நடைவரை சென்ற நாடிய பாதங்கள்

1979ம் ஆண்டு நகுலனின் ‘மூன்று’ என்ற நெடுங்கவிதை வெளியாயிற்று. இக்கவிதைக்கு நகுலன் எழுதியிருக்கும் ‘பின்னோக்கம்’ என்ற உரையை வைத்துப் பார்த்தால் அக்கவிதை 1978ம் ஆண்டு எழுதப்பட்டிருக்கும் என்று உரைக்கலாம். எந்தப் படைப்பாளியும் எழுதிய உடனேயே வெளியிடுவதில்லை அல்லது வெளியிட முடிவதில்லை. கவிதைக்குப் பெயராக ஓர் எண்ணையே ஆசிரியர் கொடுத்திருப்பதால் அந்த எண்ணில்தான் – அந்த எண் எதிரொலிக்கும் பொருளில்தான் கவிதையின் பிறப்பு அடங்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் ‘இராவண சோகம்’, ‘கிளி முன்வைத்துப் பாடியது’ மற்றும் ‘உறங்குகின்ற கும்பகர்ணன்’ என்ற மூன்று பகுதிகளையே இந்தப் பெயர் குறிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. மூன்று என்றால் எந்த மூன்று? இலக்கணத்தில் மூன்று என்பது மூன்று பொருள் அடக்கிய ஒன்று என்று பொருள் வருகிறது. இதைப் பிண்டம் என்ற பெயரால் அறிகிறது தொல்காப்பியம். மூன்று தமிழ், மூன்று அதிகாரம் – எழுத்து, சொல், பொருள் – அடங்கிய ஒரு நூல் என்று அறிகிறோம். ஆனால் இங்கு நகுலனின் ‘மூன்று’ அந்தப் பக்கம் போவதாகத் தெரியவில்லை. ஆனால் மூன்று என்பது ஒன்றில் மூன்று என்றே பொருள் தருவதாகக் கொள்ளலாம். இயல், இசை, நாடகம் என மூன்றையும் உள்ளடக்கிய அகத்தியம், எழுத்து, சொல், பொருள் என மூன்றை அடக்கிய தொல்காப்பியம் என்பது போலவே நகுலனின் இந்த மூன்றும் ஒரு மூன்றை உள்ளடக்கியது என்று கொள்ளலாம். அந்த மூன்று எவை என்றால் உள்ளடக்கமான மூன்று படலங்கள். மூன்று படலங்களில் ஒரு காவியம்தான் நகுலனின் மூன்று என்று சொல்லலாம்.

மூன்று படலங்களில் இரண்டு இராமாயணம் சார்ந்ததாக உள்ளன. முதலாவது இராவணன் சோகத்தைச் சொல்கிறது. மூன்றாவது கும்பகர்ணன் தூங்கிக்கொண்டிருப்பதைச் சொல்கிறது. ஆனால் இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள இரண்டாவது படலம் இராமாயணத் தொடர்பற்றது. அல்லது அப்படித் தோன்ற வைக்கிறது என்று சொல்லலாமா?

‘இந்தத் தொகுதியில் மூன்று கவிதைகள் இருக்கின்றன. பொதுவாக எனக்கு நான் இதுவரை படைத்து வந்த எல்லாப் படைப்புகளுமே பூர்ண திருப்தி தருவதில்லை – என்ற நிலையினும் பொதுவாக எனக்கு என் கவிதைகள் இந்தத் திருப்தியின்மையை அதிகமாகவே தந்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.’

என்று நகுலன் தன் உரையில் சொல்கிறார். இப்புத்தகத்தில் உள்ள கவிதைகளைத் தனித்தனிக் கவிதைகளாகவே அவர் அடையாளம் காட்டுகிறார். தொகுதியில் மூன்று கவிதைகள் உள்ளன என்பதால் இக்கவிதைகளைத் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் என்றாகிறது. இரண்டு நிகழ்வுகள் ஒரே கதையைச் சேர்ந்திருக்கும்போது இவை எப்படி தனித்தனி ஆக முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒன்று மற்றதைப் பார்க்காமல் இருக்குமா? பொருள் ஒன்றிலிருந்து மற்றதை நோக்கி நகராதா?

‘இராவண சோகம்’ எதைப் பற்றியது? அது சீதையைப் பற்றி மட்டுமேதான் இருக்க முடியும் என்று உறுதியாக்கப்பட்டுவிட்டது.

… … … … …
இவ்வண்ணம்
அசோக வனத்துச்
சீதை முன்
இராவண சோகம்
தலைவிரித்துப்
பல புலம்பும்

இராவணனின் சோகம் சீதையின் முன்தான் நிகழ்கிறது. இதற்கு முன்பு யார் முன்னும் அவன் சோக உணர்வைப் பெற்றதில்லை. ஏன் சீதையின் முன்பு என்கிறார் ஆசிரியர்? இராமாயணம் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். அது இராவணன் மனிதர்களை ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை என்பது. அப்படி மதிக்கப்படாத ஒரு கூட்டத்திலிருந்து தனக்குக் கிடைக்காவிட்டால் வாழ்க்கை பயனற்றாகிவிடும் என்று உறுதியாக்கும் ஒரு பொருள் தனக்கு முன்பாகவே இன்னொருவனுக்கு கிடைக்கப் பெற்றுவிட்டது. இப்பொருள் அவனது எல்லையில் இருந்தாலும் பெறக்கூடிய ஒன்றாக இல்லை என்ற நிலையில் அமைந்துகொண்டிருப்பது; அதைப் பெறுவதற்கு அவனுடைய மானமும் அவனது சுற்றத்தார் மானமும் போய்விட்டது. அந்தப் பொருள் இருந்துவருவது அவனுக்கு முன்னமேயே தெரியாமல்போனது. அதைப் பெறுவதற்கு அவனது சகோதரிக்கே ஒரு விலை கொடுக்க நேரவிருப்பது. இவையெல்லாம்தான் இராவணனின் சோகம். அவனுடைய வீரமும் அவனுடைய கலைத்திறனும் இப்போது பயனற்றதாகிவிட்டன. ‘நான் நன்றாக யாழ் வாசிப்பேன். நான் வாசிக்கிறேன் கேட்கிறாயா?’ என்று சீதையிடம் இவன் சொல்லி அவளிடம் ஒரு இசைவை எதிர்பார்க்க முடியுமா? அவன் கலை வெளிப்பட முடியாமல் முடக்கப்பட்டுவிட்டது.

இருந்த இடம் செல்லரிக்கப்
புகுந்த இடம் தடுமாறத்
தன்னைத் தானிழந்து
தனி நாயகமாக
உருமாறித்
தனியிருந்து தவமியற்றும்
அவளுருக் கண்டு
வார்த்தைகள் விலகி நிற்க
வல்லரக்கிகள் சூழ்ந்திருக்க

சீதை தவத்தில் இறங்கிவிட்டாள். அவள் ஜனகரின் மகள் அல்லவா? ஜனகர் மகரிஷி அல்லவா? சீதை தவத்தில் இருப்பதால் அவளை அவளது சுயரூபத்தில், அதாவது இறைவியாகப் பார்க்கும் வாய்ப்பும் இராவணனுக்குக் கிடைக்கவில்லை.

பெண்ணாகப் பிறந்த நானே
அவளைக் கண்டு காமுறுவேனென்றால்
ஆணாகப் பிறந்த அண்ணனே
நீ என்ன செய்வாய்.

