ஆயிரங்கண்ணி

மனிதரில் சில பேர் ‘நாளை
வருகிறேன்’ என்றால் நெஞ்சில்
வருவது அவர்க்கு முன்னே
வளர்தணல் போன்ற அச்சம்.

‘அவர் வந்தால்
வீட்டில் இல்லை.
போகிற
இடத்தைக்கூட
சொல்லாமல்
போனதாகச்
சொல்’ என்று
சொல்வாருண்டு
மாதமும் நாளும் போழ்தும்
விலக்கல்ல. இன்று போனால்
விடியுமே நாளை என்பார்
அவரை நான் அறிவேன் அன்றோ!

உன் வரவு அவ்வாறல்ல.

பிரமாதி வருடம் – நல்ல
மார்கழி பதினாறாம் நாள் –
பூஜ்யர்கள் மூன்று பேர்கள்
புடைசூழ வருவாய் பெண்ணே

மகளுக்குப் பிரசவம் பார்க்க
வருகிற தாயைப் போல
வருகிறாய் சகஸ்ரப் பெண்ணே

உலகங்கள் உன்னை நோக்கி
எழுந்தன. பவிஷ்யத் கால
விளக்கிலே திரிகள் ஐந்தும்
பொலிந்தன! வருக பெண்ணே!
வருக பெண்ணே!

2000