கவிதைக்கு அழகு

(விஷ்ணுபுரம் விருது விழாவில் நிகழ்த்திய உரை)

திருக்குறள் முழுமையாகப் படிக்கக் கிடைத்ததும் அதைப் பாராட்டிச் சில புலவர்கள் எழுதினார்கள். தன் காலத்தில் கீரன், நக்கீரன், கபிலன், இளஞ்சேரல் என்ற பெயரைப் புனைந்துகொண்டு பலர் எழுதுவது போல அக்காலத்திலும் சங்க காலப் புலவர் பெயரைப் புனைந்துகொண்டு செய்யுள்களைப் பலர் எழுதினர். இதிகாசக் கதாபாத்திரங்களை வேஷமாகத் தரித்துக்கொண்டு நாடகமாடுவது போலத்தான் இதுவும். சங்க காலப் புலவர் பெயரில் திருக்குறளைப் பாராட்டி எழுதியவர்களின் வெண்பாக்கள் அடங்கிய நூல் ‘திருவள்ளுவ மாலை’ என்று அழைக்கப்படுகிறது. இதில் வெள்ளி வீதியார் என்ற புலவர் பாடிய வெண்பா இது:

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா

அதற்குரியர் அந்தணரே. ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்

வெள்ளி வீதியார் செய்யா மொழி என்று வருணிப்பது வேதத்தை. இன்ன ஒரு புலவரால் இயற்றப்பட்டது என்ற விவரம் இல்லாமல் பண்டு தொட்டுப் பயின்றுவரும் வேதம் செய்யா மொழி எனப்பட்டது. எனவே மற்றவை எல்லாம் செய்யப்பட்டவை என்று பெயர் பெற்றன. அதாவது செய்யுள், கவிஞனின் கருமம் செய்யுளின் மேற்று என்று வடமொழியை ஒட்டி வணக்கம் கூறிய நச்சினார்க்கினியர் செய்யுள் என்பது தொழில் பெயர் என்றும் கூறியிருக்கிறார். வடமொழியில் கவிதை எனப்பட்டதும் தமிழில் செய்யுள் எனப்பட்டதும் ஒன்றுதான். ஆனால் கவிதை வேறு, செய்யுள் வேறு எனவும் செய்யுள் உயிரற்றது எனவும் கவிதை உயிருள்ளது எனவும் சிலர் இருபதாம் நூற்றாண்டில் சொல்லிவந்தனர். இந்தக் கூற்று புறக்கணிக்கத் தக்கது. வேதமும் செய்யுள்தான். இதை எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் இலக்கண அமைதி உடைய செய்யுள்களே. ஆனால் வேதம், அதாவது அறியப்பட்டவை அபௌருஷேயம் என்பதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.

இதை இங்குக் கூறுவதற்குக் காரணம், என் கவிதைகள் எழுப்பக்கூடிய பிரச்னைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளத்தான்.

கவிதை என்பது ஒரு செயல்பாடுதான் என்பதிலும் மிகக் கவனமாகச் செய்யக்கூடிய செயல்பாடு என்பதிலும் எனக்குச் சம்மதம் உண்டு. கவிதை என்பது ஒரு தொழில் என்றான பிறகு கவிஞன் என்பவன் ஒரு தொழிலாளிதான் என்று கொள்வது அவசியமாகிறது. கவிஞன் என்ற தொழிலாளியாலும் அவனுடைய தொழிலாலும் என்ன நிகழ்கிறது? ஓர் இயற்கை நிகழ்வு ஒரு மொழியில் அவதாரம் எடுக்கிறது. இடப்பெயர்ச்சி நாட்டப் பெறுவதும் (translocation) பெயர்தல் என்ற காரியத்தில் புதுமை சேர்வதும் இதனால் தொடக்க நிகழ்வு முதல் அவற்றுக்கு அப்பாற்பட்டுப் போவதும் நிகழ்கிறது. இந்த நிலையில்தான் அது transmigration என்ற வர்ணிப்புக்கு ஏற்றதாகிறது.

கவிதையில் என்ன நிகழ்கிறது?

