கண்ணீரைக் கணக்கிட்டவர்

புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான க.நா.சுப்ரமணியம் 14.5.1939 அன்று ‘சூறாவளி’ என்ற இலக்கிய இதழில் மயன் என்ற புனைபெயரில் தமது முதல் வசன கவிதையான ‘மணப்பெண்’ என்ற கவிதையை வெளியிட்டார். இந்தக் கவிதை ‘சூறாவளி’யில் வெளியானதைத் தொடர்ந்தே வசன கவிதை பற்றிய விவாதங்கள் எழுந்தன. இதில் மற்றொரு முன்னோடியான கு.ப.ரா. கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் ந. பிச்சமூர்த்தி க.நா.சு.வின் ‘சூறாவளி’யில் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. க.நா.சு. எழுப்பிய விவாதத்தின் பலன்களில் முக்கியமான ஒன்று பாரதியின் புதிய வகையான படைப்புகளுக்கு ‘வசன கவிதை’ என்ற பெயர் கிடைத்ததுதான். ஆனால் ந. பிச்சமூர்த்தியும் க.நா.சு.வும் தமிழின் புதிய கவிதை முயற்சிகளைப் பற்றி வேறு வேறான கருத்து கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. க.நா.சு.வுடன் தொடக்கத்திலிருந்தே விலகி நிற்கும் ஒரு போக்கைப் பிச்சமூர்த்தி கடைபிடித்திருக்கிறார். க.நா.சு.வும் பிச்சமூர்த்தியின் புதிய கவிதை முயற்சிகளில் நம்பிக்கையற்றவராக இருந்திருக்கிறார். ‘புதுக்கவிதை’ என்று பெயரிட்டு 1958 இறுதியில் க.நா.சு. எழுதிய கட்டுரையில் க.நா.சு. பிச்சமூர்த்தி பற்றி ஒரு தடவைகூடக் குறிப்பிடவே இல்லை. பிச்சமூர்த்தி எழுதியவை புதுக்கவிதைகள் அல்ல என்றே அவர் சொல்கிறார்.

‘சீர், தளை என்பது வரையில் கட்டற்றதுதான் என்றாலும் கவிதைப்பொருள், நயம், சந்தம் இவை பற்றிய வரையில் பழமை பாராட்டுபவர் பிச்சமூர்த்தி. ஒரு சாராருக்குப் பழக்கமான கருத்துக்களையே புதுமெருகிட்டுத் தருகிறார் என்பதனால் இதைப் புதுக்கவிதை என்று சொல்வதற்கில்லை என்றுதான் தோன்றுகிறது.’

எனவே க.நா.சு. வேறு விதமான கவிதை மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார் என்பது தெளிவு. 1958ம் ஆண்டு ‘சரஸ்வதி’ வெளியிட்ட க.நா.சு.வின் கட்டுரை புதுக்கவிதைக்கான இயக்க அறிக்கை என்பதை ‘சரஸ்வதி’யின் ஆசிரியர் உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை. க.நா.சு.வின் புதுக்கவிதை அறிக்கை வெளியான பிறகு அல்லது உடன் நிகழ்வாகவே ‘எழுத்து’ பத்திரிகையின் புதிய கவிதை முயற்சிகள் அமைந்தன என்று கண்டுபிடித்துக்கொள்ளலாம். ‘வசன கவிதை’ என்ற பெயரைக் கைவிட்டு எழுத்து க.நா.சு.வின் புதுக்கவிதை என்னும் பெயரை ஸ்வீகரித்துக்கொண்டது. ‘எழுத்து’ முதல் இதழில் வெளியான ‘கவிதை’ என்ற கவிதை க.நா.சு.வுக்குக் கவிதை முயற்சியில் புதியன செய்ய வேண்டும் என்ற ஆவலும் திட்டமும் இருந்ததைக் காட்டுகிறது. அந்தக் கவிதை மூலம் இடைக்காலத்தில் தடைப்பட்டிருந்த கவிதை முயற்சிகளைத் தொடர அவர் எண்ணியிருக்க வேண்டும். ‘எழுத்து’ பத்திரிகையில் புதுக்கவிதை முயற்சியைச் செய்த க.நா.சு.வுக்குச் செல்லப்பாவினால் நஷ்டம்தான் ஏற்பட்டது. ‘எழுத்து’ பத்திரிகை முதல் இதழுக்குக் கவிதை, கட்டுரைகள் எதுவும் பிச்சமூர்த்தி தரவில்லை. அவரிடம் கொடுப்பதற்குப் புதிதாக ஒன்றும் அப்போது இல்லை. ஆனால் க.நா.சு. புதிதாகக் கவிதையைக் கொடுத்திருக்கிறார். செல்லப்பா பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற கவிதையை 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிதழில் மறுபிரசுரம் செய்தார். இதனால் என்ன ஆயிற்று, பிச்சமூர்த்திக்குக் கிடைத்த மறுவாழ்வு க.நா.சு.வுக்கு மறுக்கப்பட்டததில் முடிந்தது. 1958ல் சரஸ்வதி இதழில் தொடங்கி ‘எழுத்து’வில் தன் முயற்சியைத் தொடர்வதாக எண்ணியிருக்க வேண்டிய க.நா.சு.வுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். பிச்சமூர்த்திதான் மீண்டும் புதுக்கவிதையை உயிர்ப்பித்தது போல செல்லப்பா காட்டினார். பிச்சமூர்த்தியின் கவிதையைப் படித்துவிட்டு வெளியிட்ட சுந்தர ராமசாமியின் வாசக எதிர்வினை இதைத் தெளிவாக்குகிறது. க.நா.சு. ஏமாளியானார். அவர் தமது வாழ்க்கையில் எத்தனையாவது தடவை ஏமாளியானார் என்று தெரியவில்லை. ஏனென்றால் க.நா.சு.வின் கவிதையில் ஏமாற்றப்படுவது என்பது பல்லவி போலத் திரும்ப வருகிறது. இதைப் பிறகு பார்க்கலாம்.

