ஆதிமூலத்தின் ஓவியங்களில் வெளிப்பட்ட அழகியல்

‘கசடதபற’ பத்திரிகையை நாங்கள் எல்லாம் சேர்ந்து நடத்திக்கொண்டிருந்தபோது எங்களுக்கு அறிமுகமானார் ஆதிமூலம்.

எனக்கும் ஓவியத்தில் ஈடுபாடிருந்தது. அவரைப் பார்க்கப் போனபோது, மயிலாப்பூரில் குடியிருந்தார். சிலரை அவர் வரைந்திருந்த படங்களைக் காட்டினார். அதில் அவருடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்த பி.எஸ். செட்டியாரின் படமும் இருந்தது.

அப்போது மாதவன் என்பவர் திரைப்படச் சுவரொட்டிகளைக்கூட அருமையாக கலைநயத்துடன் பண்ணிக்கொண்டிருந்தார். கோவில்களில் உள்ள ஒவியங்களில் தமிழகத்திற்கு உரித்தான தன்மையிருக்கும். மேற்கத்திய நவீன ஓவியங்களுக்கு மாறாக உள்நாட்டுத் தன்மையுள்ள ஓவிய மரபுள்ள கலைஞரை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். ஆதிமூலம் அதற்கு மிகவும் பொருத்தமாக இருந்தார். அவர் காண்பித்த ஓவியங்களில் இருந்த பொதுத்தன்மை அதை உறுதிபடுத்தியது.

தமிழ்நாட்டு மரபு அடையாளங்களின் வெளிப்பாடாக அவர் இயங்குவார் என்று எங்களுக்குப் பட்டது. அப்போது வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருந்த வரைபடங்களிலிருந்து மாறுபட்ட தனித்தன்மையுடன் இருந்தன அவருடைய ஓவியங்கள்.

ராமானுஜம் என்கிற சிறப்பான ஓவியரை எங்களிடம் அறிமுகப்படுத்தினார் ஆதிமூலம். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் அவருடைய ஓவியங்களில் வெளிப்பட்ட வண்ணக் கலவையும் நுணுக்கமும் அதை வித்தியாசமாக உணரவைத்தது. பிறகு பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி என்று பல ஓவியர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

‘கசடதபற’வின் இலச்சினை அய்யனார் படம்தான். அவர் அந்தப் படத்தை வரைந்து கொண்டுவந்தபோது எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். லே-அவுட்டும் அவரே செய்தார். எளிமையாகவும் இருப்பார். சில விஷயங்களில் கறாராகவும் இருப்பார். உருவங்கள் சார்ந்த ஓவியங்களை அவர் போட்டுக்கொண்டிருந்தது வரை, எங்களுடன் தொடர்பிருந்தது வரை, எங்களுடைய புத்தகங்களுக்கு முகப்பு ஓவியங்களும் சிறுபத்திரிகைகளுக்குப் படங்களும் எழுத்துக்களும் தந்து, நிறைவான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தார்.

1972ல் என்னுடைய திருமணத்தின்போது க்ரியா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ‘அன்று வேறு கிழமை’ தொகுப்பைக் கொண்டுவந்தபோது, அதற்கு முழுமையாக உழைத்தவர் ஆதிமூலம். ஓவியங்களும் கவிதைகளும் அற்புதமாக இணைந்திருந்தன. நான்கு வரிக் கவிதை ஒரு பக்கத்தில் இருக்கும். ஆதிமூலம் அதற்குப் படம் போட்டிருப்பார் ‘சைக்கிள் கமலம்’ என்கிற என்னுடைய கவிதைக்கு அவர் போட்டிருந்த படம் அற்புதம். சிறந்த புத்தக வெளியீட்டு உதாரணமாக இருந்த அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதிகூட என்னிடம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

க்ரியா பதிப்பகம் தொடர்ந்து ஆதிமூலத்தின் ஓவியங்களை, முகப்போவியங்களாகப் பயன்படுத்தியது. அதன் பிறகு 1982ல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது. அரசு சார்பில் விழா நடந்தது. கருத்தரங்குகள் நடந்தன. ‘பாரதியின் புதுக்கவிதை’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தேன். அதற்காக பாரதியின் படத்தை ஆதிமூலத்திடம் வரைந்து தரச் சொன்னபோது கம்புடன் பாரதி உட்கார்ந்திருக்கும் ஓவியத்தை வரைந்து தந்தார். ஆர்யாவின் பாரதி படத்திற்குப் பிறகு புதிதான பாரதி முகத்தை உலவ விட்டவர் ஆதிமூலம். கம்பீரமாக அமைந்த அந்தப் படம் பிரபலமாகிவிட்டது. அதற்கெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் தூண்டுதலாக நான் இருந்திருப்பது மனநிறைவை அளிக்கிறது. கேலி உத்தி அவருக்கு நன்றாக வரும் என்றாலும், அதைத் தொடர்ந்து ஓவியங்களில் பயன்படுத்தவில்லை.

சோழநாட்டுக் கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துச் சாயலை அதிமூலம் புதுப்பித்தார். அது இப்போது பிரபலமாகித் திரைப்படப் பெயர்கள் எழுதுவது வரை பெரும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. கசடதபற, நடை, விருட்சம், காலச்சுவடு வரை பல்வேறு பத்திரிகைகளின் எழுத்துக்களை உருவாக்கியது அவர்தான்.

