கரடித் தெரு

குழந்தை அழுதது. மனைவி தேற்றினாள்.
விடாமல் அழுதது குழந்தை.
‘அப்பா வருகிறார். உதைதான் கிடைக்கும்.
அதற்குள் அழுகையை நிறுத்’தென்று
மனைவி கெஞ்சினாள்.
குழந்தை அழுதது.
தேம்பித் தேம்பி விடாமல் அழுதது.
அந்தச் சமயம் இவன்போனான்.
‘அழாமல் குழந்தையை வளர்க்க தெரியல.’
இவன் சொன்னான் கடுகடுப்போடு.
‘குழந்தை கேட்பதை வாங்கிக் கொடுத்தால்
வளர்ப்பதில் கஷ்டம் இல்லை’ என்றாள் மனைவி.
‘என்ன வேண்டுமாம்?’ இவன் கேட்டான்.
மூன்றாம் வீட்டில் இன்றைக்குக் காலை
கரடி ஒன்றை வாங்கி விட்டார்கள்.
வாசலில் அந்தக் கரடியைப் பார்க்கக்
கூட்டம். கூட்டம். அப்படிக் கூட்டம்.
நமது வீட்டிலும் கரடி வேண்டுமாம்.
மனைவி சொன்னதைக் கேட்டதும்
அதிர்ச்சி அடைந்தவன் தெருவில் சென்று
நோட்டம் விடடான்
அங்கங்கே கரடிகள்… கரடிகள்…
தன்னைத் தவிர தெருவில் எல்லோரும்
கரடி ஒன்றை வாங்கி விட்டார்கள்.
என்னவோ உரசினாற்போல உணர்ந்ததில்
திரும்பிப் பார்த்தான்
மூன்றாம் வீட்டின் குடும்பத் தலைவர்
கரடி புதுசு அழைத்துப் போகிறார்.
‘எங்கே வாங்கினீர்?’ என்றான்.
சொல்ல விருப்பமின்றி அவர் போனார்.
மாதா மாதச் சேமிப்பில் வாங்கினாராம்.
குழந்தையின் அழுகையும் மனைவியின் வசவும்
காதில் விழுந்தது. மனைவி சொல்கிறாள்.
கரடி வாங்கக் கொடுப்பினை வேண்டும்.
அப்பாவுக்கு கொடுப்பினை ஏது?
உருட்டிவிட்ட தார்ப்பீப்பாய் போல
தெருவில் அங்கங்கே கரடிகள்.
கரடி வாங்கிய வீட்டில் எல்லாம்
சிரிப்பு மகிழ்ச்சி ஆரவாரம்.
இவன் வீட்டில் கரடி இல்லை
சலிப்பு. சோகம். கரடியில்லா வெறுமை.
விழித்துக்கொண்டு தெருவில் இறங்கினேன்.
தெருவில் வழக்கம்போல
ஆடுகள் மாடுகள் குறிப்பாய் எருமைகள்…
வழக்கம்போலக் காலைக் கவர்ப்பாலை
வாங்கிக்கொண்டு பலபேர் போனார்கள்.
அவர்களில் யாரும் என்னைப் போல
கனவில் கரடியைக் கண்டவர் இல்லை.

1999