இந்தப் பகுதியில்தான் இராவணனைப் போலவே சூர்ப்பனகையும் சீதையை சுயரூபத்தில் பார்க்கவில்லை. அதாவது சீதையை ஓர் இளவரசனின் மனைவியாக, அரச போகத்தில் வளர்ந்த ஒரு பெண்ணாகப் பார்க்கவில்லை. இராமனோடு தவக்கோலத்தில் இருக்கும் சீதையைத்தான் பார்த்திருககிறாள். தவக்கோலத்து சீதையே இவளுக்குத் தலைசுற்றலாக இருக்கிறது. பெண்ணை ஆணாக மாற்றிவிடக்கூடிய அழகு சீதையுடையதாம். ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துக் காமவசப்பட்டாள் என்றால் ஒரு பெண்ணாகக் கண்டு காமுறும் இயற்கை உடைய ஆண் பார்த்தால் அவனுக்கு எப்படியிருக்கும் என்கிறாள் சூர்ப்பனகை. சூர்ப்பனகை உளறுவாள். கம்பராமயணத்திலும் சூர்ப்பனகை தன்னுடைய அண்ணன் ராவணனுக்கு சீதையும் தனக்கு இராமனும் என்று மனதளவில் பகிர்ந்துகொள்கிறாள். நகுலனும் மூல ராமாயணத்தை ஓட்டியே எழுதுகிறார். ஆனால் நகுலன் தனது சொந்தக் கவிதைகளில் தலைகாட்டச் செய்கிற உன்மத்த நிலையை இக்கவிதையிலும் வர விடுகிறார்.

அவனும் தான்
உந்தி பற உந்தி பற
என்று சொல்லடி பெண்ணே.

‘உந்தி பற’ என்று சொல்லி ஆடுவது ஒரு விளையாட்டு. சிறுமிகள் குழுவாகக் கூடி ஆடும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை நினைவுகூர்வதால் சூர்ப்பனகை பித்துப் பிடித்தவள் போல் ஆகிவிட்டாள் என்கிறது கவிதை. இராமனைச் சந்திக்கும் முன்பே சூர்ப்பனகை கணவனை இழந்த ஒரு கைம்பெண். அந்த நிலையை மறந்துபோய் தற்போது தெருவில் விளையாடும் சிறுமிகளில் ஒருத்தியாகத் தன்னை பாவித்துக்கொள்கிறாள் இராவணனின் தங்கை. அதைத்தான் இந்த உந்தி பற காட்டுகிறது.

அண்ணனே
நான் ஒரு கனாக் கண்டேன்
என் நினைவிழந்தேன்
உள்ளந் திரிந்தபின் என் அண்ணனே
உண்மை என்பது ஒன்றுண்டோ?

என்கிறாள் சூர்ப்பனகை.

நீயும் நானும் தொலைய
உருவங்கரந்து வந்த
ஒரு பெருந் தெய்வமோ?

இப்படிச் சொல்லும்போது சூர்ப்பனகையின் வார்த்தைகளில் ஓர் உண்மை வெளிப்படுகிறது. ஆனால் அசந்தர்ப்பமாக இதை அவள் சொல்கிறாள். ‘தொலைய’ என்ற சொல் இராவணனுக்கு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை உணர்கிற நிலையில் இராவணன் இல்லை. சூர்ப்பனகை சபையை விட்டுப் போக, சபை கலைய தனியே இருக்கும் இராவணனை அவள் தங்கையைப் பிடித்த அதே நோய் பிடித்துக் கொள்கிறது.

ஐயோ என்று சொல்வேனோ
ஐயையோ என்று சொல்வேனோ

என்ற சூர்ப்பனகையின் புலம்பல் இராவணன் வாயிலும் வெளிப்படுகிறது. சகோதரியின் பேச்சைக் கேட்டு சீதையை எடுத்து வந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் இராவணன் எண்ணத் தொடங்குகிறான். வெற்றியைத் தவிர வேறு ஒன்றும் அறியாத இராவணனுக்குத் தோல்வியைப் பற்றியும் ஒர் எண்ண ரேகை மனதில் ஒடுகிறது.