புதுக்கவிதை என்ற அறிக்கைக் கட்டுரைகூட அதே பெயரில் மறுபிரசுரம் ஆகவில்லை. ஒரு பதிப்பில் அது முன்னுரை என்று பெயரிடப்பட்டது. மற்றொன்றில் வேறொன்றாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கட்டுரை பொன்விழா கொண்டாடும் இந்த ஆண்டில் க.நா.சு.வை எந்த அளவுக்குப் பின்வந்த ஆண்டுகள் பின்பற்றின என்பதைப் பார்க்க வியப்பாக உள்ளது. க.நா.சு.வின் புதுக்கவிதை கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டுக் கவிஞர்களின் பட்டியல் இது.

1. வால்ட் விட்மன்
2. ரில்கே
3. போதலேர்
4. வலெரி
5. மல்லார்மே
6. ரம்போ
7. எஸ்ரா பௌண்ட்
8. எலியட்
9. யேட்ஸ்
10. டைலன் தாமஸ்
11. ஹைகூ கவிஞர்கள்

இந்தப் பெயர்களை வெறுமனே உதிர்த்தவர் இல்லை க.நா.சு. அவர்களை அவர் படித்தவர். ஆனால் பிச்சமூர்த்தி என்ன படித்திருந்தார்?

பாரதியார் வால்ட் விட்மனைக் குறிப்பிட்டார். பிச்சமூர்த்தி மிகவும் காலம் தாழ்ந்து விட்மனையும் பாரதியையும் குறிப்பிட்டார். தமிழின் நவீன கவிதை முயற்சிக்குப் புறத் தூண்டுதலே ஆங்கில அமெரிக்க இலக்கியத்திலிருந்துதான் கிடைத்தது. 1958ல் மீண்டும் கவிதையைத் தொடும்பொழுது மற்றவர்கள் வாளாவிருக்க க.நா.சு. ப்ரெஞ்ச் முயற்சிகளையும் குறிப்பிட்டுப் பேசுகிறார். அவர் பட்டியலில் போதலேர், ரம்போ, வலெரி, மல்லார்மே இடம்பெறுவதால் அவருடைய சிந்தனை விரிவடைந்திருப்பது தெரிகிறது. எஸ்ரா பௌண்ட் படித்ததின் விளைவாக ஹைகூ கவிதைகளையும் அவர் அறிந்துகொண்டிருக்கிறார். பாரதியார் ஹைகூக்களை அறிந்துகொண்டதிலிருந்து வேறுபட்டது க.நா.சு. ஹைகூவை அறிந்துகொண்ட விதம். 1959ல் க.நா.சு.வின் அளவுக்குக் கவிதையை அறிந்துகொண்டவர்கள் தமிழில் வேறு எவருமில்லை என்பது உறுதி. பால் வலெரி, மல்லார்மே, எலியட் இவர்களைக் குறிப்பிட்டதின் மூலம் க.நா.சு. அபர்க்ரோம்பி, காலரிட்ஜ் முதலானவர்களுக்குப் பிறகு தமிழில் விமர்சனத்தை நகர்த்தியவர் என்றும் கொள்ள வேண்டும். ஆனால் க.நா.சு. ஸம்ஸ்கிருத இலக்கியச் சாதனையாளர் பக்கம் மெல்ல நகர்ந்திருக்கிறார். அனந்தவர்தனர், அபிநவ குப்தர், குந்தகர் இவர்களைப் பற்றி அவர் அறியத் தொடங்கினார். செல்லப்பாவின் எழுத்து 1959க்குப் பிறகுதான் க.நா.சு.வால் முன்னமேயே அறியப்பட்டிருந்தவர்களை அறியத் தொடங்குகிறது. 1959ல் செல்லப்பாவுக்கு என்ன தெரிந்திருந்தது?

எழுத்துவின் நோக்கம் விமர்சனத்துக்கே தவிர சிறுகதைக்குக் கூடக் கிடையாது. அப்புறம் கவிதைக்கு அதுவும் புதுக்கவிதைக்கு எப்படி ஈடுபாடு இருக்கும். எனக்கே கவிதை நோக்கு அவ்வளவாக உருவாகவில்லையே

என்பது சி.சு. செல்லப்பாவின் ஒப்புதல் உரை.

கவிதையைப் பற்றி என்ன தெரிந்திருந்ததோ இல்லையோ, செல்லப்பா பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் சில நுட்பங்களைக் கற்றிருந்தார். தன்னுடைய பத்திரிகையின் முதல் இதழில் தனது ஆசிரியனின் படைப்பு இடம்பெறாமல் போவதை அவரால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். பிச்சமூர்த்தியின் கவிதை ‘எழுத்து’ முதல் இதழில் இடம்பெறாமல் போனால் அவருக்கு அடுத்த மூத்த படைப்பாளியான க.நா.சு.வின் படைப்புதானே கவிதைதானே கவனம் பெறும். 1958ம் ஆண்டின் இறுதியிலேயே க.நா.சு. தன் புதுக்கவிதையைத் தொடங்கிவிட பிச்சமூர்த்தி பின்தங்கிவிட்டது போல் அல்லவா தோற்றம் தரும். 1958ம் ஆண்டின் இறுதியில் க.நா.சு. அறிக்கை வெளியிட்டார். அடுத்த மாதமே 1959 ஜனவரியிலேயே பிச்சமூர்த்தியின் கவிதை வெளிவந்துவிடுகிறது. இந்த ஏற்பாட்டில் எதுவும் இடைவெளி இருப்பது போல தெரியாது செல்லப்பா நியாயமாக நடந்துகொண்டார். ஆனால் அதில் க.நா.சு. நஷ்டப்பட்டார் என்று மீண்டும் ஒருமுறை கூற வேண்டியுள்ளது. ‘எழுத்து’ பத்திரிகையிலிருந்து இன்றைய நாலாம் மனிதன் வரை அரசியல் நடைபெறுவது சிறு இதழ்களில் இயல்பாகிக்கொண்டுவருகிறது.

