கோபித்துக்கொண்ட நட்சத்திரம்

‘வருகிலன் யான் இனி’, வருகிலன் யான் இனி’,
‘வாராதொழிக’, ‘வருவாயின்
குறுந்தடி கொண்டு தாக்குவன் காண்’ எனவும்
‘வருகிலன். விசும்பின் அளப்பிலா ஆழத்தில்
மூழ்குவன்,’ ‘வருகிலன் யான் இனி’ என்னும்
உரையாடல் கேட்டது போன்ற பிரமை –
விண்ணின் குறுக்கில் மறைந்த
நட்சத்திர ‘கல்லை’க் கண்டபோது.

நட்சத்திரங்களின் குக்கிராமங்களை நீங்கி
கோபித்துக்கொண்டு போகும் அந்த
பிள்ளை நட்சத்திரத்தைக் கூவி
அமைதி செய்வார் ஒருவரும் இல்லை.

வெளியூரில் இருக்கும் ஞானாட்சரியைத்
தொலை பேசியில் கூப்பிட்டேன். ‘ஆய்தொடி
நங்காய். வெளியே பாரடி. கோபித்துக்
கொண்டு போகும் பிள்ளை நட்சத்திரத்தை’
என்றேன். ‘வெட்கம் இல்லை உனக்கு?
என்னிடம் பேச இதொரு சாக்’ கென்று
பேசியைக் கீழே வைத்தாள். எண்களை
மறுபடி சுற்றினேன். ‘அடேய். ஆய் அண்டிரா!
பேசியை வையடா’ என்றதோர் ஆண்குரல்.

விண்ணின் மையிருள் மடிப்புகளில் எங்கோ
ஊடுருவி மறைந்தது நட்சத்திரம்
என்ன அநியாயம். வானம்
சற்றும் வெறுமையாகி விடவில்லை.

2002