பாளியின் கவனத்தை ஈர்த்தன. மனிதன் உள்ளிட்ட பிரபஞ்சப் பொருள்கள் தமக்குள் எத்தகைய உறவைக் கொண்டுள்ளன என்பதே சுவாரசியமான விஷயமாயிற்று. நவீன காலத்துக்கு – அல்லது பாரதியாருக்குப் பிந்திய – அல்லது இந்திய விடுதலை வெற்றிக்குப் பிந்திய கவிதைகளில் இத்தன்மை கூடியது. நந்தலாலாவின் கரிய நிறம் நேரே பார்த்து அறியப்பட்டதாக இல்லாமல், பிறர் சொல்ல அறிந்து அதை மற்றொன்றில் கண்டு பரவசப்படுவதே இறை அனுபவமாயிற்று. பக்திக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அனுபவமுறை பாரதியாருக்கும் எட்டியது. ஆனால் பாரதிக்குப் பின்பு இந்தக் குண அதிசயங்களை அனுபவிக்க இந்தக் குண அதிசயங்கள் இறை சார்ந்ததாகக்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாயிற்று. கடவுளின் இன்மைக்குப் பதிலாக அன்மை கருத்துருவாயிற்று.

… புல்வளரும்
வேகம் அது சந்தை இரைச்சலிலும்
பெரிதாகிக் கேட்கிறது
மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள்
பூக்கும் ஓசை, புழுக்கள் காலை
உணவு அருந்தும் ஓசை…

க.நா.சு.வின் ‘இரைச்சல்’ என்ற கவிதையில் ஒரு பகுதி இது. இக்கவிதை, 1958இல் ‘சரஸ்வதி’யில் வெளியானது. இரைச்சலையும் நுண்ணோசையையும் எதிரும் புதிருமாக்குகிறார் கவிஞர். அவர் விரும்பும் ஓசை –

 1. புல் வளரும் வேகம்
 2. குழந்தை தொட்டிலில் எழுந்த ஓசை
 3. மரங்கள் துளிர்க்கும் ஓசை
 4. பூக்கள் பூக்கும் ஓசை
 5. புழுக்கள் காலை உணவு அருந்தும் ஓசை

அவர் விரும்பாத, எதிராக வைக்கும் ஓசை –

 1. சந்தை இரைச்சல்
 2. கிழவன் அழுகை
 3. குருக்ஷேத்ர ஓசை

சந்தை இரைச்சல் வியாபாரத்தையும் கிழவன் அழுகை ஒரு வாழ்க்கையின் அந்திமத்தையும் குருக்ஷேத்ர ஓசை தாயாதிகளின் சண்டையையும் குறிப்பிடுகின்றன. மாறாக மற்ற ஓசைகள் வரவேற்கத் தகுந்த ஓசைகளாகின்றன. ஆனால் இருவகை ஓசைகளும் ஒரே நேரத்தில் நிகழ்வதினால் ஏற்படும் அதிர்ச்சியில் கவிஞனின் சிந்தனை தடைப்படுகிறது என்கிறது கவிதை. துளிர்க்கும் ஓசை, பூக்கும் ஓசை, புழுக்களின் உணவருந்தும் ஓசை என்பவை மனிதனின் அக்கறை விழாதவைகளாகும். இந்த ஓசைகளுக்கு – இவை கருத்துகளின் பிரதிநிதிகள் – உருவம் கொடுத்ததால், எனவே இடம் கொடுத்ததால், உருவம் இருந்தால்தான் இடம் கிடைக்கும். கவிதை இடமளித்ததால் கவிதையின் தன்மை சிறப்படைகிறது. இவை ஆத்மீக ரகஸ்யங்களுக்குப் பின்நவீன காலத்துப் பதிலிகள்.

