குழு 47ல் ஒருவர்

குந்தர் க்ராஸ் காலமானார் என்ற செய்தி இன்று 14.4.2015 வெளியாகியுள்ளது. மன்மத வருஷம் பிறந்தது. திருவல்லிக்கேணி பண்டிகைக் கோலம் அணிந்துகொண்டிருந்தது. குந்தர் க்ராஸ் மறைந்த செய்தி அவரைப் பற்றிய நினைவை மனதில் எழுப்பியது. ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்க நாட்டுப் படைப்பாளிகள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தனிப்பட்ட முறையில் இந்த இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வந்தவர்கள். அவர்களின் பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை. இப்போது எப்படி இருக்கிறார்கள் என்றும் தெரியாது. அவர்கள் இளைஞர்கள். ஆனால் குந்தர் க்ராஸை நான் பார்க்க வாய்த்தபோது அவர் உலகப் புகழ் அடைந்துவிட்ட எழுத்தாளர். அவரை முதலில் அறிமுகப்படுத்தி இலக்கிய வட்டத்தில் 1964ம் ஆண்டு எழுதியவர் க.நா.சு. குந்தர் க்ராஸின் ‘டின் ட்ரம்’ மற்றும் ‘பூனையும் எலியும்’ என்ற படைப்புகளை ஜெர்மன் மொழியிலேயே படித்து அதைப் பற்றி கிரீசன் என்பவர் ஒருமுறை பேசினார். இது மாக்ஸ் ம்யுல்லர் பவன் சார்பில் நடந்ததாக ஞாபகம். அவருடைய ‘முட்டையினுள்’ என்ற கவிதையைக் கசடதபற வெளியிட்டது. மொழிபெயர்த்தவர் ஐராவதம். அதற்கு முன் குந்தர் க்ராஸின் ‘மடக்கு நாற்காலிகள்’ என்ற கவிதையைக் க.நா.சு. இலக்கிய வட்டத்தில் வெளியிட்டிருந்தார்.

இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் மாக்ஸ் ம்யுல்லர் பவன் இயங்கியபோது குந்தர் க்ராஸ் சென்னை விஜயத்தில் அங்கே வந்தார். ஒரு கூட்டத்தில் பேசினார்.

குந்தர் க்ராஸ் பேசி முடித்து வெளியே வந்தபோது நான் அவரைச் சந்தித்தேன். பவனின் அதிகாரியான தேசிகன் என்னை அறிமுகம் செய்தார். அவருடைய ‘முட்டையினுள்’ கவிதையை நான் படித்திருப்பதைக் கூறினேன். நான் ஆங்கிலத்தில் சொன்னேன். அவரும் ஆங்கிலத்தில் ‘உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா’ என்றார். அவர் “The world comes to know if you’re available in English” என்றார். என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை மறந்தவராக சிந்தனையோடு நடக்கத் தொடங்கினார்.

க்ரூப் 47, ஜெர்மன் எழுத்தாளர்கள் பலர் அடங்கிய ஒரு குழுவின் பெயர். இதைக் கசடதபறவோடு சிலர் ஒப்பிட்டார்கள்.

 

மடக்கு நாற்காலிகள்

இந்த மாறுதல்கள் எத்தகைய துயரந்தருபவை
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.

இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப் படுத்துகின்றன
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு
ஜனங்கள் இடம்விட்டு இடம் பெயர்கின்றனர்.

வீட்டு நினைவுகளையும் வாந்தி யெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.

இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!

– குந்தர் க்ராஸ்
‘இலக்கிய வட்டம்’

தமிழில்: க.நா.சு.