குரங்குகள் ஏன் பேசுவதில்லை

ஒரு காலத்தில் குரங்குகள் நம்மைப் போலவே
பேசின என்று நம்பப் படுகின்றது.
அப்படியானால் இன்றைய குரங்குகள்
பேசாமல் இருக்கக் காரணம் என்ன?

சொல்லவா அந்த சோகக் கதையை?

இலங்கை வேந்தனைக் கொன்றதும் இராமன்
அயோத்தி திரும்பத் தொடங்கினான்.
புஷ்பக விமானம் ஏற்பாடாகி
இராமனும் சீதையும் புறப்பட்டார்கள்.

அடுத்துத் தாங்கள் செய்யப்போவது
என்னவென்று சிந்தித்தன வானரங்கள்.
தங்களின் சொந்தக் கானகம் விட்டு
நெடிய காலம் ஆனபடியால்
காட்டுக்குத் திரும்பவே ஆசைப்பட்டன.

இராமன் இலக்குவன் சீதை மூவரும்
தங்களைப் பற்றி நினைப்பில்லாமலே –
காரியம் முடிந்தபின் யார் நினைப்பார்கள் –
போவதைப் பற்றி வானரங்கள் வெம்பின.
புஷ்பக விமானம் தாமதித்தது.
இராமன் இறங்கினான். அனுமனைக் கூவி
என்னவோ சொன்னான். அனுமன் தன் தலை
அசைத்ததை வானரங்கள் கண்டன.

அயோத்தியில் இராமன் முடிபுனை நாளில்
வானரங்கள் வந்துவிடக் கோரி
இராமன் சொன்னதாய் அனுமன் சொன்னான்
நிர்ப்பந்தத்தின் பேரில் இசைந்தன.

முடிபுனை நாளன்று அயோத்தி நகரில்
பல்லாயிரம் பேர் விருந்துண்ண வேண்டும்.
அந்தப் பொறுப்பை வானரங்கள் ஏற்கணும்.

மறுக்க முடியுமா இராமன் கட்டளை?
வண்டி வண்டியாய் வாழைக்காய்கள்
வண்டி வண்டியாய் மாங்காய் தேங்காய்
அவரை துவரை கிச்சிலி பயறு
கேரள மிளகு வண்டி வண்டியாய்

வண்டி வண்டியாய் அரிசி மூட்டைகள்
உளுந்து, இஞ்சி, மஞ்சள், பலவகைக்
கிழங்குளை எல்லாம் வண்டி வண்டியாய்
ஓட்டி வந்தது வானரக் கூட்டம்
தலையிலும் தோளிலும் இவற்றைச் சமந்து
அடுக்களைக்குள் கொண்டு சேர்த்தன.
விறகு தேடிக் கொணர்ந்த வானரங்கள்
சிறப்பாய்ப் பலரால் பேசப்பட்டன.

முடிபுனை நிகழ்ச்சி தொடங்கும் முன்பே
வயிறு நிரப்பும் நிகழ்ச்சி தொடங்கிற்று.
எவரும் ஆனால் வானரம் பசியாற
வருக என்று அழைக்கவே இல்லை.
அயோத்தி மக்கள் அவற்றை நோக்கிப்
பழங்களைப் பிடிபிடி என்று வீசினர்
எந்தக் குரங்கும் முன்வரவில்லை
எறியும் பழத்தை எட்டிப் பிடிக்க

வெறுத்துப் போயின வானரங்கள்
விசாரிக்கவில்லை இராமனும் சீதையும்.
வருந்தின வானரங்கள். அவற்றின் நாயகன்
ஒருவன் அப்போது சூளுரை சொன்னான்

“வானரக் குலமே! வானரக் குலமே!
நாமும் மனிதர்போல பேசியதால்தான்
அவர்களின் அடிமையாய் ஆக்கப்பட்டோம்.
பேசினால் அவர்கள் வேலை வாங்குவர்.
பழகிய பேரிடம் வேலை வாங்கும்
பண்பிலே ராமனும் கீமனும் ஒன்றுதான்.
எனவே இனிமேல் மனிதர் முன்னே
வானரம் எதுவும் பேசக்கூடாது.”

இதுதான் காரணம் வாரங்கள்
அப்புறம் பேசாமல் போனதற்கு.
இன்னமும் மனிதன் முயன்று பார்க்கிறான்.
மற்ற உயிர்களைப் பேச வைக்க.
அப்போது தானே இஷ்டப்படி
வேலை வாங்கலாம் பேச வைத்து.

2002

குறிப்பு: குரங்குகள் பேசும். ஆனால் பேசுவதில்லை. பேசினால் மனிதர்கள் அவற்றுக்கு வேலை கொடுத்து வேலை வாங்குவர் என்று இந்தியர் நம்புவதாக அந்தோயின் லாக்ராண்ட் (1699) என்பவர் சொல்லியிருக்கிறார்.