‘தரிசனம்’, ‘வைகுண்டம்’, ‘‘ஆ’ என்று முடியும் கவிதை’, ‘பல்லியும் முதலையே’, ‘விஜயதசமி’, ‘என்ன செய்ய’, ‘நினைவுப் பாதை’, ‘அதிசயங்கள்’, ‘சிட்டுக்குருவி’ முதலிய கவிதைகளில் இப்பண்பு மிளிர்வதைப் பார்க்கலாம். பூனை, நாய், குருவி இவற்றைப் பற்றி எழுதும்போது கவிஞர் தனது மனிதச் சிறையிலிருந்து வெளியேறுகிறார் என்று சொல்ல வேண்டும். சக ஜீவிகளிடம் ஆத்மார்த்தமான பிணைப்பு நேரும்பொழுது மனிதர்களிடத்தில் காட்டும் பிணைப்பின் அழுத்தம் ஒருவர்க்குச் சற்றுக் குறைவானதென்றே தெரியக்கூடும். ‘நினைவுப் பாதை’ என்ற கவிதையில் தன் பாசப் பிணைப்பின் தன்மையைக் குறித்துத் தயக்கமில்லாமல் பதிவு செய்கிறார் க.நா.சு.

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்து போய் பார்க்க
செத்துக் கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.
ஆனால்
தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்
என்று மறுநாள்
பாட்டி
கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.

(நினைவுப் பாதை)

தாய் இறந்தபோது தனக்கு வந்திருக்க வேண்டிய துக்கம் சந்தர்ப்பத்துக்கேற்ற அளவில் இல்லை என்கிறார் க.நா.சு.6 இந்த உணர்ச்சியின் சரி அளவின்மை திடுக்கிடவைக்கிறது. இந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டு குறிப்பிடுவது கவிதையின் நேர்மையைப் பெருமை செய்கிறது. இப்படிப்பட்ட நிலைமைகளைத்தான் க.நா.சு. சிக்கலும் சிடுக்கும் நிறைந்த வாழ்க்கை என்கிறார்.

க.நா.சு.வின் கவிதைகளில் இரண்டு பண்புகள் முதன்முறையாகக் காணக்கிடக்கின்றன.

முதலாவது, ‘பாடம் இடையிட்ட பாடம்’ என்ற பண்பு. ஒரு கவிஞர் தன் கவிதையை உருவாக்கும்பொழுது தனக்கு முந்திய கவிஞரை அல்லது தனக்கு முந்திய கவிதையைச் சந்திக்க நேரும் ஒரு வினோத அனுபவம் ஏற்படுவதுண்டு. இந்தச் சந்தர்ப்பங்களில் முந்தைய கவிதையின் சொல், தொடர், கருத்து, படிமம் முதலியவற்றைப் பிந்திய கவிஞர் தன் கவிதையில் இடம்பெறச் செய்வதுண்டு. அப்படி அமைவதை வரன்முறைப்படு்த்திய முன்னோர்கள் இந்த ஆக்கத்தை ‘முன்னோர் மொழிகளைப் பொன்னே போல் போற்றுதல்’ என்று அழைத்தனர். இதை நூல் செய்வகையின் உத்திகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் சொல்கிறது7. இதன் விரிவை வேறு கட்டுரையில் பார்த்துக்கொள்ளலாம். இந்த முறை அங்கதம் போன்று தொனித்தாலும் அங்கதமாகாது என்று சொல்லலாம். அதனால்தான் ‘பொன்னே போல்’ எனப்பட்டது. க.நா.சு.வின் கவிதைகளில் இடம்பெறும் பாடம் இடையிட்ட பாடங்கள் இவை:

 1. எனக்கு முன்னே எத்தனையோ பேர் இருந்தாரப்பா.
 2. வேறு ஒருவரை நான் யாங்கணுமே என்றும் கண்டதில்லை
 3. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் ஈது
 4. எல்லை இல்லாததோர் தொல்லையிலே.
 5. எங்கே சென்றாய்? என்ன கண்டாய்?
 6. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்
 7. அணிலாடு முன்றிலில் அசையாது நீ உட்கார்ந்திருந்தாய்

மற்றொரு பண்பு புராதன – பௌராணிக விஷயங்களை எடுத்தாள்வது. நவீனத்தின் கைபட்டால் புராதனம் சிதையும். ‘மதுரை மீனாட்சியின் கன்னிமை கழியும்போது’ என்ற கவிதையில் க.நா.சு. துணுக்குறச் செய்யும் விளைவுகளோடு இப்பண்பைத் தருகிறார்.

பாண்டு வாத்தியம் படபடவென
முழங்க
சினிமா வண்டிகள்
செய்தியை ஊரெலாம்
எடுத்துச் செல்லும்
சூடான இட்லியும் பாலும்
காலியானதை
சாம கானமாக
தேவ தூதர்கள்
எடுத்தோதுவர்.

க.நா.சு. அடிக்கடி கவிதை வசனத்தை ஒத்திருக்க வேண்டும் என்று சொல்வார். வசனம் என்று அவர் குறிப்பிட்டது ஒரு நடை விசேடத்தை மட்டும் அல்ல. சிறுகதை, நாவல் முதலிய இலக்கிய வடிவங்களில் உலகம் எப்படி வெளிப்படுகிறதோ அப்படிக் கவிதையிலும் வெளிப்பட வேண்டும் என்பது அவர் கருத்து. க.நா.சு. தன் கவிதையில் தயக்கமின்றி இதைச் செய்திருக்கிறார். பாண்டு வாத்தியம், சினிமா வண்டி, இட்லி, பால் பற்றிய குறிப்புகள் இந்நோக்கம் உடையனவாகும். அவரது மற்ற கவிதைகளிலும் இப்பண்பு இருப்பதைப் பார்க்க முடியும். டேப்ரிகார்டர், க்யூ, ஏரோப்ளேன், எக்ஸ்பிரஸ் ரெயில், ஜட்கா வண்டி, மாக்ஸ் ஃபாக்டர், கம்ப்யூட்டர் இவற்றைக் க.நா.சு. குறிப்பிடும்போது அவர் கவிதை விமானத்தைத் தரையில் இறக்கிக் காட்டுகிறார்.

க.நா.சு. ‘சக இருதயம்’ என்ற வடமொழி இலக்கியக் கோட்பாட்டைக் குறிப்பிடுவார். ‘சக இருதயம்’ என்பது வாசகனிடம் இதயம் இருப்பதைக் கண்டுபிடிக்கும்போது கவிதை புனர்ஜன்மம் அடைவது என்பதாகும். இதை ‘அதிசயம்’ என்ற கவிதையில் காட்டுகிறார் க.நா.சு.

பக்கத்து வீட்டில் ஏதோ
அல்ப சந்தோஷம்
பேரக் குழந்தை பிறந்ததோ
லாட்டரியில் பரிசு விழுந்ததோ
மூத்த மகனுக்கு வேலைதான் கிடைத்ததோ
எனக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியாது.
ஆனால் அந்த ஆனந்தம்
என் கண்களைக் குளமாக
நிரப்புவதும் அதிசயம்தான்.

க.நா.சு. ஒரு பெரிய சக இருதயர். மகா மனிதர். இக்கட்டுரை அவருக்கு நான் பணிவுடன் அணிவிக்கும் ஒரு தங்கப் பரிசு.

குறிப்புகள்:

 1. ‘கந்தாடை’ என்ற குலப்பெயரைக் க.நா.சு. மறக்கவில்லை. பார்க்க: ‘உயில்’ கவிதை
 2. இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள்; 1999இல் தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, பக். 133
 3. க.நா. சுப்ரமணியம். தஞ்சை பிரகாஷ் (2001), சாகித்ய அகடமி வெளியீடு. பக். 7
 4. ‘1977இல் புதுக்கவிதை’, க.நா.சு. கட்டுரை
 5. இது குறித்துக் க.நா.சு.வும் புதுமைப்பித்தனும் வெவ்வேறு கருத்துடையவர்கள். பார்க்க: புதுமைப்பித்தன் கட்டுரைகள்
 6. ‘1977இல் புதுக்கவிதை’, க.நா.சு. கட்டுரை
 7. பிறன் உடன்பட்டது தான் உடன்படுதல் என்பது தொல்காப்பிய மரபியல்

(விருட்சம் வெளியிட்ட ‘க.நா.சு. கவிதைகள்’ (2002) தொகுப்பில் இடம்பெற்ற முன்னுரை; குறிப்புகள் பகுதி, பின்னர் சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘கவிதைகளுடன் ஒரு சம்வாதம் மற்றும் சில கட்டுரைகள்’ (2004) தொகுப்பில் சேர்க்கப்பட்டது)

* ‘க.நா.சு. கவிதைகள்’ முன்னுரையிலும் ‘கவிதைகளுடன் ஒரு சம்வாதம்’ தொகுப்பில் உள்ள கட்டுரையிலும் இவ்வாறு அச்சாகியுள்ளது.
** இச்சொல் மேற்கண்ட இரு நூல்களிலும் ‘ஜீவித்திருப்பவர்’ என்று அச்சாகியுள்ளது