லாறி

எங்களூர்ப் புழுதித் தெருமேல்
அடிக்கடி ஓடும் லாறிக்கு
நைனாச்சாரியார் என்று பெயர் வைத்தார்கள் –
இரண்டிடத்திலும் புட்டம் அகலமாய்த் தெரிந்ததால் –

புறம்போக்கு மண்ணில் புகைந்த சூளையின்
செங்கல்லை வாரித் தொலைவில் விற்று விற்றுக்
குதிரை வண்டி குப்பு முதலியைக்
குபேரனாக்கிய பெருமை அதற்குண்டு

கல்வி கேள்விப் புலமையில் சிறந்தவராக
லாறியாரைப் பலபேர் மதித்தார்கள்
லாறியாரின்
அங்கம் முழுதும் ஆங்கிலம் பொலிந்தது

கொஞ்ச நாட்களாய் லாறியார்க்குக்
கெட்டப் பேரொன்று சேரத் தொடங்கிற்று
லாறி வழங்கிய பெட்றோலிய மூச்சில்
நாளும் பிழைத்த அவர்களே சொன்னார்கள்

செட்டித் தெருவில் விற்பதற்கான புல்லுக்
கட்டை ஊர்க்கோடி அல்லிக் குளத்தில்
புலைச்சிகள் இறக்கி அலசும் போது
அவர்களில் ஒருத்தி
உள்ளாடை யில்லாமல் பாவாடை அணிந்தவள் –
செல்லக் கொடியை முன் சக்கரத்தால்
தாழைப் புதர்ப்பக்கம் ஏற்றிக் கொண்டு போய்க்
கத்த விடாமல் பலர் முன்னிலையில்…

மார்கழிப் பனிபோல் மறதி படர்கிறது
புலைச்சிகள் வெள்ளிச் சிரிப்பை நீரில் தெளித்துப்
புல்லுக் கட்டை முன்போல் அலசுகிறார்கள் –
அவர்கள்
தொடையின் பிம்பம் புரளும் அலைகள்
அப்பால் படுத்த எருமையின் முதுகை மூழ்கடிக்க.

அல்லிக் குளத்தின் தவளைகள்கூட
மறந்துவிட்டன செல்லத்தின் இளங்கால் வரவுகள்

லாறிக்குப் பாட்டரி புதிதாய்ச் சேர்ந்தது
ஆயுத பூஜையின் சந்தன குங்கும
வாழை மரங்களின் அலங்காரம் கொண்டு
சிறுவர்கள் துரத்த ஓடுகிறது லாறி

அல்லிக்குளத்தில் வீச்சம் என்றாவது
எழும்போது நான்தான் நினைக்கிறேன்
செல்லக் கொடியை. அதென்ன வீச்சம்?

ஆனால் நானும் சும்மா இருக்கிறேன்
அன்னிய மொழியில் லாறியின்
இடைவிடாத அதட்டலை அஞ்சி.

1984