ஒளியும் இருளும் ஓடி விளையாடுமிப்புவியில்
வெற்றியும் தோல்வியும் வெறும்
வார்த்தைகளன்றோ

என்கிறான் இராவணன். சூர்ப்பனகை நீயும் நானும் சாய என்றாள். இராவணன் தோல்வி பற்றி எண்ணுகிறான். ஒரு வினோதமான காட்சி அவன் மனதில் உருப் பெறுகிறது.

ஏகாந்தப் பெருவெளியிலே
ஒரு கள்ளச் செடி பூத்து நிக்குது
அது வெள்ளை வெளேரென்று
முளைத்து நிக்குது

இராவணனின் ஆணவத்தில்,

அன்று முதல் இன்று வரை
ஆதி மூலம் ஒரு கழுமலம்
வேத முதல்வன்
ஒரு தீராத வியாதி.

என்கிறான் இராவணன். இராவணனிடத்தும் கொஞ்சம் இரணியனின் சாயல் படியுமாறு காட்டுகிறார் நகுலன். வேத முதல்வன் ஒரு தீராத வியாதி என்றால் வேத முதுல்வன் யாரைப் பிடித்த தீராத வியாதி? தீராத வியாதி என்று ஒப்புக்கொண்ட பிறகு ஒருவர் என்ன செய்யமுடியும்? வியாதி தீராதென்றாலும் அதனால் ஏற்படும் சிறுசிறு தொல்லைகளை நோயாளி குணமாக்கத்தானே வேண்டும்! சூர்ப்பனகையைப் போலவே இராவணனையும் உளறல் பற்றிக்கொள்கிறது. இராமனைத் ‘தாரமிழந்த ஒரு தனி வீரன்’ என்கிறான் இராவணன். சீதையைப் பற்றி சகோதரி வாயிலாக அப்போதுதான் அவன் கேட்டிருக்கிறான். அதற்குள் இராமன் எப்படித் தாரம் இழந்தவன் ஆவான்? நகுலன் இந்தக் கவிதையை முன்னும் பின்னுமாக நகர்த்தி அமைத்திருக்கிறார். நடந்து முடிந்தது முதலில் திரைப்படத்து உத்திபோல சொல்லப்படுகிறது. காலமாற்றத்தை இடம் மாற்றி அமைப்பதால் கவிதையில் கூற்றுகள் அதன் வெளிச்சத்தைப் பெறுகின்றன. சீதையைத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்ததற்கு வேறொரு காரணம் ஒன்று தன்னிடம் உண்டு என்பது போலப் பேசுகிறான் இராவணன்.

இவளறிவாளோ
என் உள் மனம்
செல்விதம்?

இராவணன் தன் உள் மனதில் தான் மட்டுமே அறிந்த ரகசியம் இருப்பது போல் பேசுகிறான். நான்காம் பத்தியில் இந்தக் கூற்று வெளிப்படும்போது இராவணன் ஒரு காமுகனாக மட்டும் இல்லை.

அன்று முதல் இன்று வரை
இராம இராவண யுத்தம்
சீதை நிமித்தம் என்ற போது

என்ற இராவணன் கூற்று சோகத்தை உள்ளடக்கியிருக்கிறது. இராமனும் இராவணனும் பிறவி தோறும் சீதைக்காகப் போராடுகிறார்கள். எந்த ஒரு பிறவியிலும் சீதையை இராவணன் அடையப்போவதே இல்லை. ஆனால் அதற்காக இராவணன் சீதையைச் சிறையெடுப்பதை நிறுத்தப்போவதுமில்லை. இராவணனிடம் போரிடுவதை இராமன் கைவிடப்போவதில்லை. இராவணனுக்கு இது ஆசைப்போர். பேராசைப்போர். இராமனுக்கு இது உரிமைப் போர். இந்தப் போர் காலம் காலமாகத் தொடர்வதை நகுலன் சொல்கிறார்.

