கவிதையும் நாடகமும்

ஆய்வாளர் தமிழ் மணவாளனுடன் ஒரு சந்திப்பு

1. நெடிய தமிழ்க் கவிதை மரபில் நவீன தமிழ்க் கவிதையின் இடம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

மிகப் பழங்காலத்து இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியம் புதுமை பற்றிப் பேசுகிறது. புதுமை என்பது முன்னமேயே இருந்துவரும் ஒன்றுடன் வெளியிலிருந்து வந்துசேரும் ஒன்றே என்று தொல்காப்பியம் சொல்கிறது. புதுமையைக் கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார் என்று கம்பரும் மகிழ்ந்து பேசுகிறார். ஒரு முன்னோடி தமிழ்ப் படைப்பாளி தனது பெயரையே புதுமைப்பித்தன் என்று வைத்துக்கொண்டார். காலம் காலமாகத் தமிழ் இலக்கியம் மாறுதலை விரும்பி மாறிவருகிறது. புதுமை என்றால் கொஞ்சம் மருட்சி தரும் என்று தொல்காப்பியர் எச்சரித்தது போல நவீன தமிழ்க் கவிதைகள் தொடக்கத்தில் கொஞ்சம் மருட்சி தந்தாலும் – அல்லது தருவதாகச் சிலர் நம்பினாலும் – ஒரு பத்தாண்டுக் காலத்தில் ஏற்கப்பட்டு, களம் அமைதியாகிவிட்டது. 1960க்குப் பிறகு தமிழ் இலக்கிய வரலாறு புதிய பாதை கண்டிருக்கிறது. நவீன கவிதையும் நல்ல மரபாகிவிட்டது. எந்தெந்த நாட்டில் தமிழ் வழங்குகிறதோ அங்கெல்லாம் நவீன கவிதையின் ஒளி சுடர் விடுகிறது.

2. காலத்தையும் வெளியையும் கடந்து இந்த உலகில் எதுவும் இயக்கம் கொள்ள முடியாது என்னும் பட்சத்தில் கலை இலக்கியத்திற்கும் அது பொருந்தும்தானே?

ஆம். மொழி இயங்கவே இடமும் காலமும் தேவை. ஒர் எழுத்து எப்படிப் பிறக்கிறது என்று ஆராயும்போது இடம் புலனாகிறது. அது வெளிப்பட இடமும் நீடிக்கக் காலமும் தேவைப்படுகிறது. ஒரு கருத்தும் கூறாத நிலையிலேயே மொழிக்கு இடமும் காலமும் இருக்கிறபோது மொழியால் இயங்கும் இலக்கியம் இடம், காலம் என்ற பரிமாணங்களுக்கு உட்பட்டதுதான். கலைக்கும் விலக்கல்ல.

3. நாடகம் தவிர்த்த பிற படைப்புகளில் நாடகக் கூறுகள் இடம்பெறுவது குறித்தும் அதன் அவசியம் குறித்தும் என்ன கருதுகிறீர்கள்?

எல்லாவற்றுக்கும் அடிப்படை கவிதைதான் என்பது நமது நம்பிக்கை. கவிதை என்றால் கற்பிக்கப்பட்டது. நாடக ஆசிரியன், ஓவியன், இசைவாணன், சிற்பி எனப் பல திறனாளிகளும் கவிஞர்களே. இயற்றினால் கவிஞன். நடித்தால் நடிகன்.ஆடினால் நடனக் கூத்தன். பாடினால் இசைவாணன். எல்லாம் செய்தொழில் வேற்றுமை. ஒரு கவிதையில் நாடகம் இருக்கிறது. ஏனெனில் அது ஒருவனால் பேசப்படுகிறது. அதில் இசை இருக்கிறது. அதை ஆட முடிகிறது. அதை ஓவியமாகவோ சிற்பமாகவோ உருவாக்க முடிகிறது. அதனால்தான் சொல்கிறேன், பிறப்பொக்கும் எல்லா கலைக்கும் என்றும் பரதரின் நாட்டிய சாஸ்திரம் அபிநயத்தை வாசக அபிநயம் என்றும் அங்கிக அபிநயம் என்றும் கூறுகிறது. முதலாவதில் வார்த்தைகளை உணர்ச்சிக்கேற்ப உச்சரிப்பது. இரண்டாவது உறுப்புகளால் உணர்ச்சிக்கு இயைய உணர்த்துவது. கவிதையிலும் சித்திரக் கவிதை உண்டல்லவா? கவிதையிலும் சிற்பம் (இமேஜ்) உண்டல்லவா? நாடகம் சுவைபட இருக்க வேண்டும். நாடகம்தான் கவிதை. கவிதை இறுதியில் நாடகத்தில் முடிகிறது என்ற வழக்கு ஸம்ஸ்கிருதத்தில் உண்டு. கம்ப ராமாயணத்தைக் கம்ப நாடகம் என்பது நம்முடைய வழக்குதானே.

4. தங்களுடைய கவிதைகளில் கணிசமான அளவு நாடகக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் பிரத்யேகமான பாத்திரங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். குறிப்பாகச் சப்பட்டை மனிதன், வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு இவற்றைக் கூறலாம். இந்தப் பாத்திரங்கள் வாசக தளத்தில் ஏற்படுத்திய விளைவுகளை ஒரு படைப்பாளியாய் எப்படி உணர்கிறீர்கள்?

கவிதைக்கும் நாடகத்திற்கும் உள்ள ஒற்றுமை அடுத்து வருவது என்ன என்ற எதிர்பார்ப்பு. எதிர்பார்க்க முடியாமல் போவதும் மொத்த கவிதையே எதிர்பாராத வகையில் அமையும்போது வாசகன் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறான். இரண்டு கவிதைகளிலும் வாசகன் தன்னைக் கொஞ்சம் அடையாளம் காண்கிறான். இரண்டாவது கவிதை வாசகனை மருளச் செய்தது. யாரோ ஒரு திருச்சி வாசகர் என்னைச் சென்னை வீட்டில் சந்தித்து இக்கவிதை பற்றிய தனது மருட்சியைக் கூறியது நான் மறக்க முடியாதது. ஒரு முழு எலும்புக்கூட்டை வகுப்பில் தொங்க விட்டுப் பாடம் நடத்தினார்கள் என்ற செய்தி முதல் கவிதையில் துணைச் செய்தியாகத் தரப்பட்டதைப் பாருங்கள். ஓர் எலும்புக்கூட்டின் சிரிப்பைப் பார்த்த மாணவன் நிலையைக் கவனியுங்கள்.

5. கவிதை எழுதும் தருணம் எழும் உணர்வெழுச்சி, பிரத்யேகமான காலத்தையும் நிகழ்வு வெளியையும் பாத்திரங்களையும் இன்ன பிற நாடகக் கூறுகளையும் உருவாக்கும் விதம் கூறுங்களேன்.

உடம்பில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. மனம் எதை, சொல்லையா சிந்தித்தலையா என்று தெளிவாகக் கொள்ள முடியாத நிலையிலேயே கவிதையின் வரி தொடங்கிவிடுகிறது. கவிதை வெளிப்படும் காலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கனவில்கூடக் கவிதையின் வரியோ கவிதையில் பயன்படப்போகும் விஷயமோ வரலாம். கவிதையில் பாத்திரங்கள் குணம் குறி அற்றவை. ஒரு விலங்கு மனிதனாகக் காட்டப்படலாம், ஒரு மனிதன் வேறு பிறவியாகக் காட்டப்படலாம். மற்றவை எல்லாம் தொழில் ரகசியங்கள்.

01-04-2015

*