ம்

எங்கே இருக்கிறான் அந்த மக்குப் பையன்?
ஆற்றுப் படுகையில் அலைந்தவன்
குளத்தின் கரையில் திகைத்தவன்.

அவனுக்கு வாக்கியம் எதனால் நான்கைந்து
வார்த்தைகள் கொண்டதாய்த் தாளில் இருந்தது?

வான வில்லின் இடங்கை மாமரத்
தோப்பில் இறங்கிய இந்நேரம்
கோரைப் புற்கள் குளத்தில் கூந்தலை
அலசத் தொடங்கும் இந்நேரம்
எங்கே இருக்கிறான் அந்த மக்குப் பையன்?

இரண்டு பக்கமும் புளியன்கள் முட்டி
மழை நீர் தேங்கிய வண்டிச் சுவடுகள்
மருண்டு காட்டும் பக்கத்து ஊரிலா?

எங்கே போனான் அந்த மக்குப் பையன்?
நெருஞ்சிப் பூக்களைப் பனியின் பட்டாடையில்
தைத்துப் பழகும் அந்நிய ஊருக்கா?

எவர் கேட்கப் போகிறார்கள் ஊரின் குளத்தில்
என்ன என்ன கரைந்த தென்று?
வர்ணம் ஏழு தனக்குள் புகுந்தாலும்
பாசிப் பச்சையில் இறுகப் போவது குளம்.

என்ன ஆனான் அந்த மக்குப் பையன்?

குளத்தில் குதித்து வெளிப்படும் மீன்கொத்தி
மூக்கில் எடுத்துப் போவது
ஆழத்தில் என்னைத் தீண்டிய மீனையா?
எங்கே போனான் அந்த மக்குப் பையன்
சேலை சொட்டிய நீர்ச்சுவடு போல
நினைவுகள் என்னைத் தொடர.

1989