கண்ணீர்ப் புகை

[1957-58ம் ஆண்டில் என்னுடைய சிறுகதை ஒன்று தினமணி கதிரில் வெளியாயிற்று. அதற்குப் பிறகு ஒரு கதை அனுப்பினேன். அது வெளியாகவும் இல்லை, திரும்பி வரவுமில்லை. பிறகு 1972ல் ஒரு கதை எழுதி கசடதபறவில் வெளியிட முயன்றேன். நண்பர்கள் பிறகு பார்க்கலாம் என்று விட்டுவிட்டார்கள். பிறகு ஒரு கதை – கண்ணீர்ப் புகை – நானே பிரசுரித்த ‘கவன’த்தில் 1980ல் வெளியிட்டேன். இது ஒன்றுதான் எஞ்சியுள்ளது. இதை எதிர்த்துப் பேசியவர்கள் அன்று இருந்தார்கள்.]

 

புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர்நோக்கி வந்துகொண்டிருந்தது. பேருந்தில் சென்றுகொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டார்கள். நிலைக் கண்ணாடிக்கு முன் வேலை முடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் போர்த்து இடுப்பில் இறுக்கிக்கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா என்று உறுதிசெய்துகொண்டு நிலையத்துக்குப் போகும் வரைக்கும் தாக்குப்பிடிக்கப் பெரியவர் ஒருமுறை வெற்றிலை பாக்குப் புகையிலையை வாயில் நிரப்பிக்கொண்டுவிட்டார்.

வைத்யநாதன் அனேகமாக இரண்டு வண்டிகளுடன் திரும்பிக்கொண்டிருப்பான்.

அம்மா ரங்கநாயகிக்குத் துக்கம். ஒரு மூலையில் சென்று, யாருக்கும் தெரியாமல் துக்கத்தை உதறப் போனதை மற்றவர்கள் பார்த்துவிட்டார்கள்.

இராமநாதன் மாடிப்படிகள் இருக்கும் பக்கத்தை ஒருமுறை ஆத்திரத்துடன் பார்த்துப் பற்களை உரசினான். பெரியவரின் தலை கொஞ்சம் சாய்ந்தது. மூன்று நாட்கள். எவ்வளவு நீண்டகாலம்? குடும்பத்தாருடன் தானும் மூன்று நாட்கள் வீட்டை விட்டுப் போவது எப்படி சரி?

ரங்கநாயகி குழம்பிப்போன முகத்துடன் பெரியவரின் அருகில் வந்தாள். பெரியவர் தலையை நிமிர்த்தினார்.

“நீ போ, நான் இருக்கிறேன்.”

“யார் போனால் என்ன? யார் தங்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான். நீங்கள் போங்கள், நான் இருக்கிறேன்.” உண்மைதான். ரங்கநாயகி தங்கினால் எத்தனையோ விதத்தில் உபயோகமாக இருக்கும். கேட்பார்கள், அவள் வரவில்லையா என்று. வரவில்லை என்றால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். தவறாகவும் கருத மாட்டார்கள். இப்பொழுது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இரண்டும் பேரும் போனால் எப்படி வர முடிந்தது என்று அதிசயிப்பார்கள். பழக்கமுள்ள ஒருவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்தோம் என்று சொல்லலாம். ஆனால் அது உறவில், கருணையில் ஒன்று அல்லது பல புள்ளிகள் குறைந்துவிட்டதாகப் படும். யாராவது ஒருவர் தங்கிவிடலாம். ரங்கநாயகி தங்கினால் நல்லதுதான். ஆனால் போக முடியாமல் போனதின் வருத்தம் அவளுக்கு ஆறாது. தான் தங்கலாம். அது ஒரு அத்துக்கு.

