டஃபேடாக் குடையும் தாமரைப் பூக்களும்

புளிய மரத்தின் கிளையொன்றில்
அந்தக் குடை தொங்கிக்
கொண்டிருந்தது.
வயல் வரப்பைத் தாண்டி
வெயிலில் சுண்டிய
இவன் வந்தான் அந்தப் பக்கம்.
தொங்கும் குடையை இவன்
பார்த்தான்.
இந்தக் குடையெனக்குக் கிட்டுமென்றால்
எஞ்சிக் கிடக்கும் தொலைவை
எளிதாகக் கடந்து விடலாம்
என எண்ணிக் குடையைப்
பரிவோடு பார்த்தான்.

‘குடையே! குடையே! பல வணக்கம்.
கோடை வெயிலின் கொடுமையினால்
எங்கும் நடக்க முடியலை.
உன்னை நான் எடுத்துக் கொண்டு
நடக்கவா?’ என்றான்.
அதற்குக் குடை சொல்லும்:
‘சம்மதம்’. ஆனால் நிபந்தனை ஒன்று
வலமோ இடமோ எனக்கில்லை எங்கோ
உடைந்தது ஒரு கம்பி. பார்த்துக் கொள்.
வடக்குத் தெருவிலே
தேங்காய்க் கடையில்
விட்டு விடாதே. மறுபடியும் இந்தப்
புளியமரத்தின் கிளையிலே
முன்போல
மாட்டி விடணும் இசைவாயா?
இசைவாய்த் தலையை
இவன் ஆட்டி அந்தக்
குடையை எடுக்கத் தன் கை உயர்த்தக்
‘கொஞ்சம் இருடா… அதற்கு முன்
இக்குளத்தில்
கொஞ்சம் இறங்கி ஒரு மூன்று
தாமைரைப்பூ கொய்து
இந்தப் புளியமரத்தின் அடி வேரில்
கும்பிட்டு வைத்துக் தொடு பிறகு’
இவனும் அதற்கு மனமிசைந்து
நேரே நடந்து
குளத்தில் இறங்கினான்.
நீந்தத் தொடங்கினான்.
அப்போது நீர்மேல் தலை தெரியத்
தண்ணீர்ப் பாம்பொன்று கூடவே நீந்தி
அருகிலே வந்து
‘கரையில் குளித்துத் திரும்புவாய்
என்றால்
நடுக்குளம் பார்த்து விரைவாக
நீந்துகிறாய்.
என்ன விஷய’மென, சொன்னான்.
அதற்கு ‘மூன்றைப் பறிக்க
ஒருபோதும் நான் இணங்கேன்.
உன்மேல் இரங்கி இருபூ பறிக்க
அனுமதிப்பேன்’
என்றது தண்ணீர்ப் பாம்பு.
அப்போது
நீர்மேல்தனை தோன்றி நின்ற
ஒரு தவளை
‘இரண்டு பூக் கொய்ய
அனுமதிக்கமாட்டேன்
கரைக்குத் திரும்’பென்று
கோபத்தால் சொல்ல,
இரண்டையும் கெஞ்சி
இவன் கேட்க
வாதாடி வாதாடிப் பின்னர்
மிகக் கெஞ்சி ஒப்புதல் பெற்றான்.
அவை விலக நீந்தி
நடுக்குளத்தை நோக்கி
இரு கையும் வீசி
நெடுநேரம் நீந்தி நெடுநேரம் நீந்தி
நெடுநேரம் நீந்தி அணுக முடியாத
மாயத் தொலைவில் மலர்ந்திருந்த
தாமரைப்பூ
கண்ணெதிரே தோன்றினும்
கைகளுக் கெட்டாமல்
நீந்திக் கழித்த தொலைவு பெரிதாக
ஓயாமல் நீந்தி நடுக்குளத்தை
எட்டாமல்
நடுக்குளத்தை எட்டும் முன் வானம்
கருமை கொள்ள எண்ணத்தை
விட்டு கரைக்குத் திரும்பினான்.

புளிய மரத்துக் கிளையிலே
தொங்கும்
குடையை வணங்கி
‘வெயில் போயிற்று பார்.
எனக்கினிமேல் நீ
வேண்டாம்’ எனச் சொன்னான்.
சொல்லி முடிப்பதற்குள்
விண்ணில் இடி இடிக்கும்;
மின்னல்
நடனமிடும்;
இனியும் குடை வேண்டும்
என்பது போல்
அப்போது பார்த்தான் கடையை.
எதிரே
குளத்தையும் பார்த்தான்.
கரையோரம்
ஆடி அசைத்தன தாமரைப்
பூ மூன்றும்.

1994