பெயரும் தொழிலாளிகள்

சுவரில் அங்கங்கே சின்னங்கள்
செங்கல் வைத்துச் சமைத்ததற்கு
சுற்றிலும் கிடந்தது
பிரிக்கப்பட்ட கூரையின் குப்பை.

ஏணை தொங்காத அசோக மரத்தின்
தாழ்ந்த கிளையில் அணில்கள் இறங்கி
ஏமாற்றத்தோடு திரும்பின.

நான்கைந்து மாதமே இருந்து
மறைந்துபோன ஒற்றைக்
குடிசைத் தெருவில் அவர்கள்
விட்டுச் சென்ற பூனை
இன்னும் அங்கே திரிகிறது
நாய்போல் அதற்கு மோப்பம்
கொடுக்கவில்லை கடவுள்.
சென்றுவிட்டார்கள் அவர்கள்
கட்டடத் தொழிலாளிகள்.
பெரிய வீடு முடிக்கப்பட்டது.

அவர்களில் பலரை நினைக்கிறேன்
என்னையும் அவர்கள் அறிவார்கள்
ஒருவன் என்னை நேரம் கேட்டிருக்கிறான்
ஒருவன் என்னைத் தேதி கேட்டிருக்கிறான்
ஒருவன் என்னிடம் கணக்குச் சொல்லித்
தொகையைச் சரிபார்த்துக் கொண்டதுண்டு.
அவர்களில் ஒருத்தி
குழம்போ ஊறுகாயோ எங்கள்
வீட்டில் கேட்டுப் பெற்றதுண்டு.

சென்றுவிட்டார்கள் அவர்கள்
சொல்லிக் கொள்ளாமல் என்னிடம்
எண்ணிப் பார்த்தேன் அவர்கள்
இன்னொரிடத்தில் இதுபோல புதிதாய்க்
கட்டடம் எழுப்பும் இடத்தில்
இருப்பார்கள். வளாகச் சுவரை
ஒட்டிக் குடிசை அமைத்து
செங்கல் அடுப்பில் சமையல்புகை
வளாகச் சுவரில் சின்னம் பொறிக்க.

1991