மூன்று நாளைக்குத் தேவையான சப்பாத்தி, பூரிகளுடன் கமலா ரங்கநாயகியிடம் வந்து மேலே அனுப்பி விடக் கேட்டாள். ரங்கநாயகிக்கு ஆற்றாமையால் கண்ணீர் முட்டியது. நேற்றும் அதற்கு முதல் நாளும் வைத்ததே அப்படியே கிடக்கிறது. அத்துடன் இன்னும் மூன்று தட்டுகளா?

விஸ்வநாதன் வந்தான்.

“இங்கே கொடு, நான் எறிந்துவிட்டு வருகிறேன்.”

பெரிவரின் முகத்தில் ஏறிய கடுமையைக் கண்டதும் அவன் மனைவி ‘உங்களுக்கேன்? சும்மா இருங்கள்’ என்று சைகை காட்டினாள்.

“ஒரு வாரத்திற்கு முன்னாலேயே ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கலாம்.”

முரளிக்குத் தான் சொன்னது சரியா, தவறா என்று சொல்லி முடித்ததும் சந்தேகம் வந்துவிட்டது. பெரியவருக்குத் திடீரென்று எல்லாப் பிள்ளைகளின் மேலும் வெறுப்பு வந்துவிட்டது போல் தோன்றியது.

குட்டிப் பையன்கள் இரண்டு பேர் மாடிக்கு ஓடிப் போய்விட்டுத் திரும்பினார்கள். அவர்கள் கையில் நேற்றிரவு வைத்திருந்த கோதுமைப் பூரி காணப்பட்டது. இந்தச் சமயம் எல்லோரின் பார்வையும் மாடிப் பக்கம் திரும்பியது.

குளிருக்குப் போர்த்திக்கொண்டது போல் எட்டு முழ வேட்டியை அணிந்துகொண்டு, தலையில் முண்டாசு கட்டி, நிதானமாக சத்யநாதன் படிக்கட்டுகளில் இறங்கி எல்லோரும் இருந்த கூடத்திற்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும் எல்லோரும் ஸ்தம்பித்துவிட்டார்கள்.

யாரையும் பார்க்காதவன் ரங்கநாயகியை மட்டும் கண்டுபிடித்துக் கூப்பிட்டான்.

சென்ற ஆறு மாதத்தில் இப்படி ஒருமுறைகூட அவன் கூப்பிட்டதில்லையாதலால் ரங்கநாயகிக்குத் திணறலாக இருந்தது.

“அம்மா, தீப்பெட்டி இருக்கிறதா?” ரங்கநாயகிக்கு ஏற்பட்ட வியப்பில் இப்பொழுது பெரியவரும் சேர்ந்துகொண்டார். இந்த ஆறு மாதத்தில் அவன் பேசிய ஒரு அர்த்தமுள்ள பேச்சாக அவர்கள் இருவர்க்கும் தோன்றியது. ரங்கநாயகியும் பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு பேர் கண்களும் சிறிது கசிவு கண்டிருந்தன.

“தீப்பெட்டி எதற்கு? புகைக்கப்போகிறாயா?” – விஸ்வநாதன் கேட்டான்.

விஸ்வநாதன் இருந்த திசையை ஒருமுறை சத்யநாதன் உற்றுப் பார்த்தான். விஸ்வநாதன் மனைவிக்குப் பகீரென்றது.

“நான் சுந்தரராஜனின் நான்காவது பிள்ளை சத்யநாதன் – என் பட்டம் உனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது நான் புகைக்க மாட்டேன். நீ?”

விஸ்வநாதன் விழித்தான். அவன் மனைவிக்குத் தன் மாமனார், மாமியார் எதிரில் தன் கணவனுக்குத் தலைக்குனிவு ஏற்படுவதாய் நினைத்து ஆத்திரம் வந்தது. சத்யநாதனின் பதிலைக் கேட்டதும் பெரியவர்க்குக் கைதட்டலாம் போலிருந்தது. ஆனால் சங்கடமாகவும் அசம்பாவிதமாகவும் இருந்தது. தொடர்ந்து சில நாட்கள் தூக்கமில்லாமலும் பல நாட்கள் மழிக்கப்படாமலும் விடப்பட்ட ரோமத்தால் இருண்டும் குறிப்புத் தவறியும் இருந்த சத்யநாதனின் முகம் இன்றும் கவலையைக் கொடுப்பதாகவே இருந்தது.