படைக்கப்படும் பொருளாகச் செய்யுள் ஆகும்போது அதில் தெய்வம், உணவு, விலங்கு, பறவை, இசை, செய்தி முதலியவை இடம்பிடிக்கின்றன என்று தொல்காப்பியம் அறிந்திருக்கிறது. பிறகு உரையாடல். யார், எங்கே, எப்போது, என்ன, யாரிடம் பேசினார்கள் என்பதையும் தொல்காப்பியம் விவரிக்கிறது. இன்றும் எந்தப் படைப்புக்கும் இவை அடிப்படையானவை என்பதில் சந்தேகமில்லை. இதில் செய்தி என்பது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இது பற்றி உரையாசிரியர்களது கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இந்தச் செய்தி என்ற கருத்தை எண்ணும்போது திருக்குறள் ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

இந்தக் குறள் ஒற்றாடலில் வருகிறது. மன்னனுக்கு ஒற்றும் புகழ் சான்ற அல்லது பலரால் பேசப்படுகின்ற நூலும் மிகவும் தேவை என்கிறது குறள். நூல் என்பதை உளவு பார்த்தலோடு வள்ளுவர் கோத்தது வியப்பானது. பரிமேலழகர் நூல் என்பதைத் தரும சாத்திரம் என்கிறார். ஆனால் நூல் என்பது தர்ம சாத்திரமானால் அதை ஒற்றனோடு சேர்ப்பது பொருந்தாது. நூல் என்று வள்ளுவர் குறிப்பிட்டது சான்றோர் இலக்கியமெனக் கொள்ளாத சில படைப்புகளை. அவை புலவர் என சமூகம் அறியாதவரால் இயற்றப்பட்டு மன்னன் சபைக்கு வெளியே பாமர மக்களால் பெரிதும் விரும்பிக் கேட்கப்பட்டவை. இவற்றின் சாயை உடையவை தூது, உலா முதலியன. 17, 18 நூற்றாண்டுகளில் வர்ணிப்புகள் என்று அழைக்கப்பட்டன. கொலைச் சிந்து உட்பட்ட பல வகையான சிந்துகளும் இவற்றில் அடக்கம். செவ்வியல் போக்கை மறுத்துச் சுதந்திரமாகப் பாடப்படுபவை. இவற்றில் உள்ளூர்ச் செய்திகளே நிரம்பி இருக்கும். கொலை, கொள்ளை, பெரிய மனிதர்களின் ஒழுக்கக் கேடு முதலிய செய்திகள் காரசாரமாகக் கூறப்படும். தடாரி, டேப் முதலிய தோல் கருவிகளைத் தட்டிக்கொண்டு பாடப்படுபவை. நான் இவற்றைக் கேட்டிருக்கிறேன். சில சைவ மடங்களைப் பற்றிய வதந்திகளையும் கோயில் நிர்வாக அதிகாரிகளைப் பற்றிய ஊழல்களையும் இவை பாடின. மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதச் செய்யுளுக்கு ‘வர்த்தமானம்’தான் ஆதாரமாக இருந்தது என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சிந்துகள் இன்று இயற்றப்படவில்லை. இப்படிப்பட்ட விஷயங்கள்தாம் நவீன கவிதைக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதில் சேறு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசாங்கமே எழுத்தாளர்களை நாவல் எழுதத் தூண்டியது. தெலுங்கில் பிரிட்டிஷ் அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது. சிறுகதை, நாவல் வடிவங்களில்தான் பிரஜைகளை அறிய முடிகிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை நாவலில்தான் அறிய முடிகிறது. பிரிட்டிஷ் அரசுக்கு நாவலின் மூலம் தெரியவரும் செய்தி பயனுடையதாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறியது. ஸ்டெந்தால், டி.எஸ். இலியட் ஆகியோர் கவிதை உரைநடையைப் போல் இருக்க வேண்டும் என்றார்கள். இதைத்தான் வர்த்தமானம் என்று சமஸ்கிருதமும் செய்தி என்று தமிழும் கூறின. இருபதாம் நூற்றாண்டில் கவிதை வசன கவிதையானதும் இதற்காகத்தான். நான் எனது கவிதையில் இதை நிலவரப்படுத்தியிருக்கிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு (1978) கவிதையை

சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை

என்று நான் எழுதியிருந்தேன். இப்போதும் இதை ஆமோதிப்பதுடன், கவிதைக்கு அழகு சிறந்ததைக் கூறுதல் என்றும் சொல்ல விரும்புகிறேன்.