காந்தியை யோகி மாதிரி அவர் பாத்திருப்பது அவர் வரைந்திருந்த ஓவியங்களில் தெரியும். புத்தர் உண்ணாவிரதத்தின்போது இருக்கும் தோற்றத்தை நினைவுப்படுத்துகிற விதத்தில் இருந்தன அந்த ஓவியங்கள். அவர் ஓவியம் வரைந்திருக்கிற பக்கத்தில் கவிதைகளை வெளியிடுவது கஷ்டம். அவர் ஓவியத்தில் காட்டியிருக்கிற வெளிப்பாட்டிற்கு இணையான கவிதையாக அது இருக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் ஆதிமூலத்தின் ஓவியங்கள்தான முதலில் கண்ணில் படும். கவிதையைவிட அவருடைய ஓவியங்கள் நன்றாக இருக்கின்றன என்று தோன்றலாம். எப்படியொரு போட்டி!

அம்மாதிரியான காந்தியின் படத்தை ‘ஹேராம்’ படத்தின்போது கமல் பயன்படுத்த நினைத்தார். உருவங்களிலிருந்து உருவமற்ற ஓவியங்களுக்கு ஆதிமூலம் பயணம் மேற்கொண்டது ஒரு சோதனை முயற்சிதான். கவிதையிலிருந்து உள்ளடக்கத்தை எடுத்துவிட்டால் வெறும் இலக்கணமே மிஞ்சும். அம்மாதிரியான நிலைக்கு அவர் ஆட்பட்டார்.

அப்போது அவருடைய வீட்டிற்குப் போய் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் வரைந்திருந்த ஓவியங்கள் நிறைய வர்ணங்களைத் தீற்றிய மாதிரி இருந்தாலும் குறிப்பிட்ட ஒழுங்கிற்குள் இருந்தன. அதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை. அந்தளவுக்கு சொல்லைக் கடந்த எல்லைக்கு ஓவியத்தை அவர் கொண்டு போய்விட்டார். சர்வதேசத் தன்மை என்று சொல்லப்பட்டாலும் படத்தை வரைந்த ஓவியருக்கென்று ஒரு நாட்டின் அடையாளம் இருப்பதைப் போல, ஓவியத்திற்கும் அந்த அடையாளம் வேண்டும் இல்லையா? இது ஒரு அடிப்படையான கேள்வி.

என்னுடைய இலக்கியம் சர்வதேசத் தன்மை உடையதாக இருக்கலாம். ஒரு ஆசிரியன் என்கிற முறையில் என்னுடைய தேசத்தைப் பற்றித்தானே நான் எழுத முடியும். என்னுடைய நாடு அதில் தெரிய வேண்டும் இல்லையா? நாடு கடந்து போனால் வெறும் நீலமயமான ஆகாயமும் கடலும்தான். இயற்கைதான். அந்தவிதமான இயற்கை எந்த அளவுக்கு நவீன ஓவியங்களில் பதிவாகியிருக்கிறது? இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு புறமிருந்தாலும் அந்தப் பாதையில் பயணம் போய் அதில் ஒருவிதமான வசீகரத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தார். நமக்கும் உருவமற்ற ஓவியங்களைப் பார்க்கிற அனுபவத்தை அவரால் கொடுக்க முடிந்தது. அது அவருக்குக் கிடைத்த வெற்றி.

‘அன்பே சிவம்’ படம் தொடர்பாக ஆதிமூலம் வீட்டிற்குப் பேசப் போயிருந்தேன். “படக் கதாநாயகனான கமல், ஓவியர் எம்.எப். ஹுசைன், இவர்களுடன் நீங்களும் சேர்ந்து ஒரு காட்சியில் இடம்பெற வேண்டும்” என்று நான் கேட்டேன். கமலும் அதில் மிக விருப்பத்துடன் இருந்தார். அவரிடம் ஹுசைனின் அருமையான கோட்டோவியம் ஒன்று இருக்கிறது. கமலே படமும் வரைவார். அதனால் அதில் ஒரு காட்சியில் இடம்பெற அழைத்தபோது, “சினிமா எனக்கு வேண்டாமே” என்று அன்புடன் மறுத்துவிட்டார். தன்னுடைய முகத்தை வெளிக்காட்டிக்கொள்வதில் அவருக்குத் தயக்கமிருந்தது.

நோயின் தாக்கம் அப்போதே அவரைத் தாக்கியிருப்பது எனக்குத் தெரியாது. அவருடைய மரணம், என்னை இடிந்துபோக வைத்துவிட்டது.

தமிழ் மண்ணின் ஓவியங்களில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஆதிமூலம். அவருடைய ஓவியங்களில் வெளிப்பட்ட அழகியலை வேறு எந்த ஓவியர்களிடமும் நான் பார்க்கவில்லை. எவ்வளவோ சமூகக் கோபங்கள் அவருக்கு இருந்தாலும் – வெகு சிலவற்றைத் தவிர – அதிகமாக ஓவியங்களில் அந்தக் கோபத்தைக் காட்டவில்லை. அதெல்லாம் அவர் வெளிப்பபடுத்தியிருந்தால்கூட நன்றாக இருந்திருக்கும். நவீன இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு மகத்தானது. என்னுடைய நூல்கள் பலவற்றிற்கு அவரே முகப்போவியங்கள் போட்டிருந்தார்.

அவருடைய இறுதிக் காலத்தில் அவரைத் தொடர்பு கொள்ளாவிட்டாலும், அவர் இயங்கியபடி இருக்கிறார் என்கிற மனநிறைவு இருந்துகொண்டிருந்தது. அந்த மனநிலையைச் சிதைத்திருக்கிறது ஆதிமூலத்தின் மரணம்.

(‘ஆதிமூலம் – அழியாக் கோடுகள்’ புத்தகத்தில் வெளியானது)