ரங்கநாயகி ஒரு தீப்பெட்டியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். தீப்பெட்டியிலிருந்த குச்சிகளை எல்லாம் கீழே கொட்டிவிட்டுக் காலிப் பெட்டியை வைத்துக்கொண்டு சிறிது நேரம் தயங்கினான் சத்யநாதன்.

“இன்னும் இருக்கிறதா?”

“தருகிறேன், என்ன செய்யப்போகிறாய்?” அவன் சிறிது நேரம் சும்மா இருந்தான். சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் வெறுமனே பார்த்தான். அவன் பார்வையில் படும்போது ஒவ்வொருவரும் கொஞ்சம் சுருங்கினார்கள். ஏன் வேண்டும் என்ற காரணம் அவனுக்கு மறந்துவிட்டிருந்தது போலிருந்தது. வேண்டும் வேண்டாம் என்று எதுவும் சொல்லாமல் கையிலிருந்த காலித் தீப்பெட்டியுடன் சத்யநாதன் மாடிக்குத் திரும்பினான். அவன் மாடிக்குப் போவதை எல்லோரும் பார்த்தார்கள். பிரயாணக் குதூகலம் எல்லோரிடத்திலிருந்தும் அவிழ்ந்து விழுந்துவிட்டது போல் தோன்றியது.

இரண்டு வண்டிகளுடன் திரும்பியிருக்க வேண்டிய வைத்யநாதன் உள்ளே அவசரமாக ஓடி வந்தான்.

“ஒரு வண்டியும் இந்தப் பக்கம் வராதாம். சாயங்காலம் ஐநந்து மணிக்கு ஊர்வலம் வரப்போகிறதே.”

வைத்யநாதன் விஷயத்தைச் சொல்லிவிட்டு அங்கே இருந்தவர்கள் எதற்காகவோ குழம்பியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு தானும் குழம்பி நின்றான்.

ஊர்வலம் பெரிய ஊர்வலமாக இருக்கப்போகிறது. இப்பொழுதே தெருவில் இரண்டு பக்கத்திலும் ஆட்கள் சிறு சிறு கும்பல் பொட்டலங்களாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஊருக்குப் புதியவர்கள் ஏராளமான பேர் ஊர்வலத்தில் கலந்துகொள்வது போல் தெரிந்தது. பல பேர் கடை கண்ணிகளையும் கடைகளின் பெயரை சில சமயம் உரக்கப் படித்தும் வீடுகளைப் புதுமையாகப் பார்த்துக்கொண்டும் போனார்கள். உள்ளூர் ஜனங்கள் ஊர்வலத்தைப் பார்க்கத் தெரு ஓரத்தில் வரிசையாகிக்கொண்டிருந்தார்கள்.

ஊர்வலம் அது இது என்றதும் குட்டிப் பையன்கள் மாடிக்கு சத்யநாதன் இருந்த அறைக்கு ஓடிவிட்டார்கள். சும்மா போய்க்கொண்டிருந்த ஆட்களைக் காட்டி “சித்தப்பா ஊர்வலம்” என்று குதித்தார்கள்.

புறப்பட வேண்டிய நேரம் மிக அருகில் வந்துகொண்டிருந்தது.

இரண்டுக்கல் தொலைவில் இருந்த சிதம்பரநாதனும் அவனது குடும்பமும் தாங்கள் வந்து சேர்வதில் இருந்த சிரமத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டது. சிதம்பரநாதன் பெரியவரைப் பார்த்து ஒரு வறண்ட புன்னகையுடன் கேட்டான்.

“அவனைப் பார்த்துக்கொள்ளப் பழனியம்மாள் வருவதாகச் சொல்லிவிட்டாள் அல்லவா?”