க.நா.சு.வுக்கு எல்லோரும் நண்பர்கள். அவர்களேதான் அவரது எதிரிகளும் கூட. அவரைப் பிடிக்காதவர்கள் பல பேர் உண்டு. அவர்கள் எல்லா பத்திரிகைகளிலும் இருந்தார்கள். ‘எழுத்து’ அதற்கு விதிவிலக்கல்ல. க.நா.சு.வால் மிகவும் மதிக்கப்பட்ட புதுமைப்பித்தன்கூட. அவர் க.நா.சு.வின் நண்பர்தான். ஏன், மௌனிகூடக் க.நா.சு.வுடன் பகைமை பாராட்டியவர்தாம். க.நா.சு.வின் விமர்சனக் கருத்துகள் பலருக்கு முள்ளாகக் குத்தின. தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஒரு பதவிக்கு அவர் போட்டியிட்டபோது அவரைத் தீய சக்தி என்று வர்ணித்துத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்கள் உண்டு. அவர் வெற்றி பெறக் கூடாதென்று பாடுபட்டவர்கள் உண்டு. க.நா.சு. அந்தத் தேர்தலில் தோற்றுப்போனார். தமிழ் ஆராய்ச்சியாளர்களில் வையாபுரிப் பிள்ளையைத் தமிழ் இனத் துரோகி என்று சிலர் சொல்ல நான் கேட்டிக்கிறேன். அதே போலத்தான் சிலர் க.நா.சு.வைக் கருதினார்கள். அவர் தமது கருத்துகளை தைரியமாகக் கூறினார். என்னுடைய தலைமுறையினரில்கூட ஒரு சிலர் அவரை ஏசினார்கள். ஆனால் அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, ‘நான் என் கருத்தைச் சொல்கிறேன். உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுங்கள்’ என்றார்.

க.நா.சு.வின் கவிதை அவர் வாழ்ந்துவந்த காலத்தைப் பிரதிபலித்தது. தன் கவிதைகளில் எழுத்துவகைப் பற்றி எழுதினார். தன் நண்பர்களைப் பற்றி எழுதினார். இதில் அவர் சங்ககாலத்துக் கபிலரை நினைவூட்டினார். புதுமைப்பித்தனைப் பற்றி அவர் எழுதியுள்ள கவிதை எளிமையாகத் தொடங்கி, வளர்ந்து, வளர்ச்சி ததும்பி, சோகத்தில் முடிகிறது.

‘புதுமைப்பித்தன் இருந்த வீட்டைத் தாண்டிச் செல்லும்போது’ என்று தொடங்குகிறது கவிதை. அவருடன் இரவு முழுவதும் பேசிப் பொழுதைக் கழித்ததைக் கூறிக்கொண்டிருக்கும்போதே

ரெண்டு காபிக்குக் காக இருக்கிறதா
என்று பார்த்துக் கொண்டு

என்று தனது பெறுமானத்தையும் கூறுகிறார் க.நா.சு. இந்தப் பேச்சின்போது சாட்சி பூதமாக இருந்த மூன்றாவது ஆள் அந்த வீட்டுச் சுவர்கள்தான் என்கிறார் க.நா.சு.

இப்போது இந்த வீட்டுக்குள்ளே போனால் எங்கள்
பேச்சைக் கேட்டிருந்த அந்த சாட்சி பூதமானவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பிச் சொல்லுமா?

‘குருகும் உண்டு யான் மணந்த ஞான்றே’ என்றது போல
இந்தக் கவிதையில் சுவரும் உண்டு என்கிறார் க.நா.சு.

…. சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை எழுதலாம். சுவர்கள் பேசாது
நன்றி கெட்ட சுவர்கள். அவை வீட்டுக்
காரன் கட்சிதான்.

என்கிறது கவிதை. சுவர்கள் பேசாது என்றாரே என்று பார்த்தால் அவை அவரிடம்தான் பேசாது. அதாவது வாடகைக்கு இருப்பவரிடம்தான் பேசாது. ஆனால் வீட்டுக்காரரிடம் பேசும். ஏனென்றால் அவை வீட்டுக்காரன் கட்சி என்கிறார் க.நா.சு. அருமையான கவிதை. க.நா.சு. சுவர் பற்றிக் குறிப்பிட்டது அசலான தமிழ் மரபு என்று கூறினால் தவறில்லை. கவிதையின் பெயர் புதுமைப்பித்தன் என்றிருந்தாலும் உண்மையில் அது அவரது வீட்டைப் பற்றியது. அந்த வீடு திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ளது.

க.நா.சு. பேச்சின்பத்தை விரும்பியவர். அதாவது பயனுள்ள பேச்சின் இன்பத்தை. புதுமைப்பித்தன் எப்போது கதை எழுதுவதை நிறுத்தப்போகிறார் என்று கேட்டாராம் ரசிகமணி டி.கேசி. ஆனால் அவரது பேச்சைக் கேட்கப் புதுமைப்பித்தனோடு க.நா.சு. சென்றிருக்கிறார். ரசிகமணி க.நா.சு.வையும் கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் அதைக் க.நா.சு. பொருட்படுத்தவில்லை. க.நா.சு.வுக்கு பாஸ்கரன் என்ற நண்பர் ஒருவர் உண்டு அவர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். ஒரே ஒருமுறை இவர் பேச்சை நான் கேட்டிருக்கிறேன். க.நா.சு. பாஸ்கரன் இறந்ததைக் கேட்டு மிகவும் வருந்தியிருக்கிறார். அவர் மறைவைக் குறித்து ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார்.

கேட்கக் கேட்கத் திகட்டாத
கிளை கிளையாக் கிளைகள் துளிர்த்த
புல்லிதழிலிருந்து புல்லிதழுக்குத் தாவும்
அத்தனை வெட்டுக்கிளி
ஓய்ந்து விட்டது.
சென்னைக்கு இனி சென்றால்
பேச்சின்பத்துக்கு
யாரை நாடிப் போவது.

ஞானக் கிளைகள் என்ற தொடர் பாஸ்கரனின் பேச்சின் ஒரு பண்பைக் குறிக்கிறது. ஒரு செய்தி இன்னொரு செய்திக்குத் தாவுவதை இனிமையான அனுபவமாகக் கூறுகிறார். புல்லிதழ் என்ற சொல் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பை நினைவூட்டுகிறது. பாஸ்கரனிடம் கண்ட அந்தப் பண்பைத் தனது கவிதையில் பயன்படுத்தியிருக்கிறார் க.நா.சு.

கவிகள் சொன்னவும் காதலர்
சொன்னவும் கொள்ளலும் ஆகுமா

என்ற மொழிபெயர்ப்புக் கவிதை வரிகளில் கம்பர் வாக்கான “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ” என்ற வரிகளின் ஓசையைக் கேட்கலாம்.

பட்டுக் கருநீலப் புடவையுமல்ல பதித்த
நல்வயிரமு மல்ல. அண்ணாந்து நோக்கி
அதனைக் கண்ணால் தொட்டுப் பார்த்தால்
அறிவோம். பூச்சி அரித்த, ஒளிப் பூச்சி
அரித்த கறுப்புப் பழக் கம்பிளி அது

என்ற மொழிபெயர்ப்புக் கவிதையில் முதலிரண்டு வரிகளில் பாரதியாரின் வரிகள் ஒலிப்பதைக் கேட்கலாம்.

அணிலாடு முன்றிலில்
அசையாது நீ உட்கார்ந்திருந்தாய்.

‘கடிதம்’ என்ற கவிதையில் இடம்பெறும் ‘அணிலாடுமுன்றில்’ என்ற தொடர் கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து காலவரம்பை அழிக்கிறது. தனக்கு முந்திய கவிதை வரிகளைத் தனது கவிதை வரியில் பொதிந்து வைக்கும் உத்தியை சி. மணியும் தனது கவிதையில் கையாண்டிருக்கிறார். சி. மணி தன் பெயரை வே. மாலி என்று மாற்றி எழுதியபோதும் க.நா.சு.வின் வரி அமைப்பையும் கேலியையும் பின்பற்றினார்.

நட்பைப் பாராட்டிய க.நா.சு. பகைமையை வெளிப்படுத்தவும் தவறியதில்லை. ‘நாவலாசிரியை’ என்ற கவிதையில் பெயர் குறிப்பிடாத ஒரு நாவலாசிரியை பற்றிக் க.நா.சு. பொருமியிருக்கிறார். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இவை.

பிடி சாம்பலில் ஈரம் தோன்றுவதைப் போல
நாவல்களிலும் கவிதை ஈரம் தோன்றி
கண்ணீர்த் துளியை வரவழைக்கும்
வித்தை அவளுக்கு கலபமாகக் கை
வந்து விட்டது. நூறு நாவல்களையும் அவன்
அழுது கொண்டேதான் எழுதினாள்.

அசைவ ஹோட்டலில் சைவ சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வந்ததாக ஒரு கட்டுரையில் எழுதியிருக்கும் க.நா.சு. ஒரு சுவைப்பிரியர். இந்த வகையில் தீபம் நா. பார்த்தசாரதி அவருக்கு நல்ல நண்பர். கி.வா.ஜ.வும்தான். பேராசிரியர் பாஸ்கரனின் சொற்பொழிவு பற்றிக் க.நா.சு. பாராட்டினார். ஆனால் வாகீச கலாநிதி என்ற விருது பெற்ற கி.வா.ஜ.வின் சொற்பொழிவைப் பாராட்டியதில்லை. அதே போலக் கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவையும் ரசித்ததில்லை. கி.வா.ஜ பற்றி அவர் எழுதிய கவிதை இது.

கி.வா.ஜ வை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் அவருக்கு நான்
கடன் பட்டவன் 1938ல்
எனக்கு ராயர் கபேயை
கச்சேரித் தெரு மைலாப்பூரில்
காட்டித் தந்தார். இப்போதும்
பல சமயம் ரவா தோவை சாப்பிடப்
போய் வருகிறேன்.

ஹோட்டல்கள் பற்றிக் க.நா.சு. தன் கவிதைகளில் குறிப்பிட்டிருப்பது புதுமையான விஷயம். தமிழ்நாட்டில் ஹோட்டல் அரசியல் ஒன்று இருந்ததுண்டு. 1924ல் இருந்த பரமேஸ்வர அய்யர் ஹோட்டல் 1974ல் இல்லை என்று ஒரு செய்தியை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அய்யர்கள், கன்னட உடுப்பிக்காரர்கள், மலையாளிகள் மற்றும் சில தமிழ் ஜாதியார்கள் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஹோட்டல் தொழிலை ஆராய்ந்தால் தமிழ்நாட்டின் சமூக அரசியல் விவகாரங்கள்கூட வெளிப்படும். 1950களில் திருவல்லிக்கேணி முரளி கேப் ஒரு ஜாதி விவகாரத்தில் செய்தி படிப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

க.நா.சு.வின் கவிதைகளில் தாய் இடம்பெறுகிறாள். இந்தக் கவிதை நவீன காலத்து மனிதனைக் காட்டுகிறது. ஒருவேளை க.நா.சு. எக்ஸிஸ்டென்ஷியலிஸ உணர்வுடன் இந்தக் கவிதையை எழுதினாரோ என்று தோன்றுகிறது. 70களில் எங்கள் (நான், ஆத்மாநாம், ஆனந்த், தேவதச்சன் முதலியவர்கள்) கவிதைகள் வெளியானபோது கவிதை பற்றிய பிரச்சனை செய்யுள் வாதத்தை விட்டு விலகித் தத்துவப் பிரச்சினையை நோக்கி நகர்ந்தது. அன்னியமாதல் என்ற கருத்தும் மேலெழுந்து வந்தது. ‘கசடதபற’வைச் சார்ந்த இளம் படைப்பாளர்கள் அந்நியப்பட்டவர்கள் என்று ஒரு புறமும் கோபக்கார இளைஞர்கள் என்று ஒரு புறமும் சாடப்பட்டார்கள். க.நா.சு.வின் தரிசனத்தில் சற்று மங்கலாக இருந்த புரட்சி நன்றாகப் பிரகாசிக்கத் தொடங்கியது. ‘கசடதபற’வினர் புரட்சிக்காரர்கள் அல்லர், கலகக்காரர்கள் என்று இடதுசாரிகளால் விளக்கம் தரப்பட்டனர். இந்த சந்தர்ப்பங்களில் சி.சு. செல்லப்பா எதிர்த் தரப்பாக இருக்க, க.நா.சு. இளைய தலைமுறையை ஆதரித்தவரானார். க.நா.சு.வும் தன்னை அன்னியப்பட்டவராக உணர்ந்தவர்தான். அவரது கருத்துகளில் வணிகப் பத்திரிகைகள்-இலக்கியப் பத்திரிகைகள் என்று செய்த பாகுபாடு, பத்திரிகை நடத்துகிறவர்கள் மற்றும் அதில் தன் எழுத்துகள் வெளியிடப்படும் வாய்ப்புகளின் காரணமாக அவற்றை ஆதரித்த எழுத்தாளர்களிடையே உருவான பிளவு க.நா.சு.வைக் கலகக்காரர்களாகக் காட்டின. க.நா.சு.வின் கவிதையில் சில புதிய நிலைபாடுகள் தென்பட்டன. இவை அவருக்குப் பிந்தைய தலைமுறை கற்றுக் கொடுத்தவை.

க.நா.சு.வின் நினைவுப்பாதை என்ற கவிதை இது.

நினைவுப்பாதை

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்து போய் பார்க்க
செத்துக் கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்து விட்டது.
ஆனால்
தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்
என்று
மறுநாள்
பாட்டி
கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.

இந்தக் கவிதை மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் தாய் இறந்ததைக் கூறுகிறது. தாயின் இழப்பு மகனிடம் சரியான அளவில் அல்லது வகையில் துக்கத்தை விளைவிக்கவில்லை என்று பாட்டி கவனித்திருக்கிறாள். அவனிடம் அதை சுட்டிக்காட்டவும் செய்கிறாள். தாயின் உருவம் அடியோடு மறந்து போய்விட பாட்டி சொன்னது அவன் மனதில் படிந்திருக்கிறது. இரண்டாம் பகுதியில் தகப்பன் இறந்துவிட்ட செய்தி சொல்லப்படுகிறது. இந்த முறை தன்னை சரிசெய்துகொண்டு அவன் துக்கப்பட்டதாகத் தெரியாவிட்டாலும், புரோகிதர் பாராட்டும்படி கருமத்தில் கண்ணாக இருந்திருக்கிறான். இரண்டாவது பகுதி:

தகப்பன் இறந்த போது
சாக வயது வந்துவீட்டது
கருமத்தில் கண்ணாக
இருந்தது கண்ட புரோகிதர்
என்ன சிரத்தை என் சிரத்தை
என்று வைதிகமாகப் பாராட்டியது
நினைவில் இருக்கிறது.

குப்பையைக் கூட்டி
அப்புறப் படுத்த
உயிரற்ற உடலை
எடுத்தெரிக்க
எத்தனை சடங்குகள்
எத்தனை புராண சப்பைக்கட்டுகள்
என்று நினைத்ததும்
நினைவில் இருக்கிறது.

வைதிகப் புரோகிதர்கள் என்ன சிரத்தை என்ன சிரத்தை என்று பாராட்டியதாகக் கூறுவதில் ஒரு நுண்மை உள்ளதாகப் படுகிறது. அங்கேயும் மகன் துக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக செய்ய வேண்டிய காரியங்களை செய்து கொடுத்தால் விரைவாகத் தன்னை விடுவித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணம்தான் அவனிடம் வெளிப்படுகிறது. தகப்பனின் சவத்தை மகன் குப்பை என்று காண்கிறான். வைதிகக் காரியங்களைப் புராண சப்பைக்கட்டுகள் என்கிறான். இவை தகப்பனார் இறுதிச் சடங்குகளின்போது மகனுக்கிருந்த எண்ண ஒட்டங்கள். மூன்றாம் பத்தியில் மகனின் மனநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது போல் தெரிகிறது.

புத்தென்ற நரகம்
மெய்யோ பொய்யோ
என்று காணும்
நினைவு பெற்று
இருக்கின்றேன்
தெரிந்து சொல்வேன்

தாய் தந்தை இறப்பின்போது தான் நடந்துகொண்ட விதத்தைப் பற்றிப் பிற்காலத்தில் சிந்தித்த ஒருவனின் எண்ணமாக அமைந்தது இந்தக் கவிதை. இருபதாம் நூற்றாண்டில் மனித சரீரம் படும் பாட்டைக் குடும்ப அளவில் வைத்துப் பார்க்கிறது இந்தக் கவிதை. உறவுகள் பலகீனப்பட்டுள்ளன. பற்றுக் கோடுகள் இற்றுவிட்டுள்ளன. முடிவு முடிவற்றதாகத் தெரிகிறது. இந்தக் கவிதையின் தொடக்கத்தில் பேசிய பாட்டி பின்பு மாயமாய் மறைந்துவிட்டதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

சாவு குறித்துக் க.நா.சு. நான்கு கவிதைகள் எழுதியிருக்கிறார். ‘வைகுண்டம்’, ‘இல்லாதது’ என்ற கவிதைகளையும் சாவு பற்றியதுதான் என்று கொண்டால் ஆறு கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.

அழுவதும் சிரிப்பதும் கூட வெற்றிலை போடுவது,
பத்திரிகை படிப்பது போலப் பழக்கத்தினால்
வருகிற காரியங்கள் ஆகிவிட்டன

என்கிறார் ஒரு கவிதையில்.

இயற்கை செத்தவன் இடத்தை இட்டு நிரப்ப
வேறு ஒரு ஆளைத் தேடுகிறது

என்கிறார் ஒரு கவிதையில்.

இத்தனை பேர் செத்திருப்பார்கள் என்று
நான் எண்ணவில்லை என்று ஒரு கவி எழுதினான்.

என்ற ஒரு கவிதை வறட்சியாக சிரித்துப் பேசுகிறது. ‘சாவி’ என்ற தலைப்பிட்ட மற்றொரு நீண்ட கவிதை பிரசங்கம் செய்கிறது. இறந்தார் உலகம் என்ற கருத்தைச் சுற்றி இக்கவிதை வருகிறது. நசிகேதன், டாண்டே, ஷேக்ஸ்பியர், கதே, வர்ஜில், கில்காமெஷ், செங்கிஸ் கான், ஹிட்லர், ஸ்டாலின், கான்யூட் மன்னன், கபிலர், பாரதி என்று பல பெயர்கள் இக்கவிதையில் மிதக்கின்றன.

…. சித்தர்கள் சாவதில்லை
இன்றும் இருக்கிறார்கள் நம்மிடையே நட
மாடுகிறார்கள் கள் குடிப்போர் சங்கத்தை
இயக்குகிறார்கள் என்று நாம் நம்பலாம் தான்.

என்று இடையில் ஒரு விமர்சனச் சிரிப்பு மின்னுகிறது. சர்க்கார் கல்சுரல் டெலிகேஷன், பாஸ்போர்ட், விசா பற்றிப் பேச்சு வருகிறது. பலவிதமான அரசியல் கோட்பாடுகள், நாணயங்கள் எல்லாவற்றையும் கவிதை கடந்து சொல்லிற்று.

சாவு என்றதை சிந்தித்து க.நா.சு. இல்லாதது பற்றியும் சிந்தித்திருக்கிறார். பௌத்தர்கள் ‘அபோஹா’ என்பதைப் போன்றது க.நா.சு.வின் இல்லாதது ஒருவேளை அன்னியம் என்ற அவர்களின் கருத்தைப் போன்றதோ. இல்லாதது என்பது இருந்து இல்லாமல் போனதாகும். இன்மையில் அதன் இருப்பின் ரகசியம் என்ன?

இல்லாததைப் போல
அழகானதொன்றும் இல்லை
இல்லாததைக் கண்
உள்ளவர்களும் காண
முடியாது. விளக்கேற்றியும்
காண முடியாது. இல்லாததால்
உபயோகம் ஒன்றுமில்லை.
அதைப்போல உபயோகமானதும்
ஒன்றில்லை.

என்கிறது க.நா.சு.வின் கவிதை. நமக்குப் பிறந்த உடனேயே இறப்பதற்குப் போதுமான வயசாகிவிடுகிறது என்கிறது ஒரு ஐரோப்பியப் பழமொழி. க.நா.சு. சற்றுக் கூடுலாகவே இவ்விஷயம் பற்றி எழுதிய ஒரு அருமையான கவிதைகூடத் துயரத்தைப் பற்றிப் பேசுகிறது.

கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன

என்று கூறுகிறார். க.நா.சு. இந்தக் கவிதையின் இறுதியில்

கடலில் உதிக்காத கற்பனை ஏது
தரையில் தத்ரூபம் பயிலலாம்
உடலில் போன நிமிஷத்து உருவம்
இவ்விநாடி இருக்காது
அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்டும்
ஸர்ரியலிஸமும்
உதிப்பது கடலிலே

என்கிறார் க.நா.சு. ஓவியக் கலையையும் ஸர்ரியலிஸத்தையும் க.நா.சு. குறிப்பிடுவது கவனிப்புக்குரியது.

வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைக் காட்டும் உருவகமாகப் புழுக்கத்தைக் குறிப்பிடுவது க.நா.சு. கவிதைகளில் இயல்பாக இருக்கிறது. ‘புழுக்கம்’ தமிழகத்தின் தட்ப வெப்ப நிலையைக் குறிப்பதாகவும் மன உளைச்சலைக் குறிப்பதாகவும் அவர் கவிதையில் காணப்படுகிறது. ‘ஏமாளி’ என்ற கவிதையில் ஏமாளி என்ற உருவகத்துடன் புழுக்கம் இணைந்துகொள்கிறது. ‘மின்னல் கீற்று’ என்ற கவிதையில் புழுக்கத்தின் தீர்வு பெரிய பாதிப்பை உலகத்துக்குத் தந்திருக்கும் என்பது போலக் கவிதை கூறுகிறது.

புழுக்கம் தாங்காமல் அன்றைய தினசரியை
விசிறிக் கொண்டு நடந்தேன்.

என்ற கவிதையில் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. தினசரி படிப்பதால் ஒரு பயனும் இல்லை என்று க.நா.சு. சொன்னாராம். அதை எதிர்த்து தினமணியில் டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்தபோது ஒரு சலசலப்பு ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே தினசரியைக் க.நா.சு. கேலி செய்வது இயல்பானதாகக் காண்கிறது. அவர் தினசரிகள், வாராந்திரிகள், மாதாந்திரிகள் எல்லாவற்றையும் இலக்கிய எதிரியாகக் கண்டவர். பிரிட்டிஷ் விமர்சனத்தில் சொல்லப்பட்ட தொடரைத் தமிழாக்கிப் ‘பத்திரிகைக் கதைகள்’ என்று விமர்சனம் செய்தபோது தமிழ் இலக்கிய உலகம் பற்றி எரியத் தொடங்கியதை இன்றைய வாசகர்கள் அறியாவிட்டாலும் பரவாயில்லை, எழுத்தாளர்களேகூட அறியமாட்டார்கள். பத்திரிகைக் கதைகள் மட்டுமல்ல, புதுக்கவிதையிலும் பத்திரிகை புதுக்கவிதைகள் என்று ஒன்று உருவாகியுள்ளது. பெரிய பத்திரிகைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் இலக்கியப் பத்திரிகைகள் மீது இன்று வேல் எய்கிறார்கள்.

க.நா.சு. காட்டும் ஏமாளியைப் பாருங்கள்.

… காதலி

வேறு யாரையோ நாடிப்
போய்விட்டாள் அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.

– அனுபவம்

….இன்றைய ராவணர்கள்
கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விளம்பரம் தேடுகிறார்கள்.
ராமனின் அணையைக் கட்ட
முன்னேற்றம் என்ற பெயரால் அவர்களே உதவுகிறார்கள்.

– இன்னொரு ராவணன்

… ராமனின் வரவை எதிர்
நோக்கிக் காத்திருக்கும் சீதைகளும்
இன்று இல்லை. அவன் இல்லாவிட்டால்
இவன் இருவரும் அரசர்களே என்று
திருப்தியுற்று விடுகிறார்கள்.

– இன்னொரு ராவணன்

அவன்நாய். நான் அவன் இலக்கிய எஜமான்
என்னையே நம்பிக் கொண்டு நான் இலக்கியப்
புகழ் ஏணியை எட்டிவிடுவேன் என்று எதிர்
பார்த்துக் கொண்டு என்னோடு
அவனும் சைவனாக நான்
சாப்பிட்ட சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டு
பதின் மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டான்.

– கூஃபி

நாதன் உள்ளிருப்பதாக எண்ணி
ஏமாந்து விட்டோம்.

– எங்கே? எங்கே?

மேலே காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முதல் எடுத்துக்காட்டில்

….. சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.

என்கிற வரிகளில் காதலியின் துரோகத்தையும் அவருடைய பரிதாப நிலையையும் கவிதை அருமையாக வெளிப்படுத்துகிறது. ‘கூஃபி’ என்ற கவிதையில் கூஃபி என்ற நாய் தன் எஜமானனின் ‘விதியை’ப் பகிர்ந்துகொள்கிறது. மனிதனின் கஷ்ட நஷ்டங்கள் மிருகங்களின் உலகையும் பாதிக்கிறது.

‘கீதோபதேசம்’ என்ற கவிதையில் க.நா.சு.வின் கண்ணன் நம்பிக்கை பற்றி எச்சரிக்கிறான்.

நம்பாதே எதையும்
எதிர்பாக்காதே
எதிர்பார்க்காதவன்
ஏமாற மாட்டான்.

‘எதையும்’ என்ற சொல் முன்னே சென்ற சொல்லுக்கும் பின்னே வந்த சொல்லுக்கும் பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தந்திரமான அமைப்பு. ‘ஏமாளி’ என்ற பெயரிட்டுக் க.நா.சு. எழுதியிருக்கும் ஒரு கவிதை மிக சோகமானது என்று சொல்லத் தோன்றுகிறது.

நன்றாக வரும் நன்றாக வரும் என்று நம்பிக்கை
யுடன் வரிவரியாக வாக்கியம்
வாக்கியமாக பாராபாராவாக அத்தியாயம்
அத்தியாயமாக எழுதிவிட்டு திரும்பிப்
பார்க்கும் போது ஆறு மாசம் குளிக்காமல்
சாப்பிடாமல், ஈஸி சேர் விட்டு
நகராமல் எழுதியதெல்லாம் சே இவ்வளவு
தானா என்று எண்ண வைக்கும் போது
ஏமாளி பட்டம் நமக்கு மிகமிகப்
பொருத்தமானதாக அமைந்து விடுகிறது.

க.நா.சு.வின் ஏமாளியைக் காதலி ஏமாற்றுகிறாள், நண்பர்கள் ஏமாற்றுகிறார்கள், அச்சகத்தார் ஏமாற்றுகிறார்கள், கடவுள் ஏமாற்றுகிறார். இந்த ஏமாற்று வேலை எல்லாம் உயிருக்கு உயிராகப் படைப்பாளி நேசிக்கும் படைப்புக் கலையே அவனை ஏமாற்றுவதற்கு நிகராகாது. நான் ஏமாற்றப்பட்டது போகத் தானும் தனது மனைவியை ஏமாற்றுகிறவனாக நேர்கிறதே என்று க.நா.சு. குமுறுகிறார்.

மனைவியின் ஆசைகளை – வீடு வாங்குவதையும்
பட்டுப் புடவைகளையும், கார் சவாரியையும் கலர்
டி.வி யையும் இந்த வருடம் சாதித்து
விடுகிறேன் என்று சொல்லி வருவதும் ராஜியை
ஏமாற்றுவதுடன் நானும் ஏமாளியாகிப்
போவதும் நடைபெற்று வருகிற காரியமாகத்
தொடர்ந்து வருகிறது. என்ன செய்ய

வீடு, கார், பட்டுப்புடவை, கலர் டி.வி. என்ற நடுத்தர வர்க்கத்துக் கனவுகளைக் கூறும்போது க.நா.சு. கவிதையில் நவீன உலகத்தையும் கொண்டுவருகிறார். இடம்பெறுவது கலர் டி.வி. இந்தச் சொல்லைத் தமிழாக்காமல் பேச்சு வழக்காகவே அவர் தருகிறார். புதுமை என்பது கவிதை புதுமை வெறி கொண்டதாக இருக்கக்கூடாது என்றவர் க.நா.சு. ஏனென்றால் புதுமையும் தளையாகிவிடலாம் என்பது அவர் கருத்து

ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதை ‘காதலி’ க.நா.சு.வின் முதல் கவிதை ‘மணப் பெண்’, இரண்டும் பெண்ணைப் பற்றியதென்றாலும் க.நா.சு.வின் பெண் மணப்பெண்ணாகவே அறிமுகமாகிறாள்.

நாரியர் புடைசூழ
மேக மண்டலத்தில்
மின்னலென நடக்கிறாள்
மாலை வானத்திலே
மின்னும் சுடரெனவே
மணவறை சேருவாள்
அவன் கூடுவான்
அழகுடன்
அழகு பொருந்த

– மணப்பெண் (1939)

மணப்பெண்ணாக மணவறைக்குள் செல்பவளாகப் பெண் காட்டப்படுவது மகிழ்ச்சியான தொடக்கம்தான். க.நா.சு.வும் தன் கவிதையில் சில இடங்களில் தன் மனைவியின் பெயரைச் சுட்டியே கவிதை எழுதியிருக்கிறார்.

நாய், பூனை மற்றும் அவர் எழுதியுள்ள கவிதைகள் மதுரமானவை. ‘சிட்டுக் குருவி’ கவிதையில்

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
என் தலைக்கு மேலே இருக்கும் ஓடாத விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது. கீச் கீச் என்று
கத்துகிறது. அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா
என்று பார்க்கிறது

என்று படிக்கும்போது மனம் மகிழ்ச்சியில் விரிவடைகிறது

கவிதை எழுத உட்கார்ந்த நான்
எனக்கும் அந்த சிட்டுக் குருவிக்கும்
என்ன வித்தியாசம் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

என்று கவிதையை அவர் முடிக்கும்போது நமது மனதில் சற்று மகிழ்ச்சி குறைந்து கனம் கூடுகிறது.

க.நா.சு.வின் கவிதைகளில் அரிய கவிதையாக ‘செயப்படு பொருள்’ என்ற கவிதையைக் கூறலாம். கவிதையே இலக்கணப் பெயர் கொண்டிருக்கிறது. உரிச்சொல், வினைச்சொல் முதலியன இடம்பெறுகின்றன. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணம் ஆதிசேஷன் உலகத்தைத் தோள் மாற்றி வைத்துக்கொள்ள முயன்றதுதான் என்ற ஐதிகத்தைக் குறிப்பிடுகிறார். கவிதையில் மக்களிடையே வழங்கும் ஐதிகங்கள் இடம்பெற வேண்டும் என்பது அவர் விருப்பம்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகள் தமிழில் எளிதாக வழங்கக்கூடிய நடையில் அமைந்தவை. தனது கவிதைகளுக்கே பிரதிநிதியாக மொழிபெயர்ப்புகளைச் செய்வது கவிஞர்களின் வழக்கம். அல்லது தான் விரும்பும் கவிஞரின் உயர்வைத் தன் மொழி வாசகரும் அறிய வேண்டும் என்று செய்வதுண்டு. ஆதி கவி வால்மீகியின் புகழ் தெரியவே தான் இராமாயணத்தைக் கூறியதாகக் கம்பர் சொன்னார்.

வையம் என்னை இகழவும் மாசெனக்கு
எய்தவும் இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகழ
தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே.

ஹல்மே, ஒஸாமுதசாய், ஆலன் கின்ஸ்பெர்க், குந்தர் க்ராஸ், லோர்க்கா, லாரா ரைடிங் முதலியவர்களின் கவிதைகளை அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். படிமம் பற்றி ‘எழுத்து’ பத்திரிகைக்கு முன்பே அவர் சொல்லத் தொடங்கிவிட்டார். பீட் கவிதை மற்றும் லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும் அவர் படிக்கத் தூண்டினார். காஃப்கா, போர்ஹே அவரால்தான் அறியப்பட்டார்கள். க.நா.சு. வெளியிட்ட புதுக்கவிதை அறிக்கையில் இமேஜிஸம், சிம்பாலிஸம் முதலியன இடம்பெற்றுவிட்டன. தத்துவத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் முன்மொழியப்பட்டது.

வாழ்க்கையை எளிதாகக் கொண்டுவிட முடியாது. ஒவ்வொரு நாளும் நெருக்கடிச் சூழலையே வாழ்க்கை கொண்டிருக்கிறது. எனவே துயரம் நிறைந்ததாக இருக்கிறது. மகிழ்ச்சி என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை போல் இருக்கிறது. சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாகவே தனது கவிதை இருக்க வேண்டும் என்று சொன்னனர்.

சுமை தாங்கும் அவ்வளவு பேரும்
தெருவில் எதிர்ப்படுகிற அத்தனைப் பேரும்
கண்களில் அமைதியுடன்
எப்படி நாட்களைக் கழிக்கிறார்கள் நான் மட்டும் ஏன்
கண்ணீரைக் கணக்கிடுகிறேன்
எனக்கே தெரியவில்லை என்ன செய்ய

என்று ‘என்ன செய்ய’ என்ற கவிதையில் க.நா.சு. எழுதினார். தன்னைக் கண்ணீரைக் கணக்கிட்டவராக வருணித்துக்கொண்டார். மனித வாழ்க்கையின் சோகத்தைக் கூறவே அப்படி எழுதினார். கண்ணீர் விட வேண்டிய சுமை தாங்குபவன் கண்ணீர் விடவில்லை. ஏன்? இதனால் அவர் கண்ணில் கண்ணீர் வருகிறது. இது வள்ளுவர் சொன்ன புன்கண்ணீர். அது வரவே செய்யும்.

தமிழில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகச் சிறந்த பல கவிதைகளைத் தந்தவர் க.நா.சு. 1958ல்

மரங்கள் துளிர்க்கும் ஓசை பூக்கள்
பூக்கும் ஓசை புழுக்கள் காலை உணவு
அருந்தும் ஓசை

என்று க.நா.சு.வால் மட்டுமே எழுத முடிந்தது.