வரிசையில் இருங்கள்…

வரிசையில் இருங்கள் வரிசையில் இருங்கள்
வரிசை என்பது முக்கியமாகும்.
உயரமாய் குள்ளமாய் நீங்கள் இருக்கலாம்
வரிசையில் நீங்கள் அனைவரும் மனிதர்
வரிசையைக் காப்பாற்றுங்கள் வரிசையில் உங்கள்
ஆசைநாய்களைத் தனியாய் நிறுத்துங்கள்
வரிசையின் நீளம் உங்களைப் பொறுத்தது
முன்னே நிற்பவர் பின் பக்கம் பார்த்து
வரிசை வரிசை என்று கத்துங்கள்
எல்லோருக்கும் கேட்கும் குரலே ஆள்குரல்
வரிசையைக் கலைத்தால் கலகம் உண்டாகும்.
வரிசைதான் எதற்கும் மூலாதாரம்
ஊரும் பேரு வரிசையில் இல்லை
வரிசையின் முதலில் இருப்பவர் யாரு
யாரைப் போல அவரிருப்பாரு?
எதன் பொருட்டாக வரிசை என்பது
ஐயப்பாட்டின் அற்பக் கேள்வி
நமக்குத் தெரியும் எதன் பொருட்டென்று
நாற்பதினாயிரம் தெருக்கள் கடந்தது வரிசை
என்றாலும் என்ன. வரிசையின் முனையில்
தற்போதிருக்கும் ஒருத்தன் கையின்
வியர்வை ஈரம் என்னிருகையில்.

1974