என்ஜின் கொட்டகை

பள்ளிக்கூடங்களில் அந்தக் காலத்தில்
பிரயாணம் போவதும் படிப்பது போல.

பள்ளிக்கூடத்தில் அழைத்துப் போன
இடங்களைத் தவிர நானே மேற்கொண்ட
பயணமும் உண்டு. அவற்றிலே ஒன்று
ரெயில்வே நிலையம். அங்கே இருக்கும்
என்ஜின் கொட்டகை! என்ஜின் கொட்டகை!

ஒரு பூதம் தனது நீண்ட சதுர
வாயைத் திறந்தது போலத் தோற்றம்.
அதற்குள் நிற்கும் என்ஜின்–
கொட்டகைக்குள் அடைப்பட்டதற்குக்
கோபப்பட்டது போல கூச்சலிட்டு.

ஒழுங்காய் உண்ணத் தெரியாதவன்
சிதறிய சோற்றைப்போல
எங்கும் எங்கும் நிலக்கரித் துண்டுகள்.
உருகிடும் வெண்ணெயின் வாசனை
எப்படிப் பிடிக்குமோ அப்படி எனக்கு
நிலக்கரி எரியும் வாசனை பிடிக்கும்.
என்ஜின் மேலே எனக்கொரு காதல்
அடிக்கடி அதனைப் பார்ப்பேன்

சும்மா நிற்கவும் காலுக்குக் கீழே
தண்டவாளங்கள் வைத்திருக்கும்
என்ஜினைப் போலொரு ஜீவன் உண்டோ!

1999