மர்மச் சிதைவாளன்

காயிதே மில்லத் சாலையில் அந்தப்
பைத்தியக்காரி தலையில் ஏதோ
கூடை சுமக்கும் பாவனை யோடு
விதிகளை மீறிச் சாலையில் போகிறாள்.

இரயில் நிலையத்துக்கு விரையும் எனது
ஆட்டோவின் நெற்றிக்
கண்ணாடி வழியே புளியன் விதைபோல்
புடைத்த அவள் சிறு தொப்புள் தெரிய

எத்தனை ஆண்டுகள் இடையில் சென்றன
அவளை எனக்குத் தெரியத் தொடங்கி.

தெருவில் இன்னமும் காணப் படுகிறாள்
தலையில் இல்லாத கூடை சுமக்கும்
அதே பாவனையில் குறித்த நேரத்தில்.

மண்ணால் ஆன பழங்காலத்துப்
புதை பொருள் பொம்மை போன்ற அவள் உடம்பில்
அவளொரு பைத்தியம் என்பதை மறந்து
உருட்டி உருட்டி இயற்கை…

தனக்கு மட்டும் தெரிந்த ஹாஸ்யப்
புத்தகத்தில் ஏதோ துணுக்கைப் படித்துச்
சிரித்துக் கொண்டு தெருவில் நடக்கிறாள்

அடிக்கடி அவளைப் பார்க்கிறேன்
நல்ல வேளை பைத்தியக் காரி
பார்க்கப் படுவதைத் தானறியாதவள்
எனக்கு முன்னே நடந்து போகிறாள்

வியர்வை வழிந்து முதுகின் புழுதியில்
யாரோ ஒருவர் பெயரை வரையத்
திக்கென்றது எனக்கு
ஏறக்குறைய என்பெயர் என்று.

1989