மேல்நின்ற வானில்
சந்திரனும் சூரியனும்
மாறி மாறி வர
இருளும் ஒளியும்
மாறி மாறி விளையாடும்
இப்புவியில்

என்று மூன்று கவிதைகளில் முதல் கவிதை முடிகிறது. இராம இராவணப் போர் இந்தப் புவியில் இருளும் ஒளியும் மாறி மாறி விளையாடுவது போலத்தான் என்கிறார் நகுலன். இராவணனுக்கு சீதை திருடி வரப்பட்ட பொருளாகக் கிடைக்கிறாள். இராமனுக்கு அனுபவிக்கக் கிடைத்த பொருளாகத் தொலைந்துபோனாலும் மீண்டும் கிடைத்துவிடுகிறாள். சீதையின் மீது இராமனுக்கு உள்ள உரிமையையும் இராமன் மீது சீதைக்குள்ள அன்பையும் உறுதிப்படுத்தத்தான் இராமன்-சீதை தம்பதியர்க்குக் குழந்தைகளைப் பிறப்பிக்கிறது இராமாயணம். இராவணனோ பெரிய போராளியான இந்திரஜித்தை, வளர்த்த மகனாகப் பெற்றவன்.

இரண்டாவது கவிதை ‘கிளிமுன் வைத்துப் பாடியது’ என்று பெயர் பெற்றிருக்கிறது.

பச்சைக்கிளியே! பச்சைக்கிளியே!
இச்சகம் முழுவதும் நீ பறந்து திரிந்து வருவது
இச்சையெல்லாம் உள்ளபடி அறிந்தால்
ஈசனடி சேரலாம் என்று சொல்வதற்கோ?

கவிதையின் முதல் நான்கு அடிகள் சற்று திகைப்பையும் பயத்தையும் நமக்குத் தருகின்றன. இச்சையெல்லாம் உள்ளபடி அறிந்தால் கிடைக்கிற பயன் ஈசன் அடி சேரலாம் என்பதைக் கிளி பூமி எங்கும் சொல்கிறதாம். இச்சையெல்லாம் உள்ளபடி அறிந்தால் ஈசனடி சேர்வதைத் தவிர வேறு பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது. பச்சைக்கிளியை அழைத்துப் பேசுவது ஒரு பெண் என்று பின்னால் அறிய முடிகிறது. ‘சொல்வதற்கோ’ என்ற கேள்வி கிளியின் செய்கையைக் கண்டிப்பதாகத் தெரிகிறது. ‘ஈசனடி சேர்தல்’ என்ற வழக்கு இறந்துபோவதைத்தானே நாகரிகமாகக் கூறுகிறது? மங்கல வழக்காக ஈசனடி சேர்தல் கூறப்படுகிறது. ஆக இந்த முதல் நான்கு வரிகள் ஒரு பெண் ஆத்திரத்தில் பேசுகிறாள் என்று தெரிவிக்கின்றன. ஆசையை இன்னதென்று அறியநேர்ந்தால் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்வதற்குத்தானா நீ சுற்றிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள்படுகிறது இக்கேள்வி.

அம்மோன ரூபன் முழு முதல் ஞானி
கேட்கச் சொல்வாய்

என்று கிட்டத்தட்ட ‘தட்சிணாமூர்த்தி’ என்ற பெயரைக் குறிப்பிடுகிறது கவிதை. அம்மோன ருப முழுமுதல் ஞானி என்னும் வர்ணிப்பு கேலியாகவும் தெரிகிறது. அறிவுடையதாக இருந்தபோதிலும் முக்கியமாக ஏதோ ஒரு விஷயத்தில் அவர் மௌனமாக இருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறது கவிதை வரி.

கல்மனப் பெண்டிரும்
இல்லறம் சிறக்க
ஒல்லைபோம் என்று சொல்லி நிற்க
சட்டென்று அவர் சென்றிடுவாரோ
பச்சைக்கிளியே! பச்சைக்கிளியே!

