எண்ணெய் இறங்கிய தோடு

திரு. பா. வெங்கடேசனின் புதிய கவிதைத் தொகுப்பின் பெயர் ‘நீளா’. நீளா என்பவள் திருமாலின் மனைவி. நீளா என்ற பெயரில் தொடங்கும் ஒரு ஸம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு. வைஷ்ணவர்கள் அன்றாடம் சொல்லும் ஸ்லோகங்களிலும் இடம்பெறுகிறது. வைஷ்ணவத்துக்கு வெளியே, அதுவும் நவீன கவிதையில் – அதுவும் ஒரு நவீன கவிதைத் தொகுப்பின் பெயராக நீளா வருவது இதுதான் முதல் தடவை. இத்தொகுப்புக் கவிதைகளைப் படித்து முடித்ததும் நீளா எப்படிக் கவிதையில் நுழைய முடிந்தது என்ற அதிசயமும் மர்மமும் எழுந்து தீர்க்கப்படாமலேயே தொடர்கிறது. நீளாவின் வடிவம் நிழல் வடிவானது என்று கவிஞர் குறிப்புத் தருகிறார். ஒரு வடிவம் இருந்தால்தான் ஒரு நிழல் இருக்கும் சாத்தியம் இருக்கும். இந்த நீளாவின் நிழலை ஸ்தூலத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ள முடியாது. பா. வெங்கடேசனின் கவிதை நடையில் கவிதை ஓர் உருவம் பெறுகிறது. கவிதை படிக்கத் தூண்டுகிற அளவுக்கு ஒதுக்கவும் தூண்டுகிறது.

பரிச்சயமான உலகைப் பரிச்சயமான சொற்களைக் கொண்டு சுட்டிக்காட்டினாலும் அந்த உலகைப் பார்வையற்றவனைப் போலத் தடவ வேண்டியிருக்கிறது. ஒரு வினோத அனுபவம்தான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாசகர் எழுத்தாளர் மௌனியை அவர் கதைகள் புரியாமல் போவதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். உடனே மௌனி மேஜை மேல் கிடத்தியிருந்த தன் கதையின் கையெழுத்துப் பிரதியை எடுத்து ஒரு பத்தி படித்துக்காட்டினார். இப்பொழுது புரிகிறதா என்று கேட்டார். வாசகர் புரியவில்லை என்றார். படித்துக்காட்டியதில் எல்லா வார்த்தைகளும் உங்களுக்குத் தெரிந்தவைதானே என்று கேட்டார். வாசகர் ஆமாம் என்றார். அப்படியானால் புரிந்திருக்க வேண்டுமே என்றார் மௌனி. பிறகு வாக்கியம் புரியவில்லையா என்றார். வாசகர் புரிந்தது என்றார். புரியாமல் போவதற்கு என்ன காரணம் என்றார் மௌனி. வாசகர் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு மௌனி ‘என்னிடம் உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேட்டார். ‘எது புரிகிறதா என்று கேட்கிறீர்கள்?’ என்றேன். மௌனி அர்த்தம் எப்படி உருவாகிறது என்று கேட்டார்.

இந்திய தத்துவம் பொருள் எப்படி உருவாகிறது என்று நிறைய விவாதித்திருக்கிறது. பொருளைத் தருவது சொல்லா வாக்கியமா என்று விசாரணை நடந்திருக்கிறது. வாக்கியம் முடிந்த பிறகுதான் பொருள் விளைகிறது. பல வாக்கியங்கள் முடிந்த பிறகுதான் விஷயம் விளைகிறது. இந்த ‘முடிதல்’ எப்போது நிகழ்கிறது என்று சொல்ல முடியுமா என்ன.

வாக்கியங்கள் பல வகையாக உள்ளன. கவிதையில் வெளிப்படும் உருவக வாக்கியங்கள் சில சமயம் ‘தேவைப்படுகிற’ அளவுக்குத் தெளிவு காட்டாமல் இருக்கலாம். அது மற்ற வாக்கியங்கள் போலத் தெளிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தெளிவின்மை, வாக்கியத்தின் தூண்டுதலுக்குப் பொருளை எழுப்ப மனத்தால் முடியாமல் போகும்போது அல்லது வாசகனிடத்தும் எழ வேண்டிய அர்த்தத் தொகுதி இல்லாமல் போவதனாலும் நிகழலாம். சில சமயம் புதிய அர்த்தக் கிடங்கைக் கவிதை செய்துதர கால தாமதமாகலாம். எப்படி இருந்தாலும் சொன்ன மட்டுக்கு அர்த்தம் தெளிவாகிறது.