“…”

“சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு அவள் வந்தால் தரச் சொல்லிப் போக வேண்டியதுதானே?”

பெரியவர் எழுந்திருக்காமல் இருந்த இடத்திலேயே சிறிது அசைவு காட்டினார். மாடி அறையில் சத்யநாதன் இருக்கும்பொழுது வெளிக்கதவைப் பூட்டிவிட்டுத் தானும் தன் குடும்பமும் போகும் காட்சி அவருக்கு முன்பைவிடத் துல்லியமாகத் தெரிந்தது.

சிதம்பரநாதன் மனைவி மாடிக்குச் சென்று திரும்பினாள். சிதம்பரநாதன் கேட்டான்.

“என்ன பார்த்தாய்?”

“வெளியே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது.”

ரங்கநாயகிக்கு இந்தப் பேச்சைக் கேட்டதும் முகம் கறுத்தது. பெரியவர் மணியைப் பார்த்தார். நான்கு மணி, ஐம்பது நிமிடங்கள்.

“ஐந்து மணிக்கு ஊர்வலம் என்று சொன்னார்களே, அது போன பிறகு போகலாம். எப்படியும் வண்டி ஏழு மணிக்குத்தானே.”

“அப்படியானால் நான் ஆறு மணிக்கே வந்திருப்பேன்.”

நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லியிருந்த இரண்டு உறவினர்கள் உரக்கச் சிரித்துப் பேசிக்கொண்டு உள்ளே வந்தார்கள். புறப்பட்டும் புறப்படாத நிலையில் ஒவ்வொருவரும் இருப்பதைப் பார்த்துவிட்டு இருவரில் ஒருவர் பெரியவரிடம் வந்து, “இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டார்.

வந்தவர்களிடம் “ஊர்வலம் வந்துவிட்டதா?” என்று வைத்யநாதன் கேட்டு முடிப்பதற்குள், வீட்டு வாசலைப் பயங்கரமான கோஷம் ஒன்று தாக்கிக் கடந்து சென்றது. ஒவ்வொருவரிடத்திலும் சிறிதளவு பரபரப்புத் தென்பட்டது. ஊர்வலத்தைப் பார்க்க வேண்டுமென்றால் மாடிக்குப் போக வேண்டும் அல்லது வாசலுக்குப் போக வேண்டும். இரண்டுமே வேண்டாம் என்று முடிவு செய்துகொண்டவர்கள் போல யாரும் நகரவில்லை.

வலுவாகக் கேட்டது கோஷம். துண்டுச் சொற்களாகவும் தொடர்களாகவும் ஒரு பாட்டாகவும் கோபமாகவும் கேலியாகவும், ஆனால் எப்படி இருந்தாலும் அதன் உக்கிரத்தில் தீவிரம் குறையாமல் கோஷம் கேட்டது.

குட்டிப் பையன்கள் இங்கும் அங்கும் போலிக் கோஷம் எழுப்பி ஓடினார்கள்.

“ரொம்பப் பெரிய ஊர்வலம்” என்றார் உறவுக்காரரில் ஒருவர்.

“நம் வீட்டைத் தாண்டி முழுக்க அது போக ஆறுமணியாகிவிடும்” என்றார் இன்னொருவர்.

கோஷம் அலை அலையாகக் கேட்டுக்கொண்டிருந்தது. பெரியவர் கவனித்தார். தன் வீட்டைத் தாண்டும்பொழுது ஊர்வலம் கோஷத்தை அதிகமாகக் கூச்சலிட்டுக்கொண்டு போகிறதோ என்று தோன்றியது.

வாசல் கதவு தாழிட்டிருக்கிறதா என்று ரங்கநாயகி கேட்டதற்கு யாரோ “ஆமாம்” என்று பதில் சொன்னபோது வாசல் கதவு தட்டப்படுவது போல் கேட்டது. “பழனி அம்மாள் வந்துவிட்டாளா?” என்று கேட்டுக்கொண்டு வாசலுக்குப் போன ரங்கநாயகி திடுக்கிட்டு, பரபரப்புடன் பெரியவரின் பக்கம் ஓடி வந்தாள்.

