மேம்பாலங்கள்

பாலங்களைப் பற்றிக் கவிதை எழுதி
ஆண்டுகள் எத்தனை ஆகிவிட்டன

மூங்கில் பாலத்தைப் பற்றி முன்பு நான்
எழுதினேனே ஒரு கவிதை அதை நீங்கள்
படித்ததுண்டா? இராது. கேட்பானேன்.
அதுவும் நல்லதே. ஏன் என்றால்
காலப் போக்கில் பாலத்தின் தத்துவம்
மாறிவிட்டதே! இல்லையா? இணைப்பது
மட்டும் அல்லவாம் பாலத்தின் வேலை.
கடக்க வேண்டியவை இன்று
நதிகள் மட்டுமா! சாலைகள் கூட.

இன்றைய பாலங்களெல்லாம் மேம்
பட்டுவிட்டன. அவற்றின் கீழ்
மக்கள் – அதாவது – நானும் நீங்களும்
செல்லவே முடியாது. நமக்கு
சுரங்கப் பாதைகள் உண்டு. வெற்றிலை எச்சில்
வழியும் சுவர்களும், பனியன், ஜட்டி,
கிரிக்கெட், குல்லாய், கர்ச்சீப் கடைகளும்
மருந்தூட்டி உறங்கச் செய்த குழந்தையைக்
கையில் ஏந்திய பெருந்துளைக்
காதுத் தாயும் அவள் கணவனும்
இன்னும் சிலதரப் பிச்சைகளும்
நமக்குப் பிடிக்கும் என்பதால் சுரங்கப்
பாதையில் அவற்றைத் தந்திருக்கிறார்கள்

தொப்புளும் தொடையும் காட்டிக்
காதல் செய்யும் நாயகி
சேலை கட்டிய நாளில்
அவளைத் துரத்தும் திரைப்படக்
காட்சிகள் இங்கே
பிடிக்கப் பட்டதுண்டாம்
மேம்பாலங்களில் சில தமிழ் படித்தவை.
நாத்திகப் பாலங்கள் உள்ளன அல்லவா. ஆனால்
பாலங்கள் மேம்பாலங்கள் எதிலும்
கவிஞர்கள் பாடகர்கள் சிற்பிகள் கிடையாது
கர்வமுடைய மேம்பாலத்தின்
முதுகுப் புடைப்பில் மறைந்து
விடுகின்றன சூரிய
உதயமும் அஸ்தமனமும் கூட.

2000