வெளிச்சம் வந்தது

விளக்குகள் தெருவில் அணைந்தன.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கூக்
குரலிட்டனர். விளக்குகள் அணைந்து கங்குல்
சுற்றிலும் சூழ்ந்ததில் அவர்களுக்கு ஆனந்தம்.

ஆனால் தெருவில் பெரியோர்கள்
நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினார்கள்.
மின்சாரவாரியத்தின் பொறியாளரைத்
தொலைபேசியில் கூப்பிட்டுத்
திட்டினாராம் தெருவாசி ஒருவர் – தனது
தொ.பே. எண்ணைத் தெரிவிக்காமலே.

இன்னமும் தெருவோ இருளில்தான் இருந்தது.
சிறுவர்கள் ஆந்தைகள் போல
இருள் விரும்பிகள் போலும்.
சுரங்கப் பாதையைக் கடக்கும் இளைஞர்கள்
சீழ்க்கை அடிப்பதைப் பார்த்ததுண்டு நான்.

ஆயர்கள் சீழ்க்கை அடிப்பாரென
தொன்மை இலக்கியம் சொல்கிறது.
அவர்கள் தானே மூங்கில் குழாயை
இசைக்கும் குழலாய் அருளிச் செய்தது.

எங்கள் ஊர் அரங்கநாதன் கோயில் முன்பு
அரிசி மாவினால் கோலமிட்ட – பிள்ளைகள்
கனடாவில், ஜெர்மனியில் – மூதாட்டி
வௌவால்கள் ஆதியில் தவசிகள் என்றாள்.

எப்படி அவர்கள் வௌவால்கள் ஆனதென்றேன்
கோணங்கித் தவசி ஒருவன் குகைக்குள்
முதல் முறையாகப் போனதும் என்னவோ ஆசையாய்
சீழ்க்கை அடித்தானாம். மற்ற தவசிகள்

அவனை அப்படி ஆகச் சாபமிட்டனராம்.
எங்கள் அண்ணன் சீழ்க்கை அடித்ததை
அப்பா கண்டனம் செய்ததற்கு காரணம்
அண்ணன் வவ்வால் ஆவதைப் பயந்தல்ல.
குழாய்மை, நீளம், மையிருள் இவைதாம்
மனிதனை சீழ்க்கை அடிக்கத் தூண்டுவனவோ?

விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின
இன்னும் அதிகமாய் சிறுவர்கள் கூச்சலிட்டனர்.

விருத்திரன் என்னும் அரக்கன் ஒளித்த
ப்ரகாசத்தை இந்திரன் மீட்டதும் முனிவர்கள்
இப்படிதான் மகிழ்ந்திருப்பாரோ?
வியப்பாய் உள்ளது. இருளில் எனக்கேன்
கவிதை ஒன்று தோன்றிற்றென்று!

குறிப்பு:
கோயிலின் நிலபுலன் சொத்து பத்து
காசு மாலை வெள்ளிப் பாத்திரங்கள்
சிலசமயம் உண்டியல் பணங்கள்
இவற்றைத் தங்கள் உபயோகத்துக்குக்
கொண்டு போன
கோயில் அதிகாரிகள்,
ஊழியர்கள் இவர்களே அடுத்த
ஜன்மத்தில் வவ்வால் ஆவர் என்பதும்
ஊரில் வழங்கும் கதைதான். இந்தக்
கதையைக் கேட்டதும் ஊரில் பலபேர்
வருங்கால வவ்வால்களாக எனக்குத்
தெரியத் தொடங்கினர். ஆனால்
இந்தக் கதையை நான் விரும்பவில்லை.
எப்படி விரும்புவேன் என்
ஞானாட்சரியின் தாய் மாமன் வவ்வால் ஆவதை?

2001