பெரியவர் பதற்றத்துடன் உடனே எழுந்து அவள் அருகில் ஓடியபோது, வாசல் கதவை ஆக்ரோஷத்துடன் மோதுவது நீண்ட இடைக்கழிக்கப்பால் அவர் பார்வைக்குத் தெரிந்தது. விவரம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தன் வீட்டை நோக்கித் தூஷணைகள் வருவதையும் சிலர் வாசல் கதவைத் தகர்க்க முனைவதையும் பெரியவர் தெரிந்துகொண்டார். குழப்பத்தால் மற்றவர்களும் கலங்கிப்போய் அவர் பின்னே வாசலை நோக்கி இடைக்கழியில் பாதி வரை வருவதற்குள், ஜனத்திரளின் தாக்குதலுக்குப் பொறாமல் கதவு விட்டுக் கொடுத்துவிட, அடைப்பு நீங்கியதும் வரும் சாக்கடைத் தண்ணீர் மாதிரி ஜனம் கூச்சலுடன் உள்ளே நுழையத் தொடங்கியது. ஒரு நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து நிற்க முடியாத இடத்தில் நூற்றுக்கணக்கான பேர் முண்டி அடித்தனர். இடைக்கழியைத் தாண்டி முற்றத்துக்கும் கூடத்துக்கும் பலபேர் வந்துவிட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் பல பேர் நுழைந்துவிட்டார்கள். சமையற்கட்டில் பாத்திரங்கள் உருண்டன. படுக்கை அறையில் இரும்பு பீரோக்கள் பயம் தாளாமல் தடதடத்தன. அறையில் பெரிய நிலைக் கண்ணாடிகள் நொறுக்கப்படுவது கேட்டது. குட்டிப் பையன்கள் வீட்டுக்குள் கூட்டத்தில் காணாமல் போய்க் கதறினார்கள். திகைத்துப்போன பெண்கள் தங்கள் மானத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் அழத் தொடங்கிவிட்டார்கள். ஜனத்துக்கும் வீட்டிலிருந்தவர்க்கும் வாதப் பிரதிவாதம். சிதம்பரநாதன் மீது ஒரு அன்னியன் பாய்ந்து குரல்வளையைப் பிடித்தான்.

தெருவில் கோஷம் நின்றுபோய்க் கடைக் கண்ணாடிகள் ஜன்னியில் சிரித்தன. ஜனம் அந்த வீட்டைத் தவிர மேலும் இரண்டொரு வீட்டில் நுவைந்துவிட்டிருந்தது. தெருவில் சில ஆயிரக்கணக்கான பேர் வன்முறையில் இறங்கிவிட்டார்கள்.

விஷயம் போலீசுக்குத் தெரிந்து ஸ்தலத்தை முற்றுகை போடப்போகிறது.

பெரியவரைத் தள்ளிக்கொண்டு மாடியில் ஜனம் நுழையும்போது ரங்கநாயகி குறுக்கிட்டு, “என் பிள்ளையை விட்டுவிடுங்கள்” என்று கூவினாள். இரண்டு துண்டாக அவனைப் போட்டுத் தருவதாகப் பலர் உறுமினார்கள். ஒருவன் ரங்கநாயகி அம்மாளை அப்புறமாகத் தள்ளிவிட்டு மற்றவர்களைத் தன்னைத் தொடருமாறு மாடிப்படிகளில் ஏறினான். ரங்கநாயகி என்ன முயன்றும் எழுந்திருக்க முடியாமல் அரற்றினாள். பலர் திமுதிமுவென்று மாடிப்படிகளில் ஏறினார்கள்.