(எங்கள்) குடும்பம் சிறப்படைய வேண்டும் என்றால் நீ விரைவாகப் போய்விட வேண்டும் என்று கல்மனப் பெண்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு அவர் போய்விடுவதா என்று கேட்கிறாள் நாயகி. ‘கல்மனப் பெண்டிர்’, ‘ஒல்லைபோம்’ என்ற தொடர்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன.

தான் மூலம் உருவாகும் நானும் தான்
தான் தோன்றித் தம்பிரான் தோழன்
என்றுணர்ந்தேன் பச்சைக் கிளியே.

தான் தோன்றித் தம்பிரான் – அதாவது மௌனமாகப் போன நாயகனுக்குத் தோழன் போலத்தான் நானும் என்னை உணர்ந்தேன். ‘அவரைப் போகச் சொன்னார்கள். அவர் மௌனமாய்ப் போய்விட்டார். அவருக்குத் தோழன் போல என் மனமும் மௌனமாக உள்ளது’ என்கிறாள் நாயகி.

திடீரென்று கவிதை காகிதம் குறித்துப் பேசுகிறது.

இந்தக் காகிதங்கள் என்ன சொல்லும்
காகிதம் கூறுமோ?
காலம் கரையுமோ
வேதமோதும் வேளை வருமோ?

கடிதம், குறிப்பிடப்பட்ட தேதியின் வருகை மற்றும் திருமணம் என்ற குறிப்புகள் உடையவை இவ்வரிகள்.

நகுலனின் கவிதை தன் குணாதிசயமான பைத்திய நிலையை எட்டுகிறது. இந்த நிலையில் கவிதை தன் பொருட் செறிவை சந்தத்தில் மறைத்துக்கொள்ள முயல்கிறது.

எல்லாம் தான் எல்லாமுந்தான்
தானே தான் தன்னானத் தானே தான்
தான் தான் தான் தன்னானத்
தானே தான்.

யமகம், மடக்குப் போல சொல்லைப் பிரித்துப் பொருள் தேடவைக்கிறது கவிதை. ஏன் இப்படிக் கவிஞர் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தை ரசகியமாகச் சொல்ல விரும்புகிறார் கவிஞர். அதனால் அப்படி எழுதுகிறார். ரகசியங்கள் ஜாடைமாடையாகத்தானே தெரிவிக்கப்படுகின்றன. அதனால்தானே உள்ளுறை உவமம் என்ற உவம நிலை பண்டைய இலக்கியத்தில் கற்பிக்கப்பட்டது. இந்த சந்தக் கூத்து பின்னால் சொல்லப்போகிற செய்தியை முன்னுரைப்பது போலவும் இருக்கிறது.

எங்களூர் திங்களூர்
அந்த வண்டியிலே
அந்த ரெட்டை மாட்டு வண்டியிலே
மாடு ரெண்டும் சண்டி யென்றாலும்
பூதப் பாண்டி விட்டு
நாகர் கோவில் தாண்டி
பரமன் படுத்துறங்கும்
அந்தத் திருவனந்தபுரம்
வந்து சேர்ந்தேன்
சேர நாட்டின் தலைநகரமாம்
அந்தத் தலைநகரம் வந்து சேர்ந்தேன்
வந்து சேர்ந்தேன்.

அந்தப் பகுதியின் நகுலன் நாயகனுக்குத் தன் சுயசரிதையின் ஓர் அம்சத்தை இரவல் தருகிறார். இரட்டை மாட்டு வண்டியைக் குறிப்பிடுவதால், அதிலும் மாடுகள் சண்டி மாடுகள் என்பதால் பயணம் கஷ்டமானதாக இருந்தது என்று கூறுகிறார். அடைந்த நகரம் சேரநாட்டின் தலைநகரம் என்பது காலமயக்கத்தைத் தருகிறது. திருவனந்தபுரம் சேரநாட்டின் தலைநகரமல்ல. கேரள மாநிலத்தின் தலைநகரம் மட்டுமே. ஆனால் நாயகன் மனதில் அது சேர நாட்டின் தலைநகரமாகவே படுகிறது. திருவனந்தபுரம் வந்தடைந்ததில் நாயகன் மிகவும் உற்சாகமடைகிறான். ஏனென்றால் அவனது வாழ்க்கையைப் பெருமளவு பாதிக்கப்போகும் சுசீலா வாழும் ஊரல்லவா திருவனந்தபுரம்! இருந்தாலும் இப்பகுதியில் விதிவசப்பட்டது போல் ஒரு குரலும் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

