பாண்டூர் மாமியின் தமிழ்ப்பற்று

பாண்டூர் மாமி வருகிறாள் தெருவில்.
நோக்கில் கவலை. நடையில் அமைதி.
மாமிக்குப் பிள்ளையும் பெண்ணுமாய் ஆறு பேர்கள்
மூவர் என்னைக் காட்டிலும் மூத்தவர்.

எனக்குத் தெரியும் போதே பாண்டூர் மாமி
முட்டாக்கிட்ட விதவை. உடம்பைப் போர்த்திய
வெள்ளைப் புடவையும் வெள்ளை உடம்புமாய்
நடக்கும் வலம்புரிச் சங்கு போல் இருப்பாள்.

தனது பிள்ளையில் ஒருவனாய் என்னைத்
தவறாகக் கருதித் திருக்குளத் தருகில்
திட்டிய நாளிலிருந்து பாண்டூர் மாமியை
எனக்குத் தெரிய வந்தது தற்செயலாக

தனது பிள்ளைகள் யாரோடும் எனக்கு
நட்பு வேண்டாமென்று பாண்டூர்
மாமி என்னை எச்சரித்தது ஏனென்று
தெரிந்து கொள்ளப் பலநாளாயிற்று.

இந்தியப் படையில் அற்பமாய் என்னவோ
பணியாற்றிய பெரியவன் ஊருக்கு
விடுப்பில் வருபவன். வாரண்டு வரும்வரை
வேலைக்குத் திரும்பாமல் ஊழலில் களிப்பான்

இரண்டாம் புதல்வன் சுந்தரம் டாக்கீசில்
குலேபகா வலிக்கு சீட்டுத் தருபவன்
அதற்கடுத்தவன் மற்றொரு தியேட்டரில்.
நான்கும் ஐந்தும் பின்பு பேசலாம்.

இரண்டு பெண்கள். எட்டாம் வகுப்பில்
பத்தாம் வகுப்பில். புறாவும் குயிலும்.
பெரியவள் சென்னைக்குப் போனாள். சிறியவள்
கொல்லைப் புளியில் பிஞ்சை உதிர்த்தாள்.

வெளியூர் ஒன்றில் மாமிக்குக் கொஞ்சம்
நன்செய் நிலமும் தோப்பும் இருந்தது.
போக்கு வரத்துக் கழகப் பேருந்து
புகாத காலம். நடந்துதான் போகணும்

எவர் போவார்கள் நிலத்தைப் பார்க்க?
தன்னைக் காணாரை நிலம்காண் பதில்லை.
பண்ணையாள் சட்டம் வரும்முன் பாகவே
மொண்ணையாய் நெல்லை அளந்து விட்டார்கள்.

ஒரு நாள் என்னிடம் எங்கள் அம்மா
பணத்தைக் கொடுத்துப் பாண்டூர் மாமியிடம்
அரிசி வாங்கிவா என்றதும் அயர்ந்தேன்.
பாண்டூர் மாமி அரிசி விற்கிறாளா?

என்னைப் பார்த்தாள் மாமி. குழந்தே
விற்பதற் கரிசி என்னிடம் இல்லை
நிலத்தைக் கழுவி வருஷமாயிற்று.
குடியானவன் விழுங்கினான் என்றாள்.

நான்காம் பிள்ளையும் ஐந்தாம் பிள்ளையும்
கல்வியில் கவனம் தவறத் தொடங்கினார்கள்.
கிருஷ்ணமாச்சாரியும் தவசி முத்துவும்
என்னிடம் ஒருநாள் கிசுகிசுத்தார்கள்.

சர்க்கரை என்கிற சக்கரபாணியும்
நட்டெனப் பட்ட சாம்ப சிவனும்
நவராத்திரி முடிந்தபின் பள்ளிக்குள்ளே
காணப் படாமல் போனதை அறிந்தேன்.
சக்கரபாணி திருப்பதி போய்விட்டான்
கோயில் ஒழுங்கைக் கற்றுக் கொள்ள
துர்க்கை அம்மன் கோவில் விளக்கை
ஏற்றத் தொடங்கினான் சாம்ப சிவனும்.

