கோபியை நினைக்கிறேன்

(புது எழுத்து ஜனவரி 2003 கோபிகிருஷ்ணன் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை)

சேலத்திலிருந்து சி. மணி நடத்திய ‘நடை’ வந்துகொண்டிருந்தது. அதில் வெளியான என் கவிதைகளைக் கொண்டு நான் அறியப்பட்டேன். ‘நடை’ வந்துகொண்டிருந்தபோதே சென்னையில் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்த சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி, (க்ரியா) ராமகிருஷ்ணன், ஐராவதம் ஆகியோர் ஒரு மாதாந்திரப் பத்திரிகை வெளியிட எண்ணம் கொண்டிருந்தனர். சா. கந்தசாமி என்னைச் சந்தித்து இக்கருத்தைக் கூறினார். ‘நடை’ வந்துகொண்டிருக்கும்போது வேறு பத்திரிகை தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். சில மாதங்கள் கழித்து ‘நடை’ நின்றுவிடப்போவதாகக் கநதசாமி என்னிடம் சொன்னது எனக்குப் புதிராக இருந்தது. ‘நடை’ இரண்டாம் இதழிலிருந்து சி. மணி, ந. முத்துசாமி, வி.து. சீனுவாசன் இவர்களோடு எனக்குப் பழக்கம் கூடுதலாக இருந்தது. ஆனால் அது நிறுத்தப்படுவதான செய்தியை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் செய்தி உண்மைதான் என்பது பின்னர் தெரிந்தது.

‘ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகள்’ குறித்து ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு ‘தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி வந்திருந்தார். நான் அந்தக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அங்கே என்னைத் தேடி வந்த கந்தசாமி பத்திரிகை குறித்துப் பேச வேண்டும் என்றார். நான் என் அறைக்கு அழைத்துப் போனேன். விஷயத்தை அங்கு கூடிய ந. கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஐராவதம் முதலியவர்களோடு விவாதித்தேன். அங்கே இன்னொருவர் இருந்தார். அவர்தான் ‘கசடதபற’வின் வெளியீட்டாளராக இருந்த என்.எம். பதி.

என்.எம். பதி திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவில் தனியாக வசித்திருந்தார். மாலை வேளைகளில் அங்கே போவேன். அவர் ராமகிருஷ்ணனின் நண்பர். ஒருமுறை பதியின் அறைக்கும் போனபோது, உப்பிய கன்னமும் சற்றுத்த துருத்தலான கண்களும் ஒல்லியான உடம்புமாக எனக்குத் தெரிந்தவர்தான் கோபிகிருஷ்ணன். பதியும் நானும் விவாதிப்போம். ஆனால் அவர் அதில் கலந்துகொள்ளமாட்டார். எத்தனை மணியானாலும் கேட்டுக்கொண்டிருப்பாரே தவிர பேசவேமாட்டார். எத்தனை நாட்கள் போயினவோ தெரியாது.

ஒருநாள் கோபி பதியின் அறையில் இருந்தார். என்ன தோன்றியதோ? அன்று நான் பேசிக்கொண்டிருந்த விஷயம் அவரது மௌனத்தைத் துளைபோட்டிருக்க வேண்டும். மிகவும் அடக்கமாக நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? என்று கேட்டார். பிறகு சொன்னார். விஷயம் வீடு மாற்றுவது பற்றியது. அவர் தந்தை அடிக்கடி வீடு மாற்றுவார் போலிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நள்ளிரவில்தான் வீடு மாற்ற நேரிடும். வீடு மாற்றத்தின்போது வீடு மாற்றப்படுவது தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவன் கோபியை அவர் தந்தை எழுப்பி ‘வீடு மாற்றியாகிறது, எழுந்திரு’ என்று எழுப்புவாராம். இதைக் கோபி சொன்னபோது அப்போது நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்குத் தொடர்பான செய்தி என்றுதான் சொன்னார். அவர் சொன்னதில் மறைந்து கிடந்த சோகம் என்னைப் பற்றிக்கொண்டது. நள்ளிரவில் சென்னைத் தெருவொன்றில் வீடு மாற்றும் தள்ளுவண்டியின் பின்னே போகும் சிறுவன் கோபியை நான் பார்த்தேன். கோபியை ‘இதைக் கதையாக எழுதுங்கள்’ என்றேன். தனக்கு எழுதத் தெரியாது என்றும் எழுத வராதென்றும் அவர் சொன்னார். ‘தமிழ் தெரியுமே எழுதுங்கள்’ என்றேன். ஆனால் அவர் அதுவும் தெரியாது என்றார். ‘உங்களுக்குத் தெரிந்த தமிழில் எழுதுங்கள்’ என்றேன்.

ஒருவாரம் கழித்து கோபி வேறு ஏதோ எழுதி வந்தார். அது எனக்குப் பிடிபடவில்லை. மறுபடியும் எழுதினார். என்ன எழுதினார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அந்த முறை ஒரு வித்தியாசம் தெரிந்தது. பிரதியை கார்பன் வைத்து எழுதிவந்திருந்தார். பின்பு அவரைக் கவிதை எழுதச் சொன்னேன். முன்போலவே சொன்னேன். கவிதைகள் சில எழுதிக் கொண்டுவந்து காட்டினார். அவை எனக்குப் பிடித்திருந்தன. வெளியிட ஓரளவு காத்திரம் இருந்ததால் கசடதபறவில் வெளியிடலாம் என்று எண்ணினேன். ஆனால் அவர் சிறுகதை எழுதவே வல்லமை உள்ளவர் என்பது என் கருத்து. பூட்டுப் போட்டுக்கொண்டது போன்ற அவரது மௌனம் தகர இது வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணினேன். அவரிடமே சொன்னேன். எப்போதும் சொன்னால் கேட்டுக்கொள்வதான பாவனையை அவர் காட்டுவார்.