அழகெல்லாம் ஒருங்கே கண்டால்
யாவரே ஆற்றவல்லார்
சேர நன்னாட்டு நன்னங்கையன்றோ
சுசீலா

அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் என்ற வரி சீதையை நினைவூட்டி சுசிலாவை சீதையாகவும் திருவனந்தபுரத்துக்கு நாயகன் வந்தது இராமன் மிதிலைக்கு வந்தது போல என்றும் ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. ஆனால் தொடர்ந்து நிகழ்ந்தது உவப்பைத் தருவதாக இல்லை. மனமெனும் ஒருத்தியைத்தான் வதுவை புரிய முடிகிறது. நாயகனின் வாழக்கை கடினமாகிவிட்டது. எப்படியோ நாயகியுடன் உறவு மேற்பட்டு அது நீங்கிப் போய்விட்டது.

போடி என்று சொல்விட்டு
வாடி என்று கட்டித் தழுவி
நின்ற நிலை தடுமாறும்
விந்தை மனிதர் சிலர்.

நகுலன் காட்டும் விந்தை மனிதன் ஒருத்தியைப் போடி என்று சொல்லிவிட்டு ஒருத்தியை வாடி என்று கட்டித் தழுவியிருக்கிறான். வாடி என்று கட்டித் தழுவப்பட்டது சுசீலாவா என்று தோன்றுகிறது.

மனமெனும் ஒருத்தியை வதுவை புரிந்து
மாளிகைகள் கட்டி
வழிகள் பல சென்று
ஒரு நடுவில் திண்டாடி நின்றான் நகுலன்.

இந்தப் பகுதிக்குப் பிறகு நாயகன் எழுத்தறிவிப்பு பற்றி பேசுகிறான்.

எழுத்தறிவித்தவன் இறைவனென்றால்
வேளை வரும்போது ஞானம் வருமோ.

எழுத்தறிவித்தவன் பற்றிப் பேசப்படுவதால் நாயகனின் வாழ்வில் ஓர் ஆசிரியரும் குறுக்கிட்டிருக்கிறார் என்ற தெரிகிறது. யாருக்கு ஞானம் வர வேண்டிய அவசியமிருக்கிறது? அந்த ஆசிரியருக்குத்தான் போலும்! என்ன ஞானம் வர வேண்டும்? ஆரூட ஞானமா?

அற்புத திருவிளையாடல்கள்
அவை மூலம் வரும்
ஆரூட ஞானம்

என்னென்னவோ காரியங்கள் செய்து – அற்புதத் திருவிளையாடல்கள் என்ற தொடர் நிகழ்ச்சிக் குறிப்பாய் வந்திருக்கிறது – அவை மூலம் அந்த யூகங்கள் ஆரூடம் என்று நிகழ்ச்சியாகக் குறிப்பிடலாம்.