பள்ளிக்கு நாள்தோறும் தாமதமாகும்
கிருஷ்ண மாச்சாரிக்கும் ஆட்டம் கண்டது.
அப்பா சொல்படி சாம வேதம்
கற்கப் போவதாய் அவனும் நின்றான்.

இன்னும் சிலபேர் கல்வியை விட்டனர்
தந்தைக்குத் துணையாய்க் குப்பு சாமி
கத்திரிக் கோலைப் பிடித்துக் கொண்டான்
சுந்தரம் சுண்டல் சுந்தரமானான்.

மடவளாகத்தைச் சுற்றித் திரும்பிய
அன்று நான் பாண்டூர் மாமியின் வீட்டைக்
கடக்கையில் விசிறி மட்டையால் மாமி
நான்காமவனை அடித்துக்கொண்டிருந்தாள்.

பாடத்தை எழுதாமல் கணக்கைப் போடாமல்
ஆற்றில் சிலருடன் மீன் அள்ளினானாம்
என்னைப் பார்த்தவன் எருக்கம் மொட்டுபோல்
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டான்
குறுக்கிடும் தைரியம் சிலருக்குத்தான் வரும்.
எனக்குக் கிடையாது. எனது கவனம்
வேறு திசையில் ஈர்க்கப் பட்டது
மாட்டு வண்டியில் கூட்டத்து அறிவிப்பு:
நமது நகராட்சி வரதராஜர் பூங்காவில்
இன்று மாலை கழகக் கூட்டம்
பேசுவோர் செழியன் குட்டுவன் பாண்டியன்.
அனைவரும் வருக அனைவரும் வருக.

மாட்டு வண்டிக்குள் கீச்சுக் குரலில்
அறிவிப்புச் செய்தது ஆறாவமுதன்
மளிகைக் கடையையும் விட்டு விட்டானா?
அண்ணன் பழனி தடுக்க வில்லையா?

மாலைக் கூட்டத்தின் விவரங்கள் எல்லாம்
சுவரிலும் எழுதப்பட்டிருந்தது.
இன்னமும் பெரிதாய் கோயில் சுவரில்
குங்குமம் இட்ட கறுப்புக் கொடியுடன்.

வீடு திரும்பினேன் நேரம் இருந்தது.
நண்பர்களை எண்ணி நெஞ்சம் கனத்தது.
பள்ளிப் படிப்புகள் ஏன் கைக்கின்றன
ஏனவர் கைகள் எழுத மறுத்தன?

திண்ணையில் அப்படித் திகைத்திருந்தேன்
தெருவில் வருகிறாள் பாண்டூர் மாமி
வலம்புரிச் சங்கு வாய்க்கால் சங்காகச்
சிறுத்தது போலத் தோற்றம் தகைந்து.
என்னைப் பார்த்தாள். மாமியின் மடியில்
என்னமோ கனமாய். கைகளும் அதன் மேல்.
நெருங்க நெருங்க மாமியின் கண்களில்
வருணன் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அருகில் வந்தாள். நின்றாள். பார்த்தாள்.
மடியை விட்டொரு பழம் புத்தகத்தை
சிரமப் படுவதுபோல வெளியில் எடுத்தாள்.
இந்தா பிடி படி ராமாயணம். கம்ப…

அடக்கத்தோடு கைகளை நீட்டினேன்.
இராமர் இறங்கினார் வானரரோடு
இதைப் போல் ஆறு புத்தகங்கள்…
இதுதான் மீந்தது. சும்மா தாண்டா…

வேறொன்றும் சொல்லாமல் பாண்டூர் மாமி
திருக்குளம் போனாள். வீட்டுக்குள் போனேன்
சேந்தன் குடிக்குப் புறப்படும் அப்பாவின்
எதிரில் சென்றேன். சொன்னேன்.
பள்ளிக் கூடம் நாளைக்குப் போகிறேன்.

1989