வெள்ளைத்தனைய மலர் நீட்டம்

ஆறாம் வகுப்பு – என்றுதான் நினைப்பு.

செம்மஞ்சள் நிறத்து மகிழம் பழங்களைக்
கிளையில் பச்சைக் கிளிகள் இருந்துண்ண
மாணவர் சிலபேர் நிலத்தில் பழங்களைத்
தேடி குனிந்து திரிகிறார்கள்.

மனதை கேவச் செய்யும் அடர்இதழ்
மகிழம் பூவின் மணத்தைச் சுவாசித்து
மதிய இடைவெளியில்
புத்தகம் ஒன்றைப் பிரித்தேன்.

ஈர்க்குச்சிப் பருமன்தான் புத்தகம்
பிரித்ததும் மூடி அட்டையைப் பார்த்தேன்.
என்ன புத்தகம் என்றறிய.
‘திருக்குறள்’ என்று போட்டிருக்கக் கீழே
ஐயனே உமது திருவுருவம்.

நார்த்தங்காய் அளவு உச்சியில்
திரண்டு முடிந்த கொண்டையும்
கொப்பூழை நோக்கி இறங்கிய தாடியும்
இடது கையில் ஏந்திய ஓலைச்சுவடியும்
முத்திரை காட்டிய வலது கையும்
அகன்ற மார்பும் சுருங்கிய இடையும்
நெற்றியில் துலங்கிய நீறும்
சம்மணம் இட்ட அமர்நிலையில்
ஐயனே உமது திருவுருவம்.

மோதிர விரலும் சுண்டு விரலும் போல
ஓரடி நீண்டும் மற்றது சிறுத்தும்
காணப்பட்டன குறள் வெண்பாக்கள்
படித்துப்படித்துச் சப்புக்கொட்டினேன்.

எங்கள் வீட்டுப் புழக்கடைப் பக்கம்
கத்திரிப் பயிர்களுக்கிடையே ஒருநாள்
விரைந்த ஆமைக்குட்டியைக் கண்டேன்.

ஓட்டுக்கு வெளியே தலையை நீட்டி
என்னைப் பார்த்து மருண்டது குட்டி.

உமது குறளைப் படிக்கும்போது
நினைவில் வந்தது இந் நிகழ்வு.

குழந்தையின் குரலில், இசைதரு வாத்தியத்தில்
மழையில் புல்லில் வளரும் முள்மரத்தில்
கதிரையே நோக்கி மலரும் நெருஞ்சியில்
ஐயனே உன்னை நான் சந்தித்தேன்.

கொல்லர் வீட்டிலும் உழவர் வீட்டிலும்
வேதியர் வீட்டிலும் உன்னை நினைத்தேன்.

நன்றாய் உள்ளது வள்ளுவர் பாட்டென
ஆசிரியப் பெருமகன் அவரிடம் சொன்னேன்.
திகைத்துப் போனார் வகுப்பாசிரியர்
நானும் ஒரு கணம் திகைத்தேன்.
அட்டைப் படத்தில் இருந்த நீர்,
கண் சிமிட்டிக் கொஞ்சம்
கண் சிமிட்டிக் கொஞ்சம்
சிரிக்கவும் செய்தீர் என்னிடம் – அதனால்

2000