ஆதிமூலம் அறியும்
அந்தாதிப் பாடல் என்பதால்
அடிமுடி தொடரும்

என்ற வரிகள் தொடக்கத்திலிருந்து அறியப்பட்டுவிட்டது போய் இன்று பின்னர் தொடரும் அந்தாதிப் பாடல் போல நாயகனின் நட்பு நாயகியிடம் உள்ளது. இந்த நட்பு மனத்துள் ஜனிக்கிறது (மனை ஜனை). மனதிலேயே பகையால் எதிர்கொள்ளப்படுகிறது. பகை தாயாதிகளால் நேர்கிறது. யாருடைய தாயாதிகள் – நாயகியின் தாயாதிகள் என்றுதான் கொள்ள வேண்டும். இருந்தாலும் நாயகியோடு காம நுகர்வு நாயகனுக்குக் கிடைக்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்குக் குறிப்புகள் கவிதையில் உள்ளன. இந்தப் பகுதியில் நாயகன், நாயகி, இருசாராரின் உறவுகள், நட்புகள் வருவதோடு முன் வைத்து பேசப்படுகிற கிளியும் பலமுறை குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும் நாயகனுக்குக் கிளிமேல் பாராட்டத்தகுந்த அன்பு உண்டென்று தெரியவில்லை.

காதிதம் தெரியாமல் அக்‍ஷரம் சிதையாமல்
பாடம் சொல்லும் பச்சைக் கிளியே
நின் மொட்டைத் தலையும்
பச்சை நிறமும் சிவப்பு மூக்கும்
என்ன சொல்லும்?

கிளியின் அறிவின்மையைக் குறை கூறுவதோடு நில்லாமல் அதன் தலை மொட்டையாய் இருக்கிறது என்று வேறு ஏளனம் செய்கிறான் நாயகன். ஆனால் அடுத்து வரும் பல வரிகளில் கிளியைப் பற்றி நிறையப் பேசுகிறான் நாயகன். ‘அப்பா’ என்ற உறவுப் பெயர் பலமுறை எழுப்பப்படுகிறது. ஆனால் இறுதியில்

காதலென்ற உருவங் காட்டி
மறைந்து கரைந்து
திரிந்து
காண்பதனைத்தும்
வெறும் சூன்யம் என்று சொல்லி
மறைந்த சுசீலா
என்றவள் தானும்
ஒரு தந்திரமோ ஒரு மந்திரமோ…

சுசீலா மறைந்துவிட்டாள் என்று நாயகனிடம் ஒரு பெண் பொய் (?) சொல்லிவிட்டிருக்கிறாள். அதுவும் அவளிடம் காதல் என்பது உள்ளீடற்றது என்று சொல்லி மறைந்துவிட்டாள். பிறகு நாயகன் தானும் ஒரு பச்சைக்கிளிபோல் ஆகிவிடுகிறான்.

நிழல் வரும் நேரம்
நாளை புலரும்
என்று சொல்லி மறைந்த
அந்தக் கிளியை
இன்றும் தேடித் திரிகின்றேன்
தேடின கண்கள் தரிசிக்கும்
நாடின பாதங்கள் நடைவரை செல்லும்

நாயகனுக்கு நல்லவேளை நா உறுதி பிறக்கிறது. நாயகியைப் பார்க்க முடியும். அவள் கோயில், அவன் வாழும் ஒரு கோயில்தானே. நடைவரை செல்ல முடியும் என்ற உறுதி அவனுக்குப் பிறக்கிறது. நிகழ்காலமாக எதிர்காலம் வழுவமைதி பெறுகிறது.

மூன்றாம் கவிதை கும்பகர்ணனின் சிறப்பைப் பேசுகிறது. அப்பகுதி திறமையாக எழுதப்பட்டிருக்கிறது. அழகான பகுதிகள் இதில் உள்ளன. ‘உன் வாழ்க்கையில் நீ எதைக் கண்டாவது மோகித்திருக்கிறாயா?’ என்று விபீஷணன் கேட்கப்படுவது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியை நகுலன் இறுதியாக வைத்திருப்பது இராம இராவண யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை வலியுறுத்தத்தான் போலும்.

நகுலனின் ‘மூன்று’ என்ற கவிதை ஜாடைமாடையாகக் கூறப்பட்ட சுய சரிதையோ? தொடர்ந்து சீதைக்காக நடக்கும் இராம இராவண யுத்தத்துடன் சுசீலாவுக்காக நாயகன் யாருடன் போராடினான்?

(‘இருவாட்சி’ 2013 பொங்கல் சிறப்பிதழில் வெளியானது)