குயிலின் பாட்டு

குயில்கள் பாடுவதாய்க்
கவிஞர்கள் சொல்வார்கள்
பட்சி சாஸ்திரிகள்
சொல்லும் கதை வேறு.

மரத்தில் தாங்கள்
பிடித்த இடத்தைத்
தம்மதே என்று
மற்ற இறக்கை
இனங்களுக்கு உணர்த்த
கூறும் அறிவிப்பாம் அது.

இளந்தளிர் மினுக்கும்
அரச மரத்தில்
குயிலொன்று கூவக்
கேட்கிறேன் இப்போது

பாட்டென்று நினைத்தது
பிழையாய்ப் போனாலும் தன்
உரிமையை இப்படி
இனிமையாய்க் கூற வேறு
யாரால் முடியும் சொல்லுங்கள்.

1998