மறுவாசிப்புகள்

28.4.15 அன்று நிகழ்ந்த இலக்கிய வீதி இலக்கியக் கூட்டத்தில் ஆற்றிய உரை

தமிழில் மறு என்ற சொல் மிகவும் பரவசமூட்டும் சொல்லாக எனக்குத் தெரிகிறது. இன்னும் ஒருமுறை, இரண்டாம் முறை என்று பொருள்படும் இச்சொல் தொடக்கத்தில் எந்த சந்தர்ப்பத்தில் பயன்பட்டது என்பது ஆராய்ச்சிக்குரியது. எப்படி இருந்தாலும் முதலாவதாக வந்த ஒன்று இன்னும் ஒருமுறை வரக்கூடும் என்று இச்சொல் உணர்த்துவதால் இது நம்பிக்கையையும் வாய்ப்பையும் தோற்றுவதாக உள்ளது. எனவேதான் பரவசமூட்டும் என்றேன். மறுபிறப்பு, மறுமணம், மறுநாள், மறுமொழி என்பவை நம்பிக்கை தருபவை.

நவீன இலக்கியம் உருவானபோது அது ‘மறுமலர்ச்சி’ என்று வர்ணிக்கப்பட்டது. மறுமலர்ச்சி இலக்கியம் என்ற பெயரும் தமிழில் வழங்கத் தொடங்கிற்று. முன்னோடி எழுத்தாளரும் கவிஞருமான ந. பிச்சமூர்த்தி மறுமலர்ச்சி என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூத்து, காய்த்துக் கனிகின்றன. இதை ஒரு பருவம் என்றால், இந்தப் பருவம் முடிந்து மீண்டும் ஒருமுறை தாவரங்கள் பூத்து, காய்த்துக் கனியுமாம். அந்த இரண்டாவது பருவத்தை மறுமலர்ச்சி என்பார்கள் என்று தாவர இயல் தொடர்புடன் ந.பி. விளக்கம் தருகிறார். பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தமிழின் மறுமலர்ச்சி குறித்து மிகவும் அக்கறை காட்டிய அறிஞர் ஆவார்.

இந்த ‘மறு’ மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. மறுபரிசீலனை செய்தல் என்று நிர்வாகத் துறையில் இது உலவுகிறது. இலக்கியத்தில் ‘மறுவாசிப்பு’ என்று இக்கருத்து உயிர்த்தெழுந்துள்ளது. நாள்தோறும் தமிழர்கள் சைவ வைணவ மற்றும் வேத மந்திரங்களை மொழிகிறார்கள். ஆனால் இது மறுவாசிப்பு ஆகாது. ஏனெனில் இதனால் பிரதிக்குப் புதுமை கிடைப்பதில்லை. எப்போது ‘மறு’ என்ற காரியத்தில் புது அறிதல் உண்டாகிறதோ அப்போதுதான் பிரதி மறுவாசிப்புக்கும் உள்ளாக்கப்பட்டதென்று கொள்ள வேண்டும்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான பத்துப்பாட்டில் ஒரு புலவர் தேங்காயை முப்பட்டை வடிவானது என்று கூறுகிறார். இதைப் படித்ததும் நான் பத்துப்பாட்டைக் கீழே வைத்துவிட்டுத் தெருக் கோடியில் நின்றிருந்த இளநீர்க் கடைக்குப் போய்த் தேங்காயைப் பார்த்தேன். அவர் சொன்னது போல அது முப்பட்டையாகத்தான் இருந்தது. எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது, வெட்கமாகவும் இருந்தது. ஒரு தேங்காய் முப்பட்டையாக உள்ளதைக் கண்டுபிடித்ததில் எனன சந்தோஷம் என்று தோன்றியது. ஆனால் மகிழ்ச்சி எதனால் வந்ததென்றால் மறு அறிதலால் வந்தது. இதை ‘ப்ரத்யாபிஞ்ஞா’ என்கிறது காஷ்மீர சைவம். இந்தப் பெயரில் ஒரு நூல் எழுதியிருக்கிறார் மாபெரும் இலக்கியச் சிந்தனையாளரான அபிநவ குப்தர்.

இலக்கியம் ஒரு மறு அறிதல்தான். இந்த மறு அறிதலுக்குக் கீழே செயல்படும் ஊக்கம்தான் மறுவாசிப்புக்கும் ஒருவரைத் தூண்டுகிறது. ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப் பற்றி எழுதவோ பேசவோ ஒருவர் ஒரு புத்தகத்தை மறுபடியும் படிக்கலாம். ஆனால் அது மறுவாசிப்பாகாது. ஏனெனில் மறுவாசிப்புக்குக் கொஞ்சம் காலம் கடந்திருக்க வேண்டும். காலத்தில் பின்தங்கிய ஒரு நூலைத்தான் மறுவாசிப்புக்கு ஆட்படுத்த வேண்டும். காலத்தில் பின்தங்கிய என்றால் அதில் எதுவும் இழிவு கிடையாது. எல்லா நிகழ்வுகளும் கடந்த காலத்தில் சென்ற பிறகுதான் வாசிப்புக்குத் திரும்ப முடியும். எனவே சுந்தர ராமசாமியின் படைப்புகள் மறுவாசிப்பில் அணுக வேண்டிய தருணம்தான் இது என்று சொல்லலாம். சுந்தர ராமசாமியின் கற்பனை சாராத எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். கட்டுரைகள், பேட்டிகள் சில, எதிர்வினைகள் ஒன்றிரண்டு – மற்றும் திருவனந்தபுரம் மற்றும் டெல்லி நகரங்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் ஹோட்டலில் வாசம் செய்தபோது பேசியது, மற்றும் க.நா.சு., நான், சுந்தர ராமசாமி விவாதித்தது, கமல்ஹாஸனுடன் அவர் பேசியது முதலானவை அவரைப் பற்றிய கருத்தை என் மனதில் உருவாக்கியுள்ளது. இன்று சுந்தர ராமசாமியுடன் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகிய திரு. அரவிந்தன் மறுவாசிப்பில் அவரைப் பற்றி என்ன சொல்லப்போகிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