ஒரு நாள் எழிலகக் கட்டிடத்துச் சிற்றுண்டித் தளத்தில் என் எதிரில் வந்து அமர்ந்தார். அப்போதெல்லாம் அவர் நல்ல உடை உடுத்திக் கழுத்தில் டை கட்டிக்கொண்டிருப்பார். அவர் எதிரில் அமர்ந்ததும் அவர் அருகில் அவரைவிடச் சற்று உயரம் என்று தோன்றிய பெண் கையில் வாங்கிவந்த சிற்றுண்டிகளோடு அமர்ந்தார். அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகம் பேசவில்லை. அந்தப் பெண் ஆங்கிலத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார். கோபி அதிகம் ஆங்கிலத்தில் பேசுவார். என்னிடமும் ஆங்கிலம் பேசுவார். தன்னுடைய தமிழைப் பொறுத்துக்கொள்வதானால் தமிழில் பேசுவேன் என்று பேசுவார்.

என்னிடம் அவர் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஒவ்வோராண்டும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் அனுப்பாமல் இருக்கமாட்டார்.

அவர் எழுத்தாளராகிவிட்டார். கவிதைகளும் வெளிவந்தன. பல கவிதைகளை வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் அவர் படித்துக்காட்டுவார். அவரது எந்தக் கவிதையையும் நான் திருத்தியதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டால் கவிதை அச்சாகிவிட்டது போன்ற சந்தோஷமடைவார்.

இலக்கியத்தைக் குறித்துப் பெரிய விவாத விஷயங்களை அவர் என்னிடம் எழுப்பியதில்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அனேகமாக 86-87ஆம் ஆண்டில், கோபி சில கருத்துகளில் தீவிர நம்பிக்கை வைக்கத் தொடங்கினார். இந்த சந்தர்ப்பத்தில் ஒருமுறை என்னை என் வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். உலகத்தில் நல்லவர் என்று யாரும் கிடையாது என்பது அவர் வாதம். அடி மனதில் ஆத்மஞானியும் அயோக்கியனும் ஒன்றுதான் என்று பேசினார். இதைக் கூறும்போது அவரிடம் வழக்கத்துக்கு மாறான உற்சாகமிருந்தது. ரிலீஜியஸ் எக்ஸ்பீரியன்ஸ் என்பது ஒரு சைகலாஜிகல் டிசீஸ் என்று ஃப்ராய்டு சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆனால் ஃப்ராய்டு தன் மேஜை மேல் திருவனந்தபுரத்து அனந்தசயனப் பெருமாளின் பதுமையை வைத்திருந்ததை நேரில் பார்த்த ஒருவர் சொல்லியிருக்கிறார். அது ஏன் என்று கேட்டேன். ஒருவனது செய்கையே அவனை வெளிப்படுத்தும். அடிமனதில் ஆத்மஞானி. அப்படியிருப்பவர் தன்னிடம் உள்ள குணங்களை அறிந்தவர்தான் என்று நான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் கோபி தனது கண்டுபிடிப்பை இழக்க விரும்பவில்லை. கோபி சில கதைகளின் கார்பன் காப்பிகளை எனக்கு அனுப்பிவைப்பார். நீண்டநாள் கழித்துத் திரும்பப் பெறுவார். அவர் பார்க்க விழைந்த ப்ரத்யேக உலகத்தைக் கண்டு எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அவருக்குப் பயமில்லை. அவரது படைப்புகளைக் குறித்து ஒரு சிறு இதழில் நான் விமர்சித்து எழுதியிருந்தேன். அதை மிகவும் திருத்தி வெளியிட்டது அந்தப் பத்திரிகை. அந்தப் பத்திரிகை ஒரு பகுதியை முழுவதும் நீக்கிவிட்டது. ‘தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தமக்குள் வேற்றுமைப்பட்டாலும் அவை ஒரு குடையின் கீழ் வருபவைதாம். ஆனால் கோபிகிருஷ்ணனின் படைப்புகள் அப்படி இல்லை. புதுமைப்பித்தன், மௌனி இவர்களுக்குப் பிறகு தமிழ் கதைக் களத்தை விட்டு நகர்ந்தவர் கோபிகிருஷ்ணன் மட்டும்தான்’ என்பதுதான் அந்தப் பத்திரிகை நீக்கிய பகுதி. என் கட்டுரையைப் படித்திருந்ததால் கோபி இவ்விஷயத்தைத் தெரிந்துகொண்டிருந்தார். அந்த மட்டில் எனக்கு மகிழ்ச்சி.

கோபிகிருஷ்ணன் இறந்த பிறகு அவரைப் பொருட்படுத்தும் நண்பர் குழாம் பெரிய அளவில் இருப்பதும் மகிழ்ச்சிதான். எனக்கு மகிழ்ச்சி ‘எழுதுங்கள்’ என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேனே, அதில்தான்.