தெருவில், கூச்சல் களேபரம் மாறிப்போய்ப் பலர் திடுதிடுவென்று ஓடுவது போல் சப்தம் கேட்டது. ஊர்வலத்தில் ஒரு பகுதியினரும் பொதுமக்களும்தான் அப்படி வெருண்டோடினார்கள். போலீஸ் ஊர்வலத்தை வேறு வழியில் திருப்பிவிட்டு, கூடுதலான காவலர்களைப் பல வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டே தாமதமில்லாமல் தடி கொண்டு கூட்டத்தை விரட்டி அடிக்க அடிக்கக் கூட்டம் மீண்டும் திரண்டு கூடுதலான சக்தியுடன் எதிர்ப்பட்டது. திரும்பித் திரண்ட கூட்டத்திலிருந்து அளவான, ஆனால் அபாயகரமான கற்கள் எல்லாத் திசைக்கும் பறந்தன. நடுவானத்தில் சோடாப் புட்டிகள் கதிகலங்க வெடித்துச் சிதறி, அதைக் காட்டிலும் அச்சுறுத்தும் சப்தம் ஒன்றும் தொடர்ச்சியாகக் கேட்டது. போலீஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வெடித்துவிட்டார்கள். தெருவில் வெடித்துவிட்டார்கள். தெருவில் இரண்டு முனைகளிலும் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டுகள் சீறிப் பாய்ந்தன. கண்ணீர்ப் புகை தெருவெங்கும் பரவியது. விளக்கு வந்திருக்க வேண்டிய நேரத்தில் கண்ணீர்ப் புகை தெருவில் அச்சானியத்தைப் பரப்பியது. புகைக்கும் தாக்கும் குண்டுகளுக்கும் பயந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தொலைதூரத்துக்கு ஓட்டம் எடுக்கப் போலீஸார் தடிகளுடன் பெரும் கூச்சலிட்டுப் பின்னேயே ஓடித் துரத்தினார்கள்.

பெரும் எண்ணிக்கையில் போலீஸ் சத்யநாதன் வீட்டு முன்பு குழுமி, வீட்டுக்குள் நுழைந்திருப்பவர்களை வெளியே வரும்படி எச்சரிக்கை செய்தனர். ஒரு போலீஸ் அதிகாரி வீட்டுக்குள் நுழைந்து உள்ளே இருப்பவர்கள் எல்லோரையும் தப்பிவிடாமல், கைதாகி நேரே வண்டியில் ஏறும்படி மிகுந்த ஆத்திரத்துடன் உத்தரவிட்டார்.

அவர் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சத்யநாதன் அறையிலிருந்து பலவிதமான சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. போலீஸ் வந்துவிட்டது. அதுவும் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளே வர முயல்கிறார் என்று தெரிந்ததும் பெரியவரும் மற்றவர்களும் கொஞ்சம் தைரியமடைந்து உரத்த குரலில் எல்லோரையும் வெளியே வரும்படி கூச்சலிட்டார்கள்.

மாடியிலிருந்து சத்யநாதனை நான்கு பேர் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, தெருவில் தீர்த்துவிடுவது போல் தீர்மானித்தவர்கள், ஒரு போலீஸ் அதிகாரியை வீட்டில் எதிர்கொண்டதும் திடுக்கிட்டனர். “இந்தப் பயல் ஊர்வலத்தின் மேல் சோற்றுத் தட்டை மாடியிலிருந்து எறிந்தான்” என்று ஒரு அன்னியன் ஆத்திரம் குறையாமல் கூச்சலிட்டான். அதிகாரியைக் கண்டதும் ஏற்பட்ட ஆரம்பத் திகைப்பு மறைந்துபோய், மற்றவர்கள் பழைய கோபத்துடன் கூச்சலிட்டு அதிகாரியை நெட்டித் தள்ளி சத்யநாதனையும் இழுத்துக்கொண்டு தெருவில் ஓடியபோது மீண்டும் வெடிச்சப்தம் தெருவில் கேட்டு நடுங்கவைத்தது.