திரு. வெங்கடேசனின் கவிதை நடைக் கவர்ச்சி ரவீந்திரநாத தாகூர், பாப்லோ நெருடா இவர்களின் பார்வையால் கிடைத்தது, ஆனால் இதே கவிஞர்களின் பார்வை மற்ற கவிஞர்களிடம் இப்படி ஒரு கவர்ச்சியைத் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. தாகூர் இன்று தமிழில் படிக்கப்படாத கவிஞர் என்று சொல்வது தவறாகாது. ஆனால் அவரது கீதாஞ்சலி ஏற்படுத்திய உருவகம் நெருடா வழியில் பல மொழிகளை அடைந்துள்ளது. பல கவிஞர்கள் இந்த உருவகத்துக்கு இரையாகிவிட்டனர். ஆனால் வெங்கடேசன் உருவகத்தைத் தெளிவுக்கும் அழகுக்கும் பயன்படுத்துகிறார். கடலை வரைதல், நீளா, இது எனது 1001வது இரவாக இருக்கலாம் முதலான கவிதைகளைக் குறிப்பிடும்போதே மற்ற கவிதைகளும் இப்பட்டியலில் இடம்பெற முந்துகின்றன.

வெங்கடேசனின் கவிதைகளில் நிலப்ரக்ஞை ஒரு பிரதேச அறிதலாகவும் வரலாற்றை ஸ்வீகரிப்பதாகவும் அநாதி காலத்துக்குப் பயணப்படுவதாகவும் உள்ளது.

1. கலு கொண்ட பள்ளி மலை
2. சூடவாடிக் குன்று
3. ராம நாயக்கன் ஏரி
4. பின்னாட் சாலை
5. கார்ஸன் தெரு
6. பேட்ராய சுவாமி
7. துங்கபத்ரை
8. ஹம்ப்பி
9. மத்தகிரி நாற்சந்திப்பு
10. ஹொய்சளர்
11. ஓசூர்
12. கிழக்குத் தொடர்ச்சி மலை

வெங்கடேசனின் கவிதையில் ஆங்கிலேய, முகமதிய ஆட்சிக் கால நினைப்புகள் ப்ரஸ்தாபம் பெறுவது ஒரு பரிணாமமாகத் தெரிகிறது.

சூடவாடிக் குன்றின் அடிவாரத்தில்
சுல்தானியக் குதிரைகள்
தடதடத்துச் சென்ற பாதை…

என்று படிக்கும்போது ஒரு வரலாறு தலைகாட்ட முயல்வதை உணர முடிகிறது. இப்படியேதான் ஹொய்சளர் பற்றிய ப்ரஸ்தாபம் வரும்போதும். ஹொய்சளர்கள் சிங்கத்தைப் பெரிதும் விரும்பியவர்கள். அதற்குமுன் பல்லவர்கள் சிங்கத்தை விரும்பினர். அதற்குமுன் சிங்கம் தமிழ் நிலத்தில் இல்லை போலும். சங்க இலக்கியம் புலி, உழுவை, வேங்கை பற்றிப் பேசுகிறது. ஆனால் சிங்கம் இல்லை. சிங்கம் இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான விலங்கு. ஆனால் புலி மங்கோலிய-வட சீன எல்லையைப் பூர்வீகமாகக் கொண்டது. இவர் கவிதையில் பலிஜர்களையும் ரெட்டிகளையும் எதிர்கொள்கிறோம். ஆங்கிலேய ஆட்சியும் திருவாளர் ப்ரெட்டின் தனிமொழி என்ற கவிதையில் குறிப்புப் பெறுகிறது. லோலிடா, நெருடாவைப் பற்றிய திரைப்படம் (இதைப் பார்த்துவிட்டு நான் பலரிடம் சொன்னேன்) முதலியவை பல நினைவலைகளை எழுப்புகின்றன.

1. அஸ்தி கரைக்கப்பட்ட நதிகளில்
அரைகுறைப் பிணங்களை
மலர்களாய்ச் சுமந்துகொண்டு
அலைந்த ஒரு வெக்கைப் பருவம்

2. பித்ருக்களின் அமைதியுறாத ஆவிகளோடு
அகதிகளின் துயங்களும்
தர்ப்பண மந்திரத்தால் பீடிக்கப்பட்ட
கடல் தலத்தில்…

என்ற பகுதிகள் மற்றும் திருப்புக் குழி என்ற கவிதை வெங்கடேசனின் கவிதை உலகம் பெரிதாக விரிவதை உணர்த்துகின்றன.