வெப்பமரம்

பள்ளிக்கூடமென்றால் தெருவில் புரண்டழும்
கல்யாண சுந்தரம் ஓடுகிறான்.
இடம் பெயராமல் வெற்றிலை ஊறலைத்
தெருவில் உமிழும் சாமிநாத சேர்வையும்
பரபரப்பாக வடக்கே ஓடுகிறார்.
அடிமேல் அடிவைத்து வாயு புத்திரன்
கோயிலைச் சுற்றுவதுபோல் எப்போதும்
நடக்கும் சௌமியாவும் ஓடுகிறாள்.
எவனோ திருநீற்றுக்காரனுடன்
ஓடிப்போன பத்மநாபன் மகள் கீதா
அந்தப் பக்கம் நகர்கிறாள்.
குதிரை வண்டியை நிறுத்தச் சொல்லி
வேடிக்கை பார்க்கப் பயணிகள் இறங்குகிறார்கள்.
காக்கைகள் கூவும் வயலில் அக்கறை
அற்று நின்ற கொக்கும் நாரையும்
அந்தத் திசையை ஆராய்ந்து பார்க்கின்றன.
நிண்ட காலமாய்ப் பூட்டிக் கிடக்கும்
தாண்டவராயன் கோயிலின் பக்கம்
ஆடு நடக்கும் பாதையில் எதிர்ப்படும்
பத்தடி உயர வேப்பமரத்தில்
பால் வடிகிறதாம் பால்.
மஞ்சள் குங்குமம் அப்பி
பாவாடை சுற்றி தீப தூபம் காட்டி
உருண்டை வெல்லமும் எலுமிச்சம்
பழமும் படைத்து ‘தாயே’ என்று
பரவசப்பட்டனர் மக்கள்.
என்னையும் சிலபேர் பார்க்க வரச்சொன்னார்.
அதிசயமான அந்த மரத்தை விட்டு நீ
இந்த மரத்தின் அருகில் எதற்கு நிற்கிறாய்?
என்று கேட்கிறார் ஒருவர்.
எப்படிச் சொல்வேன் அவர்க்கு
வேப்பமரத்தைக் கருவுறச் செய்த
விஷம விருட்சம் இதுதான் என்று.

2001