எதற்கோ உள்ளதை…

கறிகாய்க் கடைக்குப் பக்கத்தில் சந்தித்த
எனது பழைய நண்பன் என்னிடம்
சொன்னான் ‘வாங்கி விட்டேன் ஒருவழியாக’.
என்ன தெரியுமா? பதவி உயர்வு.

மகள் கல்யாணத்திற்காக வைத்திருந்த
இருபதினாயிரம் ரூபாயை எடுத்து
உரிய இடத்தில் கொடுத்துக் கிடைத்ததாம்
பதவி உயர்வு. இல்லையென்றால் அவனை
தட்டிக் கழித்து வேறே ஒருவர்க்குப்
போய்விட்டிருக்குமாம் பதவி உயர்வு.

‘வாழ்த்துக்கள்’ என்றேன்.
உலகம் புரியாத எனது குரலில்.

ஒரு கிலோ வாங்கினால் இலவசமாக
மூக்கு வைத்த பிளாஸ்டிக் ஜாடி தரப்படும்
பானகத் தூளொன்று வாங்கப் போனேன்.
கடைக்காரர் சொன்னார். ஒன்றுதான் இருக்கு
வேறே ஒருவர்க்கு வைக்கப்பட்டிருக்கு
என்றாலும் உங்களுக்குத் தருகிறேன் என்றார்.

‘நன்றி’ என்றேன்
உலகம் புரியாத அதே குரலில்.

திரும்பும்போதில் என்னைத் தொடர்ந்தார்
கொஞ்சம் தெரிந்த வேறொரு நண்பர்.
வீட்டுக் கழைத்தேன். உபசாரம் பெற்றபின்
நண்பர் கேட்டார் கடனாய் ஒரு தொகை.
அரிசிக்காரர் வரவில்லை. அவர்க்குக்
கொடுக்க வேண்டிய பணத்தைத் தருகிறேன்
என்றேன். பணத்தைக் கொடுத்தேன். அவர் போனார்.

அப்படி எதற்குச் சொன்னேன் நானென்று
நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.
எதற்கோ உள்ளதை வேறெதற்கோ
கொடுப்பதில் அல்லது அப்படிச் சொல்வதில்
மகிழ்ச்சி உள்ளதோ ரகசியமாக.

1996