சுவரில் சமுத்திரம்

கூடம், தாழ்வாரம், முற்றம் என்று
பழங்கால அமைப்பில் இருந்தது வீடு.
மதியத்துக்குப்பின் கடற்கரைக் காற்று
வீசும் என்றார் தரகர்.

வெள்ளை அடிப்பதற்கு முன்பாக
ஒருவர் இருந்து சென்றதாய்
கதைகள் சொல்ல முயன்றது வீடு

கூடத்தின் மூலையில் குப்பைகள்.
காலி செய்து போகிறவர் குப்பைகளை
விட்டுப் போக வேண்டும் என்றார் தரகர்.
சுவர்களை நோட்டம் விட்டேன்.
ஈரக் கசிவுகள்.
கசிவுகளின் ஊடே நாட்டியப் பெண்கள்
கவலையில் தங்களை மறந்த பெண்கள்
இவர்களின் உருவங்கள் புலப்பட்டன.

சிமெண்டுக் கலவையில்
கடற்கரைப் பொடிமணல் சேர்ந்துவிட்டால்
சுவர்கள் கசியும். ஆனால்
தப்பில்லை என்றார் தரகர்.

சுவரை உற்றுப் பார்த்தேன்
சுவரில் சிக்கிய சமுத்திரம்
தப்பித்துக்கொள்ள உதவி கேட்கிறது

2002