பாரதியின் காட்சி: க.நா. சுப்பிரமணியம்

ஃபேஸ்புக் குறிப்பு, 05-05-2016

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தியது. மாநாட்டில் க.நா.சு., நீல. பத்மநாபன், சா.கந்தசாமி இவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். சுரதா, வா.மு. சேதுராமன், யோகி சுத்தானந்த பாரதியார், இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரே அறையில் க.நா.சு.வும் சுரதாவும் தங்கினார்கள். சுரதாவுக்கு பிராமணர்களைப் பிடிக்காது. தற்செயலாக அவருக்கு நான் அறிமுகமானபோது அவர் என்னிடம் கேட்ட கேள்வி நீங்கள் பார்ப்பனரா என்பதுதான். க.நா.சு.வும் சுரதாவும் ஒருவரை ஒருவர் எப்படி சகித்துக் கொண்டார்களோ தெரியாது.

மாநாட்டில் ஒரு அமர்வுக்கு மீ.ப. சோமசுந்தரம் தலைமை வகித்தார். பங்கேற்பவர் என்ற முறையில் நான் க.நா.சு.வைக் குறித்துப் பேசினேன். திரு. சோமுவுக்கு அது பிடிக்கவில்லை. நன்றி, உட்காருங்கள் என்றார். க.நா.சு.வுக்கு அப்போது 72-73 வயது இருந்திருக்கும். ஊன்றுகோல் தேவைப்பட்டவராக இருந்தார். தொடக்க விழாவில் க.நா.சு.வைப் புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.கி. வேங்கடசுப்ரமணியம் மேடைக்கு அழைத்தார். அவரை மிகவும் பாராட்டிப் பேசினார்.

பின்னர் எழுத்தாளர்கள் பலரைப் பூம்புகாருக்கு அழைத்துப்போனார்கள். ஒரு கூட்டமும் நடந்தது. மேடையில் யோகி சுத்தானந்த பாரதியார், திருவாரூர் தங்கராசு மற்றும் ஜெயகாந்தன் இருந்தார்கள். ஜெயகாந்தன் பேசும்போது இந்திய நாகரிகம் பற்றிக் குறிப்பிட்டார். திருவாரூர் தங்கராசு ஜெயகாந்தனை உலுக்கிவிட்டார். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் என்றுதான் உண்டே தவிர இந்திய நாகரிகம் என ஒன்று கிடையாது என்றார். பார்க்கப்போனால் திராவிட நாகரிகம் ஒன்றுதான் உண்டு என்று பல ஆதாரங்களைக் கூறினார். அரங்கில் எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மேடையில் ஜெயகாந்தன் நிராதரவாக விடப்பட்டவராக உட்கார்ந்திருந்தார்.

நானும் க.நா.சு.வும் பக்கத்துப் பக்கத்து நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தோம். நான் க.நா.சு.விடம் எது சரி என்று கேட்டேன். நீங்கள் எந்த ஆசிரியரை நம்ப விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்றார் க.நா.சு. ஜெயகாந்தன் ஒரு நடிகர். ஆவேசமாகப் பேசும் அரசியல் பாணியைப் பின்பற்றி இலக்கியம் பேசினார். கேட்பவர்களை ஆத்திரமூட்டி அவர் பேசுவார். கூட்டம் குழப்பத்தில் முடிந்ததால் அவர் தான் வென்றதாக நம்பினார்.

எழுத்தாளர் மாநாடு முடிந்ததும் துணைவேந்தரின் அழைப்பின்பேரில் க.நா.சு. புதுவை போனார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் அவரை வருகைப் பேராசிரியராக திரு, வேங்கடசுப்ரமணியம் அமர்த்தினார்.

க.நா.சு.வைப் பலபேர் டாக்டர் கே.என்.எஸ். என்று அழைப்பார்கள். ஆனால் க.நா.சு. டாக்டர் இல்லை. இவர்கள் டாக்டருக்குக் குறைவாக யாரிடமும் பேச மாட்டார்கள், அதனால் என்னை டாக்டராக்கிவிட்டுப் பேசுகிறார்கள் என்று என்னிடம் சொல்லிச் சிரித்தார்.

ஒரு சமயம் ஓர் அமைப்பாளர் என்னைப் பேராசிரியர் ஞானக்கூத்தன் என்று அரங்குக்கு அறிமுகம் செய்தார். நான் என் உரையில் நான் பேராசிரியர் இல்லை என்று சொன்னேன். அமைப்பாளருக்குக் கோபம் வந்துவிட்டது. பேசாமல் விட்டுவிட வேண்டியதுதானே, ஏன் மறுத்தீர்கள் என்றார். நான் இல்லாத ஒன்றை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றேன்.

திரு. கமல்ஹாஸனிடம் பழகிக் கொண்டிருந்த நாட்களில் அவரிடம் கால்ஷீட் வாங்கித்தர முடியுமா என்றுகூடக் கேட்டார்கள். ஒருவர் கமலைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள 2000 ரூ. செலவானதாகக் கூறினார். நானே பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனது நூல் வெளியீட்டுக்குக் கமல்ஹாஸனை வரவழைத்தேன் என்பது உண்மையா என்று ஒரு வாசகர் கேட்டார். நான் அதிர்ந்துபோனேன். கமல்ஹாஸனை ஒரு கூட்டத்துக்கு அழைத்து வந்தால் விமானச் செலவு தருவதாக ஒருவர் சொன்னார். எனக்கும் கமலுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு தொடர்பு விட்டுவிட்டது என்று சிலரிடம் சொன்னேன். இப்போது தொல்லை நின்றுவிட்டது.

க.நா.சு. புதுவை சென்று பாரதியாரின் வசன கவிதை பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வை ‘பாரதியின் காட்சி’ என்ற பெயரில் நூலாகப் புதுவைப் பல்கலைக்கழகம் 1983ம் ஆண்டு வெளியிட்டது. பதிப்பு நன்றாக இல்லை.

இது மறுபிரசுரம் காண வேண்டும். யார் செய்வார்கள்? ஆய்வுக்கிடையில் ஒருமுறை க.நா.சு.வைச் சந்தித்தேன். உங்கள் பாரதியின் புதுக்கவிதை என்ற கட்டுரைதான் கைகொடுத்தது என்றார். அவர் முன்னமேயே ஹிந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு என் கட்டுரை பிடித்திருந்தது. மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான பெ.கொ. சுந்தர்ராஜன் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். நீங்கள் கீழே பார்ப்பது அக்கடிதம்தான்.

oOo

20.8.81

மதிப்புக்குரிய நண்பர்
திரு. ஞானக்கூத்தனுக்கு

வணக்கம்.

கவனம் தொடர்ந்து வரப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் சந்தா அனுப்புகிறேன்.

ஜூன் இதழில் நீங்கள் எழுதியுள்ள “பாரதியின் புதுக்கவிதைகள்” மிகவும் பயனுள்ள திறனாய்வு. புதுக்கவிதை எழுதிய பாரதி “அவரது செய்யுட்கவிதைகளில் தெரியவந்த பாரதியைக் காட்டிலும் வித்தியாசமானவராகக் காணப்படுகிறார்” என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மை. பாரதியின் அடிப்படை கவிதைத் திறமை இந்தக் கவிதைகளிலும் மிகச் சிறப்பாக வெளிப்படுவதை இம்மாதிரி இது வரை ஒருவரும் எடுத்துக் காட்டவில்லை. பாரதி நூற்றாண்டு சமயத்தில் இத்தகைய உங்களுடைய பணியைப் பாராட்டுகிறேன். இந்தக் கட்டுரை அடுத்த ஆண்டு இலக்கிய சர்ச்சைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் என்று நம்புகிறேன்.

1979, 80 ஆண்டுகளில் புதுக்கவிதைத் தொகுப்புகள் ஏதேனும் (குறிப்பிடத்தக்கவை) வெளியாகியிருக்கின்றனவா? அவைகளின் விவரங்கள் தேவைப்படுகின்றன. அவைகளைப் பற்றிய சில குறிப்புகளும் கிடைத்தால் நலம். சாகித்ய அகாடெமி Indian Literature வெளியீட்டுக்கு 79, 80 தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். தொகுப்புகள் என் கண்ணில் படவில்லை (?).

ழ இதழ்களும், ஆத்மாநாமின் ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பும் வரப் பெற்றேன். நன்றி.

அன்புடன்
சிட்டி

(பிகு)

பிரம்மராஜன், ஆனந்த் – தேவதச்சன் தொகுப்புகள் எந்த ஆண்டு வெளியாயின? மயன் கவிதைகள்?