பெரியவரும் ரங்கநாயகியும் மற்றவர்களும் அந்த ஆள் சொன்ன செய்தியைக் கேட்டு அயர்ந்துபோனார்கள். பெரியவர் மாடிக்குப் போய்ப் பார்த்ததில் அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. நான்கைந்து தட்டுகள் காணப்படவில்லை. அவர் முகம் உயிரிழந்துவிட்டது.

இதற்குள் இன்னொரு அதிகாரி சத்யநாதனை அழைத்துக்கொண்டு பெரியவரிடம் வந்தார்.

“இவன் தகப்பனார் நீங்களா?”

வருத்தத்துடன் சத்யநாதனைப் பார்த்து “ஆம்” என்று சொல்லிக்கொண்டே குடும்பத்துடன் அதிகாரியைப் பின்தொடர்ந்து வாசலுக்கு வந்தார். மிகுந்த பயத்துடன் தெருவின் இரண்டு முனைகளையும் பார்த்த பெரியவருக்குப் பகீரென்றது. இருநூறு அடிகளுக்கப்பால் இரண்டு முனைகளிலும் ஆயிரக்கணக்கான பேர் போலீஸ் வேலியைக் கடக்கக் குமுறிக்கொண்டிருந்தார்கள். ஒரு முனையில் யாருடைய மோட்டார் காரோ அணைக்கப்படாமல் எரிந்துகொண்டு ஏராளமாகப் புகை கக்கிக்கொண்டிருந்தது.

கூட்டம் சமாதானம் அடைய வேண்டுமென்றால் சத்யநாதனைக் கைது செய்தாக வேண்டும். தடியடி, கண்ணீர்ப் புகைக்கு மேல் போவதற்கில்லை. விவகாரம் ரொம்ப மோசமாகிவிடும். போலீஸ் சமாதானங்களைக் கேட்கக் கூட்டம் தயாராக இல்லை. சத்யநாதனைக் கைது செய்துகொண்டு போனால் இனியும் அமைதிக்குப் பங்கமில்லை. அதிகாரி சுருக்கமாகக் கூறினார். பெரியவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றாமல், வாயைத் துண்டால் பொத்திக்கொண்டு குமுறினார்.

சத்யநாதனை வண்டியில் ஏறச் சொன்னார் அதிகாரி.

தவறிப்போய்ப் பிறந்த ஒரு மகாராஜா தனது பொன் சால்வையை ஓவியத்துக்காக முன்பக்கம் சேகரித்துக்கொண்டது போல, போர்த்தி இருந்த எட்டு முழ வேட்டியை வலக்கையால் முன்பக்கம் சேகரித்துக்கொண்டு, மற்றபடி நவீன உடையிலிருந்த சத்யநாதன் வண்டியில் ஏறுவதற்காக அதன் அருகில் சென்று ரங்கநாயகி அம்மாளைத் திரும்பிப் பார்த்தான்.

ரங்கநாயகி “கண்ணா” என்று கூச்சலிட்டபொழுது வண்டியில் ஏறி அமர்ந்த சத்யநாதன் மெல்லிய புன்முறுவலுடன் அம்மாவைப் பார்த்தான். அந்தப் பார்வையை, புன்முறுவலைக் கண்டுவிட்ட பெரியவர் அந்தக் களேபரத்திலும் திகைத்தார். ரங்கநாயகி கொஞ்சம் சந்தோஷத்தில் துக்கித்தாள். வைத்யநாதன் தளர்ந்தான். “சத்யாவுக்கு எங்கே போகிறோம் என்று தெரியுமா?” என்று கேட்டு சிதம்பரம் அழுதான். பெரியவர் சத்யநாதனைப் பார்த்தார். வண்டிக்குள் ஒரு மேஜைக்கு முன் அமர்ந்திருக்கும் பாவனையில் குடும்பத்தாரைப் பார்க்காமல் உட்கார்ந்திருந்தான்.

வண்டி நகர்ந்தது.