அறிமுகம்: இரண்டு சிகரங்களின் கீழ்

திரு. ஆனந்தின் முதல் குறுநாவல் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’. இக்குறுநாவலுக்கு முன்பாக அவர் எழுதிய பல கவிதைகள் ‘அவரவர் கைமண’லில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர அச்சேறாத கட்டுரைகள் சிலவும் கவிதைகள் சிலவும் அவரிடம் உண்டு.

‘இரண்டு சிகரங்களின் கீழ்’ எழுதி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் தற்பொழுதுதான் வெளிவருகிறது.

வாசகர்களுக்குப் படிப்பதற்கு நிறையவே புத்தகங்கள் வெளிவருகின்றன. அவை பெரும்பாலானவை என்பதற்கும் மேலாக இலக்கிய உணர்வு உடையவர்களால் எழுதப்பட்டவை அல்ல. வாசகர்களும் அவ்வாறே இலக்கிய உணர்வுலகத்துக்கு ஈடுபடுத்தப்பட்டவர்கள் அல்லர். பொது வாசிப்புக் களத்தில் குவிகிற புத்தகங்களின் அளவுக்குத் தீவிரமான இலக்கியப் படைப்புப் புத்தகங்கள் வந்திருந்தால்தான் ஒரு மொழிக்கு அழகாகும். நல்ல வேளையாக சில நாவல்கள் மிக அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ளன. இவற்றில் குறிப்பிடத் தகுந்ததென்று நகுலனின் ‘நவீனன் டயரி’, ‘இவர்கள்’, காசியபனின் ‘அசடு’, கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’, சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மற்றும் ‘தொலைந்து போனவர்கள்’ ஆகியவற்றைக் கூற வேண்டும். இந்த நாவல்கள் அனைத்தும் தமிழ் நாவல் இலக்கியத்துக்குப் புதிய கோணத்தைச் சேர்க்கின்றன.

இந்த நாவல்களில் இருபதாம் நூற்றாண்டு மனிதனின் பிரதிமைகள் நமது கவனத்தைக் கவர்கின்றன. இவற்றில் மனோபாவனைகளால் கட்டப்படுபவனாக மனிதன் தென்படுகிறான். இத்தகைய படைப்புகளின் வரிசையில் ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ சேர்கிறது.

அன்றாட வாழ்க்கையில் பூதாகாரமாகத் தெரியும் பல செய்திகள் இந்தக் கதையில் வெறுமனே துடைத்து விடப்பட்டுள்ளன என்பதை உடனே வாசகர் தெரிந்துகொள்ள முடியும். கதையின் நடை கட்டுரையை நினைவூட்டுவது போல் தோன்றினாலும் அது கூற வந்ததற்குப் பொருத்தமாகவே இயங்குகிறது. மௌனத்துக்கும் பேச்சுக்கும் இடையில் எங்கேயோ ஒரு புள்ளியைத் தீண்டுவதாக நடை தோன்றுகிறது. அன்றாடப் பிரச்னைகளையே பெரிதும் பேசிப் பழகிய மொழி அதற்குத் தொடர்பற்ற வேறு சூழலில் இயங்கும்போது சூனியத்தில் புகுந்துவிட்டது போன்ற நினைப்பைத் தரலாம்.

பிரச்னைகள் அன்றாடத்திலிருந்து விடுபட்டுவிட்டால் அவை தீர்ந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. அவை மொத்த உருப் பெற்று மனிதனைப் பீடிக்கலாம். ஏனென்றால் அவை மனிதனைத்தான் பீடிக்க வேண்டும். அவை மனிதார்த்தப் பிரச்னைகள். மனிதன் தனது பிரச்னைகளைக் கழற்றிப் போட்டுவிட்டுப் பார்க்க முடிவதில்லை. ‘இரண்டு சிகரங்களின் கீழி’ல் இரண்டு மனிதர்கள் வருகிறார்கள். ஒருவர் பல நகரங்களுக்கு ஜீவிய காரணமாகச் சென்று திரும்புபவர்; மற்றவர் ஒரு காரணமும் இல்லாமல் ஓரிடத்தில் அவரைத் தற்செயலாய்ச் சந்திப்பவர். இரண்டு மனிதர்களும் நெடுங்காலமாக ஒருவரை ஒருவர் அறிந்திருப்பவர்கள். வாழ்க்கையைப் பற்றிய கருத்து அவரவர்க்குத் தகுந்ததாய் வேறாக இருந்தது. வாழ்க்கைப் படிகளில் ஏறி வெற்றி கண்ட ஒரு மனிதர் அதில் நிறைவு கிட்டவில்லை என்பதை அறிகிறார். ஆசாபாசங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் இலக்குகளுக்கும் தன்னைத் தொலைவுபடுத்திக்கொண்ட மனிதரை அவர் சிகரங்கள் நின்ற ஏதோ ஒரூரில் தற்செயலாகச் சந்திக்கிறார். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தும்கூட அன்றைய சந்திப்பில் அன்றைய பேச்சில் தெளிவு கிடைத்துவிடுகிறது. இப்படிச் செல்கிறது கதை.

இந்தக் குறுநாவலில் வரும் இரண்டு மனிதர்களும் பார்க்கப்போனால் இரண்டு மனநிலைகளைத் தெரிவிப்பவர்கள். மனிதன் மனநிலையால் பிரதிமைப்படுவது விசித்திரம் அல்லவா? மனநிலையே இக்குறுநாவலில் மனிதனாகக் காட்டப்படுகிறது என்பதால் இது குணரூபத்தை உருவகமாக்கிப் பாத்திரமாக்கும் தத்துவப் பௌராணிகக் கதைப் பண்பை மேற்கொண்டுவிடவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. கலை நிர்ப்பந்திக்கும் சேய்மையைச் சற்று அதிகரிக்கவே வைத்திருக்கிறது இந்தக் குறுநாவல். நாவல் உலகில் மனிதர்மய உலகம் சிறுத்துவிட்டது; ஆனால் பயனற்றது என்று புறக்கணிக்கப்பட்டிருக்கவில்லை. நாவலில் வரும் சிகரங்களேகூட ஏதோ ஒரு உச்சாடனத்தில் மறைந்துவிடக்கூடியவை என்று தோன்றினாலும் அவை நாவலின் உயிரோடு ஆதர்சத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. இதனால் மலைகள் நாவலுக்கிடையில் உருக்கொள்ளும்பொழுது தாங்களே முக்கியம் போல இருப்பதோடு அவற்றை நாவலின் போக்கிலிருந்து வெளியேற்றிவிடலாம் என்றும் தோன்றக்கூடும்.

தொடக்கத்திலிருந்து இறுதிவரை நாவலில் பரவியிருக்கும் மனநிலை அடிப்படையான சுற்றுப்புற உணர்வுக்கு மலைகளும் அதைச் சார்ந்த பிரதேசமும் இன்றியமையாதவை என்பது ஊன்றிப் படிக்கப் புலனாகும். மனிதன் தன்னை ஒழித்துப் பிரகிருதியின் பக்கம் மனத்தைச் செலுத்தும்பொழுது உலகம் அழகானதாக இருப்பதை உணராமல் விடுவதில்லை. ‘இந்த மிக அழகிய வெயிலில் என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப் போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை’ என்று பாரதியின் அணில் பசுவிடம் கூறுவது இத்தகையதொரு சூழ்நிலையில்தான்.

இன்னும் இந்தக் குறுநாவலைக் குறித்து விரிவாக எழுதலாம். உதாரணமாக ஜீவாவை லோகு சந்தித்தது உண்மையில் தற்செயல்தானா என்று கேட்டோமானால் விடை தேடும் போக்கில் நாவலின் உலகம் வேறு கோணத்தை மேற்கொள்ள முயலும். அவ்வாறே இருவருடைய மனநிலையையும் அதன் தாற்பரியத்தையும் ஆராயும்பொழுதும் ஏற்படலாம். நாவலின் கருத்தமைப்பில் ஆனந்தின் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ ஆயாசப்படாமல் புதுமையைச் செய்திருக்கிறது. நாவல், குறுநாவல், சிறுகதை என்ற உருவங்கள் மொத்தத்துக்குமாகவும் புதுமையாக இருக்கிறது.

நாவல் – அது எழுப்பிக் காட்டும் மனநிலை – அதில் வரும் மனநிலை மனிதர்கள், அந்த மனிதர்களால் தழுவப்படும் இயற்கை, உலகின் வைப்புமுறையால் நிகழும் வினோதங்கள் என்று பல வகையாகப் பார்க்கும்பொழழுது வாசிப்பவன் மனம் நிறைகிறது. அமெரிக்க ஆசிரியரும் இயற்கைவாதியுமான ஹென்றி டேவிட் தோரோ கூறியிருப்பது இந்த நாவலைப் பற்றிய எதிர்வினையில் எங்கோ ஓரிடத்தில் பொருந்துகிறது. தோரோ சொல்கிறார்:

“This curious world which we inhabit is more wonderful than it is convenient, more beautiful than it is useful; it is more to be admired and enjoyed than used.”

சென்னை – 5
5-7-83