களத்திரம்

சொன்னார். சொன்னார். மூச்சுவிடாமல்
சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.
இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்.
உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்
எவ்வளவு கஷ்டம் கேட்பதுபோல
நீண்ட நேரம் பாவனை செய்வது?
கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்
சொன்னார். மூன்றாம் மனிதன்
ஒருவன் வந்தென்னை மீட்க
மாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்
அவரே ஒய்ந்துபோய் அடுத்த சந்திப்பில்
மீதியைச் சொல்வதாய் என்னை நீங்கினார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம்
உம்மிடம் சொன்னால் நீரும் என்போல்
ஆகி விடுவீர்.
மனைவியைக் கனவில் காணும்
வாழ்க்கைபோல் கொடுமை உண்டோ?

2001