குருவிக்கு வேண்டுகோள்

கூடு கட்ட விடமாட்டேன்
சின்னக் குருவியே! என் வீட்டு
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம்
பருவக் காற்றுகள் உள்ளே வர.

எஞ்சிய உணவின் வாசம் மறையவும்
துவைக்கப் படாத
துணிகளின் வாடை போகவும்
இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று
தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும்
பருவக் காற்றுகள் உள்ளே வீசத்
திறந்துள்ளன எனது சன்னல்கள்.

எனது வீட்டுக்குள் வருவோர்
தமது வாசத்தோடு வந்து போகிறார்
திரும்பிப் போகும்போது அதிலே கொஞ்சம்
விட்டு விட்டே போகிறார் தெரியுமா?

சன்னல் வழியே சிறகை மடக்கி
வரமுயலாத சின்னக் குருவியே!
கூடு கட்டப் பொருந்திய இடங்கள்
இல்லை குருவியே எனது வீட்டில்.

நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம்
என்ன ஆயின? நீயேன் கூட்டை என்
வீட்டுக்குள் கட்ட வளைய வருகிறாய்?

வெள்ளிக்கிழமை விஜயம் செய்யும்
சாம்பல் பூனையா? கண்ணெதிரில்
ஆள் இருக்கவும் உள்ளே நுழையும்
கிழமை பாராட்டாத பெரிய எலியா?

புறப்படும் போது தோள் மேல் குதிக்கும்
செவ்வாய்ப் பல்லியா? எது உனக்குப்
பரிந்துரை செய்தது எனது வீட்டை?
வீட்டில் மனைவியோ தாயோ கட்டிக் கொடுத்த
பொட்டலத்து மதிய உணவை
ஓட்டலில் வைத்து சாப்பிடும் நடுத்தர
வர்க்கத்து உழைப்பாளி போல எனது
வீட்டுக்குள் புழு பூச்சிகளைக்
கொணர முயல்கிறாய் சின்னக் குருவியே!
வெளியிடத்து உணவு அனுமதி இல்லையென
பலகையில் எழுதிப் போடவா குருவியே!

கூடு கட்ட விடமாட்டேன்
சின்னக் குருவியே! என் வீட்டு
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம்
பருவக்காற்றுகள் உள்ளே வர.

1999