கழை

தெருவின் நடுவில் கம்பங்கள் இரண்டை
அமைக்கத் தொடங்கினான் கழைக்கூத்தாடி.

வாத்தியம் ஒன்றை அவனது மனைவி
உரத்து வாசிக்கத் தொடங்கினாள்.

நெடிய கோலைக் கையில் பற்றிக்
கயிற்றின் மேலே நடந்து காட்டினான்.

தரையில் சிறுமி கரணம் போட்டாள்.

ஊட்டுப்பல் கொட்டி வயசுப்பல் தோன்றாத
குழந்தையைத் துணியில் மூட்டையாய்க் கட்டி
அதன்மேல் காலை ஊன்றிப்
பார்ப்பவர் மருள நின்று காட்டினான்
முண்டாசுக்காரக் கழைக்ககூத்தாடி

ஆட்டம் முடிந்தது கூட்டத்தினரைக்
காசு கேட்டுக் கையேந்தி வந்தாள்.

கூட்டம் கலைந்தது காசு தராமல்.

பாவம் கழைக்கூத்தாடி
அவனுக்குத் தெரியவில்லை – நாம்
பார்ப்பதையெல்லாம் ரசிப்பதில்லை
ரசிப்பதையெல்லாம் ஏற்பதில்லை
ஏற்பதற்கெல்லாம் தருவதுமில்லை
என்கிற நமது சம்பிரதாயம்.

1996