சப்த ஹரணம்


ப்ரப்ரயுக்தயோ: சப்தார்த்தயோரூப நிபந்தோ ஹரணம்.
தத்விதா பரித்யாஜ்யம் அநுக்ராஹ்யாம் ச.
தயோ சப்தஹரண மேவ தாவத் பஞ்சதா பதத:
பாதத: அர்த்தத: வ்ருத்தத: ப்ரபந்தஸ்ச.

நானும் ஆத்மாநாமும் ஒருநாள் சென்னைக் கடற்கரைக்குப் போய்க் கொண்டிருந்தோம். பக்கிங்ஹாம் கால்வாய்க்குப் பக்கத்து நடைபாதைப் புத்தகக் கடையில் நின்று பழைய புத்தகங்களைப் பார்வையிட்டோம். அப்போது தரையில் மிக மோசமான சூழ்நிலையில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிப்பு ஒன்று கிடப்பதைப் பார்த்தேன். உடனே நான் அதை எடுத்துக் கொண்டேன். ‘புதிய பதிப்புகள் கிடைக்குமே. ஏன் பழையதை வாங்குகிறீர்கள்’ என்றார் ஆத்மாநாம். ‘தேவாரம் இப்படித் தரையில் கிடப்பதைப் பார்க்க எனக்கு சகிக்கவில்லை. அதனால் வாங்கினேன்’ என்றேன்.

இந்த நிகழ்ச்சியைச் சில ஆண்டுகள் கழித்து ஒரு பேச்சின் போது ஒரு நண்பரிடம் சொன்னேன். அவர் ஒரு சிற்றிதழ் நடத்திக் கொண்டிருந்தார். அடுத்த இதழில் அந்த நிகழ்வைக் குறிப்பிட்டு எழுதினார். ஆனால் ஒரு திருத்தம் செய்திருந்தார். தேவாரத்தை எடுத்தது ஆத்மாநாம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த எழுத்தாளரைப் பிறகு சந்திக்க நேர்ந்த போது தவறை சுட்டிக் காட்டினேன். ‘ஹும்’ என்று மூச்சை வெளியேற்றினாரே ஒழிய பதில் சொல்லவில்லை. மேலும் வலியுறுத்தக் கூச்சமாக இருந்தது. அதை அத்துடன் விட்டுவிட்டேன்.

2009க்கான சாரல் விருது எனக்கு வழங்கப்பட்டது. அதையொட்டி என் நேர்காணல் ஒன்று 31.1.2010 கல்கி இதழில் வெளியாயிற்று. அந்த நேர்காணலில் நான் நடைபாதையில் நூல்கள் கிடைப்பதைப் பற்றிப் பேச்சு வர தேவாரம் பற்றிக் குறிப்பிட்டேன். போட்டோவைக் கீழே தந்திருக்கிறேன். இதற்குப் பிறகு ஓர் தமிழ் ஆசிரியர் பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறள் நடைபாதையில் கிடந்ததைத் தான் கண்டு எடுத்துக் கொண்டதாக ஒரு செய்தி வெளியாயிற்று. என்னே பழைய நூல்களின் மேன்மை என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் கவனித்தீர்களா? 40 ஆண்டுக் காலத்தில் நூலின் பெயர் மாறிவிட்டது. நூலைத் தெருவிலிருந்து எடுத்தவர் பெயர் மாறிவிட்டது. ஆனால் நற்செய்கை மாறவில்லை. என்னே நற்செயல்களின் மகிமை என்று எண்ணிக் கொண்டேன்.


என்னுடைய விஷயம் ஹரணம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் வேறு சிலவும் உண்டு. என்னுடைய கவிதையின் பெயரான ‘மீண்டும் அவர்கள்’ என்பதை ஒரு மும்பை நாடகக் குழு ஹரணம் செய்து சென்னையில் நடத்தியது. இன்னொரு கவிதையின் பெயரான ‘ம்’ என்பதை ஓர் இலங்கை எழுத்தாளர் தன் படைப்புக்குச் சூட்டினார். என் கட்டுரைத் தொகுப்புக்குக் ‘குக்கூ என்றது கோழி’ என்றும், காவியம் ஒன்றுக்குக் ‘கந்திற்பாவை’ என்றும் பெயரிட்டிருந்தேன். ஆனால் ஒருவர் குக்கூவைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார். கந்திற்பாவை என்பதை மற்றோர் இலங்கை எழுத்தாளரான தேவகாந்தன் தன் நாவலுக்குக் கொடுத்திருக்கிறார். ‘கனவு பல காட்டல்’ என்பதும் ‘கந்திற்பாவை’ என்பதும் வெளிவர இருக்கும் நூல்களாக என் ‘கவிதைக்காக’ கட்டுரைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பின் பின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது.


சப்த ஹரணம் பற்றி எழுதிய கவிதை இயல் ஆசிரியரான ராஜசேகர, கி.பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எனவே ஹரணம் என்பது மிகப் பழமையான தொழிலாகத் தெரிகிறது.

12-05-2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு