மணல் கோடுகள்

காவிரியாற்றின் கோடை மணலில் என்
காதலியின் பெயரை நான் எழுதினேன்.
மல்லிகை இலைகளால் அதனைச் சுற்றி
வட்டம் வரைந்தேன். நாணல் பூக்களை
நான்கு திசைக்கும் கம்பமாய் நட்டேன்
ஆரோக்ய சாலைக் குளத்தில் பூக்கும்
நீல மலர்களை அங்கங்கு வைத்தேன்
அப்போது வந்தது காற்று.
மயானத்தில் திருடிய ஊதுவத்திப்
புகையுடன் மற்றும்
கை கால் முறிந்த ஒப்பாரி வரிகளுடன்
வேகமாய் வந்தது காற்று
நாணல் கம்பங்கள் விழுந்தன
மல்லிகை வட்டம் கலைந்தது.
துடைக்கும் துணிபோல் நீல மலர்களும்
தொலைவில் புரண்டு சென்றன
கொம்பும் காலும் சுழியும் உள்ள என்
காதலியின் பெயரைக் காற்று கலைத்தது.
பெயரில் அமைந்த பள்ளக் கோடுகளை
முற்றிலும் காற்றால் அழிக்க ஆகலை
மணலில் இன்னமும் தெரிந்தது நான்
எழுதிய காதலியின் இனிய பெயர்
படிக்கும் லிபியாய் இல்லை யென்றாலும்
வெட்கத்தைத் தந்தன மணலில் கோடுகள்.