நவீன கவிஞர்களும் பலவிதமாக இருக்கிறார்கள். மாதம் தோறும் வாசகர்களுக்குக் கவிதை கிடைக்கும்படி கவிதைகள் வெளியிடும் கவிஞர்கள், வருஷத்தில் எப்போதாவது வெளியிடும் கவிஞர்கள், சில சஞ்சிகைகளில் மட்டுமே படிக்கக் கிடைக்கும் கவிஞர்கள், முற்றிலும் புதுமையான கவிஞர்கள், தங்களைக் குறைவாக யாரும் மதிப்பிட்டுவிடக் கூடாதென்று புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் – இப்படிப் பலவிதமாக இருக்கிறார்கள். தொகுப்புகளும் இப்படித்தான் உள்ளன. யூமா வாசுகி, பெருமாள் முருகன், சுகுமாரன், ஸ்ரீநேசன், சல்மா போன்ற கவிஞர்கள் இனிமேல் எப்போது தொகுப்பார்களோ என்ற எண்ணத்தைத் தந்து ஒதுங்கிவிடுவார்கள். இவர்களோடு சேர்க்கப்பட வேண்டியவர் யுவன் சந்திரசேகர் என்றுதான் எண்ணினேன். ஆனால் மனிதருக்கு வேறு சில அக்கறைகள் உண்டு. நாவல்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். எனவே கவிதைகள் வெளியாவதில் ஏற்படும் இடைவெளி ஒரு காரணமாகத்தான் உள்ளது. இடைவெளியிலும் அவர் இலக்கியத்தில்தான் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

சீரியஸ் இலக்கியம் என்பது என்ன என்பது பற்றி நான் தனியே எழுதியிருக்கிறேன். ஒரு முக்கியமான பண்பு வர்த்தக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையில் உள்ளது வேகம். வர்த்தக எழுத்துகள் விரைவாக இயங்க வேண்டும். ‘படிக்க ஆரம்பித்தேன் கீழே வைக்க முடியவில்ல’ என்பார்கள் சாதாரண வாசகர்கள். இலக்கிய வாசகர்கள் மாறாக நிதானமாக நடக்கும் எழுத்துகளையே படிப்பார்கள். இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கடவுள் நம்பிக்கை அத்யாவசியமானதல்ல. ஆனால் நாகரிகம் அவசியம். வர்த்தக எழுத்தாளர்கள் எப்படியோ ஆன்மிகத்துக்குப் போய்விடுகிறார்கள். அவர்களுடைய இறுதிக் கால ஆன்மிகம் அவர்களுடைய எழுத்தின் வர்த்தகத் தன்மைக்குப் பரிகாரம் என்பது போல் ஆகிறது. யுவன் சந்திரசேகரின் கவிதைகள் பரபரப்பற்றவை. நிதானமாக நடப்பவை. தத்துவ விசாரங்களில் விஷயங்கள் துல்லியமாக அறுக்கப்படுவது போன்ற வாக்கியங்களால் யுவனின் கவிதைகள் அமைவதுண்டு. ஆகாயம், பறவை, சிறகு, வர்ணம் போன்ற சொற்களால் பல சமயம் கட்டப்படுகின்றன யுவனின் கவிதைகள். ‘காலக் கடிகை’ பற்றி யுவன் மட்டும்தான் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மணல் கடிகாரத்திலிருந்து இறங்கும் மணல் துகளுக்குத் தன் சொற்களை ஒப்பிட்டுப் பேசுகிறார் யுவன். கடிகாரத்தைப் பல முறை குறிப்பிடும் யுவன் மணல் கடிகாரத்தைப் பற்றி இரண்டு முறை எழுதியிருக்கிறார் என்று என் ஞாபகம். ஜார்ஜ் லூயி போர்ஹேயின் Hour Glass என்ற 52 வரிக் கவிதையை வாசகர்கள் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். போர்ஹேயின் வரிகள் இவை –

Pleasure there is in watching how the sand
slowly slithers up and makes a slope
then, just about to fall, piles up again
with an insistence that appears quite human.

யுவனின் உவமை சிந்தனைக்குரியது. யுவன் சந்திரசேகர் இன்று இலக்கிய வீதி அன்னம் விருது பெறுவதில் எனக்கு மகிழ்ச்சி. அதைப் பார்க்க இந்த மேடையில் இருப்பதும் மகிழ்ச்சி தருகிறது.

யுவனின் 1999ம் ஆண்டின் சிறந்த சிறுகதை என்ற கதையும் குள்ளச் சித்தன் சரித்திரம் என்ற குறுநாவலும் நான் படித்திருக்கிறேன். அவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.