மழையில் ஒரு சோம்பல் நடையில்…

ஆடுகள் ஓடின ஒதுக்கிடம் நீங்கி –

விரிந்த குடையும் விரியாக் குடையுமாய்
எங்கும் மனிதர்கள் தென்பட்டார்கள்.

செம்பருத்திப் பூக்களின் திடுக்கிடச் செய்யும்
செவ்விதழ்த் துண்டுகள் நீரில் மிதந்தன.

கூண்டமைக் காத மாட்டு வண்டியில்
கிராமத்து நோயாளிகள் பயணம் செய்தனர்

உள்ளுர்த் தோட்டியின் மூத்த புதல்வி
மேடிட்ட வயிற்றுப் பாரம் பொறாமல்

வியர்த்து மூச்செறிந்து தெருவில் தளர்கிறாள்
கொட்டத் தொடங்கிற்று மீண்டும் வானம்.

விஷம வேகத்து மழைப் பெரு நீரில்
இழுப்புறும் செவ்விதழ்ப் பூக்களை அஞ்சினேன்

என்பதனாலோ என்னவோ
சென்றவை கவிழ்ந்த காகிதக் கப்பல்கள்

1988