என்னுடைய பிள்ளைத் தமிழ்

தெருவில் கால்பந்து விளையாடிய காலத்திலிருந்து என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளும் குழந்தைப் பருவத்துச் சிந்தனைகளும் என் நினைவில் உள்ளன. ஏராளமான ஆண்கள், பெண்களும் பலருடைய பேச்சுகளும்கூட நினைவில் உள்ளன. இந்தப் பேச்சுகளின் அர்த்தத்தை சில காலம் தாழ்ந்தே தெரிந்துகொண்டேன். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நான்காண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்தின் பல கிராமங்களுக்குப் போனதும், பல இடங்களில் பார்த்தவையும் நினைவில் உள்ளன. பல இயற்கைக் காட்சிகள் இன்னும்கூட நினைவில் வந்த வண்ணம் உள்ளன. என் இளமைக் காலம் என்பதை 5ஆம் வயது தொடங்கி 20 வயது முடிய வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

நான் பிறந்து வளர்ந்தது திருஇந்தளூர் என்ற வைஷ்ணவ க்ஷேத்ரம். தெற்கே காவிரி ஆற்றைக் கடந்தால் மயிலாடுதுறை நகரம். என் ஊர்ப் பெயரைக் குழப்பிக்கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் நான் தெளிவுபடுத்த நேரும். மேற்கே சித்தர்க்காடு என்ற கிராமம். வடக்கே நீடுரார் என்ற நாயன்மார் பிறந்த நீடூர் என்ற ஊர். இப்போது இங்கே அதிகம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதற்குமுன் சோழப் பேரரசனின் புகழ்வாய்ந்த குடிகளுள் ஒருவரான பல்லவராயன் பெயரில் விளங்கும் பல்லவராயன்பேட்டை என்ற ஊர். கிழக்கே ஒரு சாலை காவிரி புகும் பட்டினத்துக்கும் மற்றொன்று தரங்கம்பாடிக்கும் இட்டுச் செல்லும். சமயம் மற்றும் வரலாறு வருடம் முழுவதும் பிரகாசிக்கும் ஊர் திருஇந்தளூர். திருஇந்தளூரின் சன்னதித் தெருவில்தான் நான் வாழ்ந்தது. 19ஆம் நம்பர் வீடு. இந்த வீட்டுக்கு இருபது அடி தொலைவில்தான் ஸ்ரீபரிமள ரங்கநாதர் ஆலயம்.

ஆலயம் என் அகவாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆலயம் சார்ந்த மரபுகள், பௌராணிகக் கதைகள், ஆலயத்தின் பருவகால உற்வசங்கள், ஆலயத்தில் பணியாற்றிய பல தரப்பு மனிதர்கள், சட்டப்படி அகற்றப்பட்டிருந்தாலும் நடைமுறையில் நீக்கம் பெறாத தேவதாசிகள், தவில்காரர்கள், கோயிலில் மரியாதைக்குரிய பிரதிவாதி பயங்கரங்கள், ‘உலகம் மித்யை’ என்று நேரம் கிடைத்தால் பேசத் தொடங்கிய அத்வைத வேதாந்திகள், இவர்களுடன் ஊடாடும் கன்னட, மராட்டிய மக்கள், ஊருக்கு வெளியே சாலைகளில் வீடுகட்டி வாழ்பவர்கள், ஹரிஜனங்களின் சிற்றூர்கள். இவை எல்லாம் திரவியங்களாகி என் இளமைப் பருவத்து மனத்தைக் கட்டுமானம் செய்தன. பௌராணிகச் சூழலில் வாழ்ந்ததால் நான் எதையும் நம்பினேன். தகுந்தவர் சொன்னால் போதும், நான் நம்புவேன். பகுத்தறியப்பட்டால் வீணாகிவிடும் அந்தக் கதைகள் ஏராளம்.

என்னுடைய அனுபவக் கதைகள் பல நான் சொல்லி அவை பிறரால் எழுதப்பட்டும், தங்களது போல் பிறர் சொல்லிக்கொண்டும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கதைகள் இன்னமும் வேட்டை ஆடுகின்றன. அவற்றில் ஒன்று…

அப்பா நள்ளிரவில் குழந்தைகளை எழுப்புவார். குழந்தைகளைப் பக்கத்து சந்துக்கு அழைத்துப்போய் சிறுநீர் கழிக்கச் சொல்வார். என் தம்பிக் குழந்தைகள் அப்படி வெளியில் போகும்போது எனக்கு அவசியம் இல்லையென்றாலும் போவது என் வழக்கம். நிலவொளி வீசும் அழகான இரவுகள், நிலவொளி மிக மங்கியோ இல்லாமலோ இருக்கும் இரவுகள் – இவற்றைப் பார்க்கவே நான் போவேன். நிசப்தமான இரவுகள், தவளைகள் கததும் மழை இரவுகள், பலவிதமான இரவுகள்.

ஒரு மழை இரவில் நான் மற்ற தம்பிகளுடன் சந்துக்குப் போகும்போது அப்பாவை ஒரு கேள்வி கேட்டேன். ‘அப்பா ஒரு சப்தம் கேட்கிறதே. அது பூமி சுற்றும் சப்தம்தானே.’ என் அப்பா திகைத்திருக்க வேண்டும். என்னிடம் இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் பூமி சுற்றுவது பற்றியும் அதனால் ஏற்படும் சுழற்சியின் ஒசையும் எனக்கு எப்படித் தெரியவந்தது என்பது எனக்குப் புதிர்தான். அப்பா அந்த சப்தம் தவளைகளின் சப்தம் என்றார். இரவில் தவளைகள் சப்தம் செய்ய ஏன் துணிந்துகொள்ள வேண்டும்?

மறுநாள் வீட்டு முற்றத்தை அடிக்கடி பார்த்தேன். இரவில் ஊர் பாதுகாப்புக்காக அய்யனார் ‘ரோந்து’ வருவார் என்றும் யாராவது எதிரே வந்தால் அடித்துக் கொன்றுவிடுவார் என்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் அய்யனாரைப் பற்றிய பயமும் சந்தேகமும் மனதைப் பிடித்துக்கொள்ளும். ஒருமுறை கோயில் கோபுரத்திலிருந்து ஒரு பொம்மை வீரனின் தலை கீழே விழுந்துவிட்டது. எனக்கு முன்னேதான் விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது. ஆனால் அதை வீட்டுக்குக் கொண்டுவந்து, வீட்டின் எரவாணத்தில் ஒளித்து வைத்திருந்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தத் தலையைப் பார்ப்பேன். அதன் முகத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். 17ஆம் வயதுவரைகூட வைத்திருந்தேன். எப்போது வெளியே போனாலும் மடியில் கட்டிக்கொண்டு போவேன். ஒரு நாள் அப்படிக் கொண்டுபோனவன், காவிரியாற்றில் இறங்கி நடந்தபோது தவறி ஆற்றில் விழுந்து மறைந்துவிட்டது. என் வருத்தத்துக்கு அளவில்லை. சென்ற ஆண்டு மயிலாடுதுறை சென்றபோது காவிரியைப் பார்த்தபோது அந்தப் பொம்மை வீரனின் தலை நினைவுக்கு வந்தது.

ஊரில் பலரும் படித்தவர்கள். வங்கி ஊழியர்கள், தொடக்க, இடைநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கோயிலின் இசை வேளாளர் குடும்பத்தவர்கள்தாம் ஊரை நிறைத்தார்கள். இவர்களில் ஆசிரியர்களே அதிகம். என் தந்தையும் ஆசிரியர்தான். கம்பராமாயண பூஷணம் வரதராஜ அய்யங்கார் என்பவர் பெரிய சொற்பொழிவாளர். இவர் வினோபாபாவே அவர்கள் கேட்டுக்கொண்டபடி அவருக்குக் கம்பராமாயணப் பாடல்கள் படித்துக்காட்டினார். இவர் அவருக்குப் பாடிக்காட்டுவது போன்ற போட்டோ பல பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இவரை போட்மெயில் அய்யங்கார் என்றும் கூப்பிடுவார்கள். இவர் எனக்குக் கம்பராமாயண காண்டம் (பாலகாண்டம்) ஒன்றைக் கொடுத்துப் படித்துப்பார்க்கச் சொன்னார். அதற்கு முன்பே நான் கவிதை எழுதத் தொடங்கிவிட்டேன். அரை ட்ரௌசர் அணிந்த வயதுதான். எனக்குக் கவிதை வரப்பிரசாதமாக அமைந்தது என்பது இவர் கணிப்பு. மேல் சட்டைகூட அணிந்துகொள்ளாமல் பலர் வீட்டுத் திண்ணையில் பாலகனாய் பிரபந்தமும் திருப்பாவையும் நான் பாடியதோடு என் கவிதைகள் எல்லாம் துதிப்பாடல்கள் சிவற்றையும் அய்யங்கார் சொன்னதன் பேரில் நான் பாடியிருக்கிறேன். பாடியதன் பொருள் தெரியாது. நானே எழுதியவற்றுக்கும் பொருள் தெரியாது. எனவே அய்யங்கார் என்னை பாலகவி-வரகவி என்று ஊரில் சொல்லத் தொடங்கினார். நள்ளிரவில் என் தந்தையைக் கதவைத் தட்டி எழுப்பி – அவருக்கு அந்த உரிமை உண்டு – ‘ஓய் உம் பையன் ரங்கன் கவிங்காணும், அவனைத் தமிழ்ப் படிக்க வையும்’ என்றார் இடிக்குரலில். இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர் தன்னிடமிருந்த தமிழ் நூல்கள் சிலவற்றை என்னிடம் தந்தார். கம்பராமாயணம், சூளாமணி நிகண்டு அவர் தந்தார்.

அய்யங்கார் கொடுத்த கம்பராமாயணம் என்னைத் திடுக்கிட வைத்தது. 1954, 55, 56ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் நிறைய படித்திருக்கிறேன். கம்பனுடைய செய்யுள்களைப் படித்ததும் அதில் வெளிப்பட்ட மலர்ச்சி, தோழமை, இனிமை முதலிய பண்புகள் என்னை மயக்குமுறச் செய்தன. இந்தச் சமயத்தில் காளிதாஸனைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். அவரை அறிந்ததின் மூலம் காளி எனக்கு அறிமுகமானாள். பல அம்மன்கள் எனக்குத் தெரியவந்தனர். கவிதை காளியின் அருளால்தான் கிடைக்கும் என்று ஒரு சாமியார் என்னிடம் சொன்னார். அவர் எனக்கு ஒரு மந்திரமும் சொல்லிக்கொடுத்தார். அவரைப் பற்றி ஒரு வினோதம். அவருக்கு வயது என்னவோ 15-16தான். ஆனால் தொப்புள்வரை தொங்கும் தாடி உண்டு. என் வீட்டுக் கோல வாசலில் இவர் நின்றுகொண்டு ‘கவி’ என்று உரத்துக் கூப்பிடுவார். என் பெற்றோர்களுக்கு இவரைப் பிடிக்காது. நான் அவருடன போவேன். இரண்டு மூன்று கிலோ மீட்டர் ஜபித்துக்கொண்டு வயல்வெளிகளில் நடப்பார். பேசமாட்டார்.

ஒருமுறை என்னிடம் சாமியார் கேட்டார்: காளியோ துர்க்கையோ சூலத்தால் எழுதினால்தான் சிறந்த கவிதை வரும் என்று புராணம் சொல்றதே. உமக்குக் காளி எழுதினாளா? நாம் செய்யும் காரியம், நம்மிடத்து நிகழ்வுக்குக் காரணம் நமக்குத் தெரியாமலும் இருக்கும் என்பது நானறிந்த ஒன்று. ஒருவேளை நமக்குத் தெரியாமல் காளி நமக்கு இப்படி அருள் பாலித்திருப்பாளோ என்று தோன்றியது. சாமியாருக்குப் பதில் சொல்லியிருக்க மாட்டேன். பதில் என்ன என்று வலியுறுத்துபவரும் அவரில்லை. ஆனால் சாமியார் சொன்ன நாளிலிருந்து அக்கம்பக்கத்தில் இருக்கும் காளி, துர்க்கையம்மன் கோயில்களுக்குத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் தரங்கம்பாடிக்குப் போகும் சாலைக்குக் கிழக்கே கிடக்கும் கிளிமங்கலம் என்ற சிற்றூரில் இரண்டு வாரங்கள் தங்க நேர்ந்தது. அது சிறிய அக்ரஹாரம். தங்கத் தொடங்கிய முதல் வாரத்தில் ஒருவிதமான மனப்பிரமை ஏற்படத் தொடங்கியது. என் நாக்கு கீறப்பட்டு ரத்தம் கசிவது போன்று பிரமை. கண்ணாடியில் பார்த்துக்கொண்டால் ஒன்றும் இராது. தூக்கத்தில் நிறைய ராட்சதர்கள், அவர்களின் ஆண், பெண், குழந்தைகள் வந்து போவார்கள். 90 வயது மதிக்கத் தகுந்த ஒரு ராட்சதக் கிழவனை அருகில் பார்த்துபோல் இருந்தது. ஜாடி உயரமே உள்ள ராட்சதக் குழந்தைகள் ஓடவும் பறக்கவும் செய்தன. சர்க்கரை டப்பாவுக்குப் பின்னே ஒரு ராட்சதக் குழந்தை தவழ்ந்து கொண்டு கூச்சலிட்டதுபோல் தோன்றியது.

ஒரு பெரிய ராட்சஸி தன் புட்டத்தை அலசும்போது குளத்துத் தண்ணீர் எழும்பித் தெருவில் வந்து என் கணுக்காலை நனைத்தது போல ஒரு பிராந்தி. என் நாக்கின் ஈரம் என்னைப் பயமுறுத்திக்கொண்டிருந்தது. ஒரு நாள் முத்தூர் கிராமத்துப் பள்ளிக்கூடம் போகும் வழியில் வரப்பில் மனம் ஒரு கவிதையை உருவாக்கிக்கொண்டிருந்தது. கவிதையை மனம் முடித்ததும் நான் பட்ட சந்தோஷத்தில் வயலில் விழுந்து உடம்பெல்லாம் சேறாகிவிட்டது. ஒரு சூட்சுமம் புலப்பட்டது. அதுதான் அந்தக் கவிதையை நிறைவு செய்தது. அப்புறம் மனப்பிராந்தி நின்றுவிட்டது. ஊருக்குத் திரும்பிய பின் என்னைப் பார்த்த சிலர், நான் அழகாக இருப்பதாகக் கூறினார்கள்.

எனக்கு ஓவியமும் இளம்பருவத்தில் வந்தது. ஆனால் அதைப் பின்தொடரவில்லை. ஒரு முறை உள்ளூர்ப் பிரமுகர் ஒருவரைப் போல வரைந்து பார்த்தேன். இந்தக் காகிதத்தை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு போன ஒரு பையன் அதை அந்தப் பிரமுகரிடம் காட்டியிருக்கிறான்.

அந்தப் பிரமுகர் தாழங்குடையைப் பிடித்துக்கொண்டு என் வீட்டிக்கு வந்து என் தந்தையிடம் புகார் செய்தார். அவரை நான் கேலி செய்து வரைந்திருக்கிறேனாம். நான் வாயடைத்துப் போனேன். அவர் போன பின் அப்பா ‘மனுஷாளை வரையாதே’ என்றார். கலை கொண்டு வரும் திருத்தங்களை சொந்த அனுபவத்தில் கண்டேன்.

என் பத்தாம் வயது முதல் 20ஆம் வயது முடிய நான் ஒரு மாய உலகில் இருந்திருக்கிறேன். அங்கே எல்லாம் நடந்தது. அதன் கவர்ச்சி சிறிதும் நீங்கிவிடவில்லை.

ஒரு காரணமும் இல்லாமல் என் மனைவி சில நாட்களுக்கு முன்பு ஏழெட்டுக் கழற்சிக் காய்களை வாங்கிவந்தார். அவற்றை நான் கையில் எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் கலங்கின. காலத்தைக் கடக்கும் பிரயாண வேகத்தில் கண்களில